

“பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிகள் வீழ்வதில்லை; மாறாகவங்கிகளின் வீழ்ச்சி காரணமாகவே பொருளாதார நெருக்கடி தீவிரம் கொள்கிறது.” இது 2022-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பென் பெர்னன்கி முன்வைத்த கோட்பாடு.
2008 செப்டம்பர் 15 அமெரிக்காவின் நூற்றாண்டு பாரம்பரியமிக்க மிகப் பெரும் முதலீட்டு வங்கியான லேமன் பிரதர்ஸ் திவாலானது. வங்கியின் ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து தங்கள்உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறும் காட்சி வரலாற்றுச் சுவடாக உறைந்தது.
லேமன்வங்கியின் வீழ்ச்சி அந்த ஒரு வங்கியுடன் நின்றுவிடவில்லை. உலகெங்கும் நூற்றுக்கணக்கான வங்கிகள் வீழ்ந்தன. நிதித்துறையின் வீழ்ச்சிவேகம் வேகமாக ஏனைய துறைகளுக்கும் கிளைபரப்பியது. பங்குச் சந்தையில் மிகப் பெரும் சரிவுஏற்பட்டது. நிறுவனங்கள் முடங்கின. பணத்தைஇழந்த அதிர்ச்சியில் மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்தன.
உலகம் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. நிதித் துறையின் வீழ்ச்சி என்பது சம்பந்தப்பட்டநாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலக பொருளாதாரத்தையே முடக்கக்கூடியது என்பதை 2008 பொருளாதார நெருக்கடி உணர்த்தியது.
இந்நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்கா அதன் வங்கிக் கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. படிப்படியாக, வங்கித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தது. இனி வங்கிகள் திவாலாகாது என்ற நம்பிக்கையில் மக்களும் தங்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இந்தச் சூழலில்தான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது எஸ்விபி.
எஸ்விபியின் வீழ்ச்சி: இம்மாதம் 8-ம் தேதி, அமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்விபி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 21 பில்லியன் டாலர் (ரூ.1.72 லட்சம் கோடி) மதிப்பிலான கடன் பத்திரங்களை 1.8 பில்லியன் டாலர் (ரூ.14,750 கோடி) நஷ்டத்தில் விற்றதாக அந்த வங்கி தெரிவித்தது.
எஸ்விபி வங்கியின் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே நாளில் அதன் பங்கு மதிப்பு 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. தங்கள் பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் எஸ்விபி வங்கியில் குவிந்தனர். பணத்தை திருப்பி செலுத்தும் நிலையில் எஸ்விபி இல்லை. இதனால் அவ்வங்கி மூடப்பட்டது.
எஸ்விபி போல் மற்ற வங்கிகளிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டால் என்ன ஆகும் என்ற அச்சம் மக்கள்மக்களிடையே எழுந்தது. இதன் காரணமாக, மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த தங்கள் பணத்தை எடுக்க ஆரம்பித்தனர்.
மக்கள் பயந்தது போலவே, எஸ்விபியை தொடர்ந்து அமெரிக்காவின் மற்றொரு வங்கியானசிக்னேச்சரும் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் கடும் நிதி நெருக்கடியில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்ததது.
உலகின் முன்னணி வங்கியான சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயிஸ் தற்போது கடும் சரிவுக்குஉள்ளாகி இருக்கிறது. இப்படியாக, பல வங்கிகளின் நிதி நிலைமை தடு மாற்றத்தில் இருப்பதாக செய்திகள் வந்தபடி உள்ளன.
எஸ்விபி சரிவால் அதில் டெபாசிட் செய்திருந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. நிறுவனச் செயல்பாட்டுக்கு பணம் இல்லாமல் அவை திணறுகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு அவை ஆளாகியுள்ளன.
இதனால்,அமெரிக்காவில் மட்டும்1 லட்சம் பேர் வேலையிழப்பை எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எஸ்விபி வங்கியில் ரூ.8,200 கோடி வைப்புத் தொகை கொண்டுள்ளன. தற்போது இந்தப் பணம் முடங்கியுள்ளது. எஸ்விபி வீழ்ச்சியால் ஐடி துறை கடும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் 2008-ம் ஆண்டு போல் உலகம் மீண்டும் ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
2008 நிகழ்வைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த வங்கித் துறையே நெருக்கடிக்கு உள்ளானது. ஆனால், தற்போதைய நிகழ்வு அப்படியானது அல்ல என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
2008 வீழ்ச்சிக்கு என்ன காரணம்? - 2000-க்குப் பிறகு அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறை பெரும் வளர்ச்சி காணத் தொடங்கியது. இந்த சமயத்தில் அமெரிக்க வங்கிகள் ரியல் எஸ்டேட் துறை சார்ந்து கடன் வழங்கத்தொடங்கின. அதுவரையில், கடன் பெற தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்ட மக்களுக்கும், வங்கிகள் தாமாகவே முன்வந்து கடன் வழங்கின. ஒரு கட்டத்தில் வட்டி விகித உயர்வால் ரியல்எஸ்டேட் துறையில் நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது.
மக்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான், லேமன் பிரதர்ஸ் திவாலானது. லேமன் பிரதர்ஸ்வங்கி மட்டுமல்ல, அமெரிக்காவின் ஒட்டு மொத்தவங்கிகளும் நிதி நிறுவனங்களும் ரியல் எஸ்டேட்துறை சார்ந்து கடன்களை வாரி இறைத்திருந்தன. ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட தேக்கம், வங்கித் துறையை நெருக்கடிக்குத் தள்ளியது.
எஸ்விபி ஏன் வீழ்ந்தது? - ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் எஸ்விபி வங்கியின் முதன்மை வாடிக்கையாளர்கள். அதாவது, முதலீட்டாளர்கள் தரும் நிதிகளை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எஸ்விபி வங்கியில் டெபாசிட் செய்யும்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எஸ்விபியை தேர்ந்தெடுப்பதற்கு சில காரணங்கள் உண்டு. எஸ்விபி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பெரிய கெடுபிடிகள் இல்லாமல் எளிதில் கடன் வழங்கும். அமெரிக்காவில் செயல்படும் அமெரிக்கர் அல்லாதவர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக்கூட எஸ்விபி எளிதில் கடன்வழங்கும். தவிர, மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் வைப்புத் தொகைக்கு எஸ்விபி தரும் வட்டி அதிகம். இதனால், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தேர்வாக எஸ்விபி இருந்துவந்தது.
எஸ்விபி வங்கியானது தன் வசமுள்ள வைப்புத்தொகையை அமெரிக்க அரசின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்வது வழக்கம். தற்போது அதுதான் அந்நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது.
கரோனா காலகட்டத்தில் உலக அளவில் பொருளாதாரம் கடும் சரிவுக்கு உள்ளானது. அமெரிக்காஅதன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, நிதிஉதவி திட்டங்களை அறிவித்தது. வட்டி விகிதத்தைக் குறைத்தது. இதனால், அமெரிக்காவில் மக்களிடையே பணப் புழக்கம் அதிகரித்தது.குறிப்பாக, முதலீட்டாளர்களிடையே பணம் பெருகியது.
அவர்கள் இந்தப் பணத்தை ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்தனர். அந்நிறுவனங்கள் அந்தப் பணத்தை எஸ்விபி வங்கியில் வைப்புத் தொகையாக போட்டன. இதனால், எஸ்விபியின் வைப்புத் தொகை பல மடங்கு உயர்ந்தது.
அமெரிக்க மத்திய வங்கி வெளியிட்ட கடன் பத்திரங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைத்த நிலையில், எஸ்விபி தன்வசம் இருந்த வைப்புத் தொகையை அந்தக் கடன்பத்திரங்களில் முதலீடு செய்தது. வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது அந்தக் கடன்பத்திரங்கள் மூலம் லாபம் கிடைக்கும். அதேசமயம், வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், அந்தக் கடன்பத்திரங்களின் மதிப்பு குறைந்துவிடும். எஸ்விபியின் மொத்த சொத்தில் 60 சதவீதம் கடன்பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தொழில் செயல்பாடுகள் மீளத் தொடங்கின. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில் மற்றொரு நெருக்கடி ஏற்பட்டது. அதாவது, ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகு மக்களின் நுகர்வுஒரே சமயத்தில் பல மடங்கு அதிகரித்த நிலையில், அதைப் பூர்த்தி செய்யும் வகையில் விநியோகம் மேற்கொள்ள முடியவில்லை.
இதனால், விநியோகக் கட்டமைப்பில் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக, விலைவாசி ஏற்றம் காணத் தொடங்கியது. இந்தச் சமயத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. விளைவாக, பணவீக்கம் உச்சம் தொட்டது.
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் பணவீக்கம் காணப்பட்டது. இந்நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியது. கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் 7 முறை தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை உயர்த்தியது.
வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், முதலீட்டாளர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எஸ்விபி வங்கியில் செலுத்தியிருந்த தங்கள் பணத்தை எடுக்கத் தொடங்கின.
ஒருபக்கம் வட்டி விகித உயர்வால், வீட்டுக்கடன் பத்திரங்களின் மதிப்பு குறைந்து கொண்டிருந்தது. இன்னொருபக்கம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் டெபாசிட் செய்திருந்த தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டிருந்தன. இதனால்எஸ்விபி கடும் நெருக்கடிக்கு உள்ளானது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்கான பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தநெருக்கடியை சமாளிக்கவே கடன் பத்திரங்களை நஷ்டத்தில் விற்கும் நிலைக்கு எஸ்விபி உள்ளானது.
தற்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதால், எஸ்விபி முதலீடு செய்திருந்த கடன் பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது. பிற்பாடு வட்டி விகிதம் குறைக்கப்படும்பட்சத்தில் அதன் மதிப்பு மீண்டும் உயரும். ஆனால், வாடிக்கையாளர்கள் அச்சம் கொண்டு தங்கள் வைப்புத் தொகையை எடுக்க குவிந்ததால், எஸ்விபி திவால் நிலைக்கு ஆளானது. அந்த வகையில் இது தனியொரு வங்கியின் பிரச்சினை. 2008-ல் ஏற்பட்டது போலான பொருளாதார நெருக்கடிக்கு இது வழிவகுக்காது என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
எஸ்விபியின் வீழ்ச்சி லேமன் பிரதர்ஸ் தருணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், வங்கித் துறை மீது பெரும் அவநம்பிக்கையை எஸ்விபி வீழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வங்கியில் பணம் டெபாசிட் செய்ய தயங்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
வீழ்ச்சியை சமாளித்த இந்திய ரிசர்வ் வங்கி: கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ‘பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி', ‘யெஸ் வங்கி', ‘லக்ஷ்மி விலாஸ் வங்கி' ஆகிய மூன்று வங்கிகள் வீழ்ச்சிக்குஉள்ளாகின. இந்த வங்கிகள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன என்பதை அறிந்ததும், அவ்வங்கிகளை ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத் தொகைக் கணக்கிலிருந்து குறிப்பிட்டத் தொகைக்கு மேல் எடுக்க சில மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது.
அதேசமயம், விரைவிலேயே நிலைமை சரிசெய்யப்படும் என்ற உத்தரவாதத்தை தந்தது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, அந்த மூன்று வங்கிகளின் வீழ்ச்சி வங்கித் துறையை பாதிக்காத வண்ணம் தடுத்தது. எனினும், இந்திய வங்கிகளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
சமீபத்தில், முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அதானி குழுமம் மீது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் மதிப்பு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த சமயத்தில், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கியின் பங்கு மதிப்பும் கடுமையாக சரிந்தது. காரணம், அதானி குழுமத்தில் எல்ஐசியின் முதலீடு ரூ.75,000 கோடியாக இருந்தது. எஸ்பிஐ ரூ.27,000 கோடி கடன் வழங்கி இருந்தது.
நாட்டின் பொருளாதார இயக்கத்தில் வங்கிகளின் இருப்பு மிக முக்கியமானதாக உள்ளது. வங்கிகளின் தொடர் இயக்கத்துக்கு மக்களின் நம்பிக்கைதான் அடிப்படை. அந்த வகையில், வங்கித் துறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ளன.
- riyas.ma@hindutamil.co.in