

ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு திடீர் நிதி நெருக்கடி ஏற்படும்போது இன்றளவும் உற்ற தோழனாக கை கொடுப்பது தங்க நகைகள்தான். குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவுக்காக யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அடகு வைத்து நிலைமையை சமாளித்து கவுரவமாக வாழ உதவிடும் ஆபத்பாந்தவன் தங்க நகைகள்.
இந்நிலையில், பழைய ஹால்மார்க் தங்க நகை விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் பொதுமக்களிடம் உள்ள நகைகள் மதிப்பை இழக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
நகைகளை 100% சுத்தமான (24 காரட்) தங்கத்தில் செய்ய முடியாது என்பதால் அவற்றில் உலோகங்கள் கலக்கப்படும். அப்படி கலக்கப்படும் உலோகங்களின் அளவைப் பொருத்து தங்க நகைகளின் தரம் மற்றும் விலை மாறுபடும். அவை, 22 காரட், 18 காரட், 14 காரட் தங்கம் என வகைப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில், ஹால்மார்க் என்பது நகைகள் அல்லது பிற தங்கப் பொருட்களில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் தூய்மையைக் குறிப்பதற்காக வழங்கப்படும் குறியீட்டு சான்றிதழாகும். தரமான தங்க நகைகளை விற்பனை செய்யும் நோக்கில் தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரையை பயன்படுத்தும்படி தங்க நகை விற்பனையாளர்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி வந்தது.
2021 ஜூன் மாதத்துக்குப் பிறகு ஹால்மார்க் முத்திரையை மத்திய அரசு படிப்படியாக கட்டாயமாக்கத் தொடங்கியது. முதற்கட்டமாக 256 மாவட்டங்களிலும் இரண்டாம்கட்டமாக 32 மாவட்டங்களிலும் என மொத்தம் 288 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. மக்களும் சாதாரண நகையைவிட ஹால்மார்க் நகைகளை வாங்கவே ஆர்வம் காட்டினர்.
இதனால், ஹால்மார்க்முத்திரை கட்டாயமாக்கப்படாத மாவட்டங்களிலும், பெரும்பான்மையாக ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளே விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஹால்மர்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
தனித்த அடையாள எண்: ஹால்மார்க்கின் நம்பகத்தன்மைய உறுதி செய்வதற்காக தனித்த அடையாள எண் (HUID) வழங்கப்படுகிறது. ஹால்மார்க் செய்யப்படும்போதே தனித்த அடையாள எண் வழங்கப்படுவதுண்டு. தற்போது 4 மற்றும் 6 இலக்கங்களில் இந்த அடையாள எண் வழங்கப்படுகிறது.
ஏப்ரல் 1 முதல் 6 இலக்க அடையாள எண் கொண்ட ஹால்மார்க் தங்க நகைகளே விற்பனைக்கு அனுமதிக்கப்படும். 4 இலக்க ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால்மார்க் இல்லாமல் தங்க நகை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு, நகையின் மதிப்பைப்போல ஐந்து மடங்கு அபராதம் அல்லது ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பிழப்பு அச்சம்: மகளின் திருமணம், தங்களது ஓய்வு காலத்துக்காக இத்தனை ஆண்டு காலம் சிறுக சிறுக சேமித்து வைத்த பழைய தங்கம் கட்டாய ஹால்மார்க் அறிவிப்பால் அதன் மதிப்பை இழந்துவிடுமா என்ற அச்சம் ஆயிரக்கணக்கான குடும்பத்தினரிடம் ஏற்பட்டுள்ளது. விற்பனைக்கு மட்டும்தான் இந்த விதி. மற்றபடி, மக்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய ஹால்மார்க் நகை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கட்டாய ஹால்மார்க் திட்டத்தால் தற்போது நுகர்வோரிடம் உள்ள பழைய நகைகளின் மதிப்பு குறையாது. ஆனால் அவற்றைஹால்மார்க் செய்து கொள்வது எதிர்காலத்துக்கு நல்லது. அதற்கான விழிப்புணர்வை நுகர்வோரிடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் தங்க, வைர நகைகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி.
சில சிரமங்கள்: இந்தப் புதிய நடைமுறையால் நகைக் கடைக்காரர்கள் ஆரம்ப கட்டத்தில் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். தங்கள் வசமுள்ள பழைய நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் சென்று ஹால்மார்க் குறியீடை பெறுவதற்கு 14 மணி நேரம் வரை செலவிட வேண்டும் என்பதுடன் பாதுகாப்பாக திரும்ப கடைகளுக்கு எடுத்து வரவேண்டும். இதனால், அந்தக் காலகட்டத்தில் நகைக்கான முதலீடு முற்றிலும் முடக்கப்பட்டு விடுகிறது.
தங்க நகை விற்பனை நிறுவனங்கள் தங்களது இருப்புகளில் 20-25 சதவீத நகைகளுக்கு புதியவிதிமுறையின்படி மீண்டும் ஹால்மார்க் செய்யவேண்டியுள்ளது. நடைமுறை சிக்கலை கருத்தில்கொண்டு 6 இலக்க ஹால்மார்க் கட்டாய அமலாக்கத்துக்கான காலக்கெடுவை 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்த ஆபரண தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் ஹால்மார்க் செய்வதற்கான கட்டணத்தை நகையொன்றுக்கு ரூ.10-ஆக குறைக்க வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எப்படியாயினும், இந்தப் புதிய நடைமுறை ‘‘கொடுக்கும் பணத்திற்கு சரியான நகைகளைத் தான் வாங்குகிறோம்’’ என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
பிஐஎஸ் கேர் செயலி: மக்கள் தங்கள் மொபைல் போனில் பிஐஎஸ் கேர் (BIS CARE) செயலியை பதிவிறக்கம் செய்து அதில் எச்யுஐடி நம்பரை உள்ளீடு செய்து தங்க நகைகளின் தரத்தை, முத்திரை விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தவறுகள் இருப்பின் புகார் குறித்த பதிவுகளை அந்த செயலியிலேயே மேற்கொள்ளலாம்.
- rajanpalanikumar.a@hindutamil.co.in