

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஒரு ரூபாய் கூட போதும். ஒரு ரூபாய் மதிப்பில் கூட பங்குகள் வர்த்தகமாகின்றன. இது போன்ற குறைந்த மதிப்புள்ள பங்குகள் பென்னி ஸ்டாக்ஸ் என்று அழைக்கப்படும். இந்தியாவில் 10 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் பங்குகளை பென்னி ஸ்டாக்ஸ் என்று கூறுவார்கள். பல முதலீட்டாளர்கள் இது போன்ற சிறிய மதிப்பு பங்குகளை வாங்குவதற்கு விரும்புவார்கள். காரணம் குறைந்த மதிப்பில் இருப்பதால் அதிக எண்ணிக்கையில் பங்குகள் கிடைக்கும். தவிர சிறிய அளவில் உயர்ந்தால் கூட அதிக லாபம் கிடைக்கும். முதலீடு இரு மடங்கோ அல்லது மூன்று மடங்கோ உயர்வதற்கு வாய்ப்பு இருக்கும்.
இந்த வகையான முதலீடு முதலீட்டாளர்களுக்கு ஒருவிதமான சாகச தன்மையை அளிக்கிறது. அதனால் பல முதலீட்டாளர்கள் இதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்கின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதியில் இருந்து கணக்கெடுத்தால், 10-ல் நான்கு பென்னி பங்குகள் சரிவில் இருக்கின்றன. இதில் 15 சதவீத பங்குகளின் மதிப்பு 50 சதவீதம் வரை சரிந்திருக்கிறது. லான்கோ இன்பிரா, நகோடா உள்ளிட்ட சில பங்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 90 சதவீதம் வரை கூட சரிந்திருக்கின்றன. இதில் சில பங்குகள் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. இருந்தாலும் இந்த பங்குகள் சரிவதற்கு வாய்ப்பு இருப்பதால் இதில் கவனம் செலுத்த வேண்டாம்.
பங்குகளில் முதலீடு என்று வரும் போது, நிறுவனத்தின் செயல்பாடு, எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். ஆனால் விலை குறைவாக இருக்கிறது என்பதற்காகவே இந்த பங்குகளில் பலர் முதலீடு செய்கின்றனர். எம்.ஆர்.எப், பாஷ், மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய பங்குகளின் விலை அதிகமாக உள்ளது. அதனால் இந்த பங்குகளில் சிறு முதலீட்டாளர் முதலீடு செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக பென்னி பங்குகளை வாங்கத் தேவையில்லை. முதலீட்டுக்கு ஏற்ற பல வாய்ப்புகள் வாங்கக் கூடிய விலையிலேயே வர்த்தகமாகின்றன.
தவிர விலை குறைவாக இருப்பதற்கு அந்த நிறுவனங்களின் செயல்பாடும் ஒரு காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி வரை 10 ரூபாய்க்கு கீழ் 1,030 பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் 20% நிறுவனங்களுக்கு கடந்த நிதி ஆண்டில் எந்தவிதமான வருமானமும் இல்லை. 40% நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் ரூ.1 கோடிக்கு கீழே வருமானம் ஈட்டியிருக்கின்றன. மீதமுள்ள நிறுவனங்களின் கடந்த நிதி ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்குள் மட்டுமே இருக்கிறது.
நிகர லாபம் என்னும் போது பல நிறுவனங்களின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதில் 60 சதவீத நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகின்றன. மோசர் பேயர், யுனிடெக், ஜோதி ஸ்டிரக்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இருக்கின்றன. இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் மதிப்பு எதிர்மறையில் (negative net worth) இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
மேலும் சில நிறுவனங்களில் ஒழுங்கு முறை பிரச்சினைகளும் உள்ளன. கல்ஸ் ரிபைனரி, ரசோயா புரோட்டீன் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுத்திருக்கிறது. உதாரணத்துக்கு ரசோயா நிறுவனம் 16 பைசாவில் வர்த்தகமாகிறது. இந்த நிறுவனத்தின் 4 இயக்குநர்கள் நிதி சந்தையில் எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என செபி கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இதேபோன்ற கட்டுப்பாடுகளை மேலும் சில நிறுவனங்களின் மீதும் செபி விதித்திருக்கிறது. அதேபோல ஆர்.இ.ஐ. அக்ரோ, ஜைலாக் சிஸ்டம் ஆகிய நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கடனை திருப்பி செலுத்தும் திறன் இருந்தும் செலுத்தாதவர்கள் (வில்புல் டிபால்டர்கள்) பட்டியலில் இருக்கின்றன.
மேலும் சில நிறுவனங்கள் போலியானவை. இந்த நிறுவனங்களில் எந்தவிதமான செயல்பாடுகளும் இருக்காது. சமீபத்தில் செபி அறிவித்த போலி நிறுவனங்களின் பட்டியலில் பல நிறுவனங்கள் இதுபோன்ற பென்னி பங்குகளை கொண்ட நிறுவனங்கள்தான்.
அதேபோல இந்த பங்குகளில் வர்த்தகம் என்பது மிகவும் குறைவாக இருக்கும். அதாவது இந்த பங்குகளை வாங்கினால் விற்பதற்கு யாரும் இல்லாத சூழல் கூட உருவாகும். உதாரணத்துக்கு ஹிந்த் செக்யூரெட்டீஸ் உள்ளிட்ட சில பங்குகளில் கடந்த நான்கு மாதங்களாக எந்தவிதமான வர்த்தகமும் நடக்கவில்லை. தவிர வர்த்தகம் இல்லா பங்குகளின் விலையை சில பெரிய முதலீட்டாளர்கள் நினைத்தால் மாற்ற முடியும். உதாரணத்துக்கு துவாரகேஷ் சுகர்ஸ் பங்கு 2014-ம் ஆண்டு பென்னி ஸ்டாக் பட்டியலில் இருந்தது. தற்போது 64 ரூபாயாக வர்த்தகமாகிறது. சிறிய முதலீட்டாளர்கள் இது போன்ற பங்குகளில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது.
-