

கேசவன் முதன்முறையாக ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முற்படுகிறார். அவருக்கு வங்கிகளின் வைப்பு நிதிகளில் முதலீடு செய்த அனுபவம் உண்டு. அந்தவைப்பு நிதிகளுக்கான வட்டியை மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெற்று செலவு செய்வார். அவருக்கு பழம்பெரும் நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு உண்டு.
அவை பெரும்பாலும் டிவிடெண்ட் வழங்கும். இந்நிலையில் கேசவன், தற்போது முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்தும் வங்கியில் உள்ள வைப்பு நிதிக்கான வட்டி போலவோ அல்லது கம்பெனி பங்குகளுக்கான டிவிடெண்ட் போலவோ முதலீட்டுக்கான பலன் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
எனவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் டிவிடெண்ட் வழங்கும் திட்டத்தை (Dividend option) தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும் என்றும் தனக்கு வளர்ச்சி திட்டம் (Growth scheme) சரியாக வராது என்றும் நினைக்கிறார். அவருடைய புரிதல் சரியா?
டிவிடெண்ட் திட்டமும் வளர்ச்சி திட்டமும்: டிவிடெண்ட் திட்டத்தில் லாபத்தின் ஒரு பகுதி முதலீட்டார்களுக்கு வழங்கப்படும். இதற்கு கால அளவோ அல்லது எவ்வளவு வழங்க வேண்டும் என்றோ எந்த நிர்பந்தமும் கிடையாது.
எனவே டிவிடெண்ட் திட்டத்தில் முதலீடு செய்திருந்தாலும் டிவிடெண்ட் வரலாம், வராமலும் போகலாம். வளர்ச்சி திட்டத்தின் முதலீட்டுக்கு அந்த திட்டத்தின் முதலீட்டை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ திரும்பப்பெறும்போது (ரெடெம்ப்ஷன்) மட்டுமே நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) அடிப்படையில் முதலீடு திரும்ப கிடைக்கும்.
வளர்ச்சி திட்டத்தின் சிறப்புகள்: வளர்ச்சி திட்டத்தில் எந்தவித டிவிடெண்டும் வழங்கப்படுவதில்லை. எனவே பெறப்பட்ட நிதி, லாபத்துடன் சேர்ந்து அதிக அளவில் இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு யூனிட்டுக்கு பத்து ரூபாய் வசூலித்த நிதி, இந்த ஆண்டில் ஒரு யூனிட்டுக்கு (செலவெல்லாம் போக) ரூ.2 லாபம் ஈட்டி இருந்தால், அதன் நிகர சொத்து மதிப்பு ரூ.12 ஆகிவிடும். தற்போதைய முதலீடும் அவ்வாறே அதிகரித்துவிடும். இந்த முறையில் ஈட்டிய லாபம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து முதலீடு செய்யப்படுவதால் கூடுதல் பலன் உண்டு.
டிவிடெண்ட் பற்றிய தவறான புரிதல்: மியூச்சுவல் ஃபண்டின் டிவிடெண்ட் விநியோகம் மற்ற நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்ட் போன்றது அல்ல. ஒரு நிறுவனத்திலிருந்து டிவிடெண்ட் விநியோகம் என்பது அந்த நிறுவனம் ஈட்டப்பட்ட லாபத்திலிருந்து வழங்கப்படுகிறது.
இது நிறுவனத்தின் லாபத்தையும் அதன் லாபத்திலிருந்து எவ்வளவு விநியோகிக்கிறது என்பதையும் பொறுத்தது. ஒரு மியூச்சுவல் ஃபண்டின் டிவிடெண்ட் வழங்கலில் அந்த மியூச்சுவல் ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு அதற்கேற்ப குறையும். எனவே முதலீட்டாளரின் நிலுவையில் உள்ள முதலீடும் குறையும்.
வரிவிதிப்புகள்: டிவிடெண்ட் திட்டத்தில் மொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும். டிவிடெண்டிற்கான வரி ‘பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்’ என்ற பிரிவின் கீழ் அவரவர் வருமான வரி அடுக்கின்படி அமையும்.
ஒரு நிதியாண்டில் டிவிடெண்ட் ரூ.5,000 க்குமேற்பட்டால் 10% பிடித்தம் செய்த பிறகேமீதி வழங்கப்படும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இதை திரும்ப கோரலாம். ஆனால் ரெடெம்ப்ஷன் முறையில் திரும்ப பெறப்படும் நிதிக்கு மூலதன ஆதாயத்துக்கான வரி மட்டுமே செலுத்த வேண்டும்.
டிவிடெண்டுக்கு செலுத்தும் வரியைவிட இது லாபகரமானதாக இருக்கும். மூலதன வரி திட்டம்அதன் வகையைப் பொருத்தும் முதலீட்டின் கால அளவைப் பொருத்தும் வேறுபடும்.
மீட்பு வசதி: டிவிடெண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, ஒருவர் வளர்ச்சித் திட்டத்தைத் தேர்வு செய்து, குறிப்பிட்ட காலத் தேவைகளுக்கு மீட்பு (ரெடெம்ப்ஷன்) வசதியைப் பயன்படுத்துவதில் ஈடுபடலாம். இதற்கென உள்ள சிஸ்டமேடிக் வித்ட்ராயல் திட்டத்தில் மாத மாதம் திரும்பப் பெற முடியும்.
விதிவிலக்கு: பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ஈக்விட்டி லிங்கிட் சேவிங்ஸ் ஸ்கீம்) ரெடெம்ப்ஷனை மூன்று வருடத்துக்கு பிறகு மட்டுமே அனுமதிக்கிறது. எனவே லாக்-இன்காலத்தில் யூனிட்களை ரிடீம் செய்ய முடியாமல் போகலாம். ஒருவர் இங்கு டிவிடெண்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால், லாக் இன் காலத்தில் ஃபண்ட் டிவிடெண்டுகள் அறிவிக்கப்பட்டால், அது பணப்புழக்கத்தை அதிகரிப்பதால் முதலீட்டாளருக்கு பயனுள்ளதாக இருக்கும். மற்ற சந்தர்ப்பங்களில், டிவிடெண்ட் திட்டத்தைத்தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை.
- ஓய்வு பெற்ற வங்கியாளர்