15 தள்ளுவண்டிகளுடன் தொடங்கிய அருண் ஐஸ்கிரீம்: ரூ.18,000 கோடி சாம்ராஜ்யமாக மாறியது எப்படி?

15 தள்ளுவண்டிகளுடன் தொடங்கிய அருண் ஐஸ்கிரீம்: ரூ.18,000 கோடி சாம்ராஜ்யமாக மாறியது எப்படி?
Updated on
2 min read

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தஆர்.ஜி. சந்திர மோகன், 1970-ம்ஆண்டு கையில் ரூ.13,000பணத்துடனும் மனதில் தன்னம்பிக்கையுடனும் சென்னை வந்தார். மூன்று ஊழியர்களுடனும் 15 தள்ளுவண்டிகளுடனும் ராயபுரத்தில் ஐஸ்கிரீம் வியாபாரத்தை ஆரம்பித்தார். இன்று அது அருண் ஐஸ்கிரீம், ஆரோக்கியா, ஹட்சன், ஐபாக்கோ என்று சந்தையைக் கலக்கிக்கொண்டிருக்கும் பிராண்டுகளுடன் ரூ.18,000 கோடி சந்தை மதிப்பைக் கொண்ட பெரு நிறுவனமாக மாறி இருக்கிறது.

தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்பனையை ஆரம்பித்த சந்திரமோகன் அதை எப்படி பெரும்சாம் ராஜ்யமாக மாற்றினார் என்பதை விரிவாக முன்வைக்கிறது ‘Broke to Breakthrough: The Rise of India's Largest Private Dairy Company’ என்ற நூல். பத்திரிகையாளர் ஹரிஷ் தாமோதரன் எழுதிய இந்தப் புத்தகம் 2022-ம் ஆண்டுக்கான ‘கஜா கேபிடல் பிசினஸ் புக்’ பரிசை வென்றது.

ஆரம்பத்தில் அருண் ஐஸ்கிரீம் என்றபெயரில் தள்ளுவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வியாபாரம் எதிர்பார்த்த வகையில்இல்லை. சில்லறை கடைகள் மூலமாக விற்கலாம் என்றால் ஐஸ்கிரீமை உறைநிலையில் பாதுகாக்க குளிர்சாதன வசதி இல்லாததால், சில்லறை கடைகள் அருண் ஐஸ்கீரிமை வாங்கதயக்கம் காட்டின. இதனால், வியாபாரம் சுணக்கத்தில் சென்றது.

இந்தச் சூழலில், சென்னை, பிராட்வேயில் இருந்த அம்பிஸ் கஃபே, அருண் ஐஸ்கிரீமை விற்க முன்வந்தது. ஆனால்,உணவு விடுதிகளில் இல்லாமல் தாங்கள் எடுக்கும் கேட்டரிங் ஆர்டர்கள் வழியாக அருண் ஐஸ்கிரீமை வாங்குவதற்கு ஒத்துக்கொண்டது. இது சந்திரமோகனுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது.

சந்திரமோகன் தொலைநோக்குச் சிந்தனையாளர். ஐஸ்கிரீமை கடைகளுக்கு சப்ளை செய்வது தவிர்த்து, வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் ஐஸ்கிரீம் பார்லர்களை திறந்தார். இந்த முயற்சி சென்னைக்கு அப்போது புதியது. போட்டி நிறுவனங்கள் வெண்ணிலா, ஸ்ட்ராபெரி என்ற இரண்டு வகைகளை மட்டுமே சந்தையில் விற்றுக்கொண்டிருந்த சமயத்தில், சந்திரமோகன் கசாட்டா, கோக்கோ க்ரன்ச், இத்தாலியன் டிலைட் போன்ற புதிய வகைகளை அறிமுகப்படுத்தினார். இதனால், அருண் ஐஸ்கிரீமுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒரு தயாரிப்பை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்பதில் சந்திரமோகன் வல்லவர். இருசக்கர வாகனங்களை வைத்து ‘ஸ்லோ ரேஸ்’, ‘ஈட் ஆல் யூ கேன்ஐஸ்கிரீம்’ போன்ற பிரச்சாரங்கள்மூலம் அருண் ஐஸ்கிரீமை தமிழகமெங்கும் சந்தைப்படுத்தினார். நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் அருண் ஐஸ்கிரீமுக்கான விளம்பரதூதர். அப்போது அவருக்கு வயது 16.

ஐஸ்கிரீம் வியாபாரம் ஏறுமுகத்தில் சென்ற நிலையில், 1986-ம் ஆண்டு ஹட்சன் நிறுவனத்தை சந்திரமோகன் தொடங்கினார். நம்பிக்கைக்குரிய இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிரான்சைஸ் உரிமைகளை வழங்கினார். இதன் மூலம் அருண்ஐஸ்கிரீம் தமிழகத்தின் மூலை முடுக்குகளைச் சென்றடைந்தது.

1990-களில், ஆவின் நிறுவனம் சமன்படுத்திய பாலை லிட்டர் ரூ.8 என்ற விலையில் விற்றது. இந்தச் சமயத்தில் ஹட்சன் நிறுவனம் ‘ஆரோக்யா’ பிராண்டின் கீழ் 4.5% கொழுப்பு கொண்ட பாலை லிட்டர் ரூ.9-க்கு அறிமுகப்படுத்தியது. 1995-ல்துவங்கப்பட்ட ஆரோக்கியாவின் விற்பனைஅடுத்த பத்தாண்டுகளில் 2 லட்சம் லிட்டர்விற்பனையை தாண்டியது.

குஜராத் மாநிலத்தில் பால் உற்பத்தியில் பெரும் புரட்சியை உருவாக்கிய அமுல் நிறுவனம் கையாண்ட பால் சேகரிப்பு முறைகள் ஹட்சனிலும் பின்பற்றப்பட்டன. அத்துடன் கால்நடை தீவனங்கள் ஹட்சன் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலைகளில் தயாரிக்கப்பட்டன.

ஆரோக்யா பிராண்டை சந்தையில் சரியான முறையில் சந்திரமோகன் பொசிஷனிங் செய்தார். ஆரோக்கியா பாலை சாதாரண பால் என விற்காமல் 4.5% கொழுப்புள்ள பால் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால், அதன் மீது தனிக் கவனம் ஏற்பட்டது. ‘சித்தி’ என்ற தொலைக்காட்சி தொடர் வரவேற்பை பெற்றிருந்த நேரம். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடித்திருந்த நடிகை ராதிகா மூலம் ஆரோக்கிய பால் விளம்பரங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் பால்பொருள்களின் அடையாளமாக ஹட்சன்மாறியது. 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் பிராண்டான ஐபாக்கோ சந்தையில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

2001-ம் ஆண்டில் ரூ.100கோடியாக இருந்த விற்பனை அடுத்த 10 ஆண்டுகளில்ரூ.1,000 கோடியைத் தொட்டது. தற்போது அது ரூ.5,000 கோடியைக் கடந்துள்ளது.

சந்திரமோகன் தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது என்றும் சொல்ல முடியாது.உதாரணமாக ‘ரஸ்னா’ போல ஒரு மென்பானத்தை தயாரிக்கலாம் என நினைத்து ‘சந்தோசா’ என்ற உடனடி மில்க் ஷேக் பவுடரைஅறிமுகப்படுத்தினார். ஆனால் இது சந்தையில் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

அதேபோல், 1998-ல் ‘அபூர்வா’ என்ற பிராண்டின் கீழ் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு வகைகளை பாக்கெட்களில் அடைத்து விற்கும் முயற்சியை மேற்கொண்டார். அதுவெற்றி பெறவில்லை. ஒரு தயாரிப்பு சரியாகசெல்லவில்லை என்பதை உணர்ந்ததும், அதை ஆரம்ப நிலையிலேயேநிறுத்திவிடுபவர். இதனால், நஷ்டம் ஏற்படுவதைத் தடுத்தார்.

சந்திரமோகன் மக்களின் ரசனையை அறிந்து செயல்பட்டார் என்பதை விடவும்,மக்களுக்கென்று ஒரு மேம்பட்ட ரசனையைதன் தயாரிப்புகளின் வழியேஉருவாக்கினார் என்று சொல்லலாம். அதுவே அவரது வெற்றிக்கான அடித்தளம்.

- சுப. மீனாட்சி சுந்தரம் | somasmen@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in