

என்ன: கடந்த ஓராண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. சவூதி அரேபியா, ஈராக், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் முன்னிலையில் இருந்தன. தற்போது அந்நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது.
அதனால்: சென்ற ஆண்டு பிப்ரவரி நிலவரப்படி, ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி வெறும் 2 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது அது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஏன்: கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது.
அதுவரையில், ரஷ்யாவிடமிருந்து 2% அளவிலே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.
தாக்கம்: பிப்ரவரி மாதம் இந்தியா ரஷ்யாவிட மிருந்து நாளொன்றுக்கு 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. ஈராக்கிடமிருந்து 9.39 லட்சம், சவூதி அரேபியாவிடமிருந்து 6.47 லட்சம், ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து 4.04 லட்சம், அமெரிக்காவிடமிருந்து 2.48 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், சவூதி அரேபியாவிடமிருந்து இறக்குமதி 16 சதவீதமும், அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி 38 சதவீதமும் குறைந்துள்ளது.