புதிய வருமான வரித் திட்டத்தை தேர்வு செய்பவர்கள் ஆயுள் காப்பீட்டை என்ன செய்யலாம்?

புதிய வருமான வரித் திட்டத்தை தேர்வு செய்பவர்கள் ஆயுள் காப்பீட்டை என்ன செய்யலாம்?
Updated on
2 min read

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தார். வருமான வரி நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை அவர் கொண்டுவந்தார். வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வருமான வரி முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம் பழைய திட்டத்தின் கீழ், வரி செலுத்துவோர் வருமான வரி சட்டத்தின் விதிகளின்படி வெவ்வேறு சேமிப்புகள், செலவுகள் மற்றும்கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் விலக்குகளை பெறமுடியும்.

புதிய திட்டத்தில் அத்தகைய விலக்குகள் இல்லை. வரி செலுத்துவோர் தங்களது வசதிக்கேற்ப பழைய திட்டத்தையோ அல்லது புதிய திட்டத்தையோ தேர்வு செய்யலாம்.

இதுவரையில் பலர் வருமான வரி விலக்கு பெறுவதற்காக நிறைய சேமிப்புத் திட்டங்களை மேற்கொண்டு வந்தனர். பழைய வரிமுறையில்தான் இந்த சேமிப்புத் திட்டங்கள் மூலம் வரி விலக்கு பெற முடியும். புதிய வரி திட்டத்தில் இந்தத் சேமிப்புத் திட்டங்களால் எந்தப் பலனும் இல்லை.

இப்போது கேள்வி என்னவென்றால், புதிய வரி திட்டத்துக்கு மாறும் நபர்கள், தாங்கள் இதுவரை செய்துவந்த சேமிப்புத் திட்டத்தை என்ன செய்வது?

இன்சூரன்ஸ் பாலிசியை எடுப்பவர்கள் பெரும்பாலும் எண்டோவ்மென்ட் பாலிசியையோ அல்லது அதுபோன்று வேறு பாலிசிகளையோ எடுக்கின்றனர். இந்த பாலிசிகளில் பிரீமியம் அதிகம். ஆனால் இன்சூரன்ஸ் தவிர முதிர்வு தொகையும் உண்டு. டேர்ம் இன்சூரன்ஸில் பிரீமியம் மிக குறைவு.

ஆனால் முதிர்வு தொகை என்று எதுவும் கிடையாது. எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுப்பதற்கான முக்கிய காரணம் இதை சேமிப்பாக கருதுவதும் மற்றும் பழைய வரித்திட்டத்தில் பெற்று வந்த வரிச்சலுகையுமே ஆகும். தற்போது புதிய வரி திட்டத்திற்கு மாறுபவர்களுக்கு அதுபோன்ற சேமிப்பை தொடர வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தற்போது எடுத்துள்ள இன்சூரன்ஸ் பாலிசிகளை என்ன செய்வது, அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

பாலிசியை சரண்டர் செய்யலாம்: பாலிசியை எடுத்த பிறகு சில வருடங்கள் தொடர்ந்து பிரீமியம் செலுத்தி இருந்தால், அந்தப் பாலிசியை சரண்டர்செய்து விடலாம்.செலுத்தப்பட்ட பிரீமியத்தின் அடிப்படையில், ஒரு கழிவுக்கு பிறகு மீதி உள்ள தொகையை திரும்பிப் பெறலாம்.

இதற்கு சரண்டர் மதிப்பு(Surrender Value) என்று பெயர். சரண்டர் மதிப்புஓவ்வொரு பாலிசிக்கும் மாறுபடும். பாலிசியின் ஆவணத்திலேயே அந்த பாலிசிக்கான சரண்டர் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு கிடைக்கும் சரண்டர் மதிப்பு தொகையை வேறு வகையில் முதலீடு செய்து பலன் பெறலாம்.

பிரீமியம் செலுத்தாமல் தொடரலாம்: பாலிசியை இதுவரை செலுத்திய பிரீமியத்துடன் நிறுத்திக்கொண்டு, மேலும் பிரீமியம் செலுத்தாமல் தொடரலாம். அவ்வாறு செய்தால் அந்த பாலிசிக்கு முதிர்வில் ஒரு தொகை கிடைக்கும். அதற்கு பெய்டப் மதிப்பு என்றுபெயர்.

பிரீமியம்செலுத்தாமல் தொடரும் பாலிசிகளுக்கு இன்சூரன்ஸ் கவரேஜ் குறையும். தற்போது கணக்கிடப்படும் பெய்டப் மதிப்புக்கு மட்டுமே இன்சூரன்ஸ் அமலாகும். வரும் ஆண்டுகளில் மீதமாகும் பிரீமியம் தொகையில் தேவையானஅளவு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளவும் வேறு முதலீடுகளை செய்யவும் முடியும்.

பாலிசியை தவற விடலாம்: இன்சூரன்ஸ் எடுத்து மிக குறைந்தகாலமே ஆகி இருந்தால் அதற்கு சரண்டர் மதிப்போ அல்லது பெய்டப் மதிப்போ இருக்காது. அந்த சூழ்நிலையில், வருங்காலத்தில் உண்டாகக்கூடிய லாபத்தை கருத்தில் கொண்டு, அந்த பாலிசியை தவற விட்டு விடலாம். அதாவது வரும் ஆண்டுகளில் பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. வரும் ஆண்டுகளில் மீதமாகும் பணத்தில் டேர்ம் இன்சூரன்சும் மற்றும் வேறு முதலீடுகளும் செய்ய முடியும்.

ஒட்டுமொத்ததில், இன்சூரன்ஸை முக்கியமான நோக்கமாக கொள்ளாமல் வரி விலக்குக்காக மட்டும் எடுக்கப்பட்டுள்ள பாலிசிகளை புதிய வரி திட்டத்திற்கு மாறுவோர் தொடர வேண்டிய அவசியமில்லை. இதை எவரும் இன்சூரன்ஸே தேவையில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. ஒவ்வொருவருக்கும் அவரவருடைய வயது, வருமானம், செல்வம், மற்றும் குடும்ப சூழ்நிலையை பொறுத்து இன்சூரன்ஸ் தேவை. இதை டேர்ம் இன்சூரன்ஸ் வாயிலாக நிறைவேற்றிக்கொள்வது பயனளிக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in