

ஹிண்ட்ன்பர்க் அறிக்கை எப்படி பரப்பரப்பாகப் பேசப்பட்டு வருகிறதோ அதைப் போலவே நியூயார்க் டைம்ஸ் நிருபர்களான வால்ட் போக்டேனிசும் (Walt Bogdanish), மைக்கேல் ஃபோர்ஸித்தும் (Michael Forsyth) சேர்ந்து எழுதி வெளிவந்திருக்கும் ‘வென் மெக்கின்சி கம்ஸ் டூ டவுன்' (When Mckinsey Comes To Town: The Hidden Influence of the World’s Most Powerful Consulting Firm) என்ற புத்தகம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் அபரிமிதமான மதிப்பையும் செல்வாக்கையும் பெற்றிருக்கும் மெக்கின்சி ஆலோசனை நிறுவனம் தார்மீகக் கொள்கைகளைப் அடகு வைத்து லாபத்தைத் துரத்திச் செல்வதில் மட்டும் குறியாக இருந்ததாக அந்த நிருபர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான பல ஆதாரங்களையும் அவர்கள் அடுக்கியுள்ளனர்.
வலியைப் போக்கக்கூடிய மருந்தானஒபியாய்டு தயாரிப்பாளர்கள், எதேச்சதிகாரம் கொண்ட அரசியல் தலைவர்கள், சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள், அமெரிக்க குடியேற்றப் பிரிவுபோன்ற பல அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாக மெக்கின்சி செயலாற்றுகிறது.
2002-ம் ஆண்டில் மார்ட்டின் எல்லிங், மெக்கின்சி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று சக ஊழியர்களுடன் சேர்ந்து அந்நிறுவனத்தின் காலாண்டு இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். மருந்து உற்பத்தித் துறையில் இருந்து அதிக வணிகத்தைப் பெறுவதைநோக்கமாகக் கொண்டு அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
தனிப்பட்ட மருத்துவர்கள் சில மருந்துகளை எந்த அளவுக்கு அடிக்கடி பரிந்துரைக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்காததால் மருந்து நிறுவனங்கள் எந்த அளவுக்கு வாய்ப்பை இழக்கின்றன என்று அந்தக் கட்டுரை வாதிட்டது.
இதன் தொடர்ச்சியாக, பர்டியூ பார்மா என்ற மருந்து நிறுவனம் 2004-ம் ஆண்டு மெக்கின்சியைத் தனது ஆலோசகராக நியமித்துக் கொண்டது, இந்த நியமனம் அந்த நிறுவனத்தின் ஓபியாய்டு வலி நிவாரணியான ‘ஆக்ஸிகான்டின்’ விற்பனையை அதிகரிக்க உதவியது. ஆண்டுதோறும் அந்த மருந்தின் விற்பனை 1 பில்லியன் டாலரை எட்டியது. இந்திய மதிப்பில் ரூ.8,200 கோடி. பர்டியூ பார்மா மருந்து நிறுவனம் மெக்கின்ஸிக்கு ஆலோசனைத் தொகையாக 8.37 கோடி டாலரை (ரூ.685 கோடி) வழங்கியது.
இந்த மருந்து விற்பனையின் தொடர்ச்சியாக தேசிய அளவில் ஓபியாய்டுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்தது. இதனால் நெருக்கடி உருவானது. இப்படியாக, பல்வேறு நிறுவனங்களுக்கு தார்மீகமற்ற முறையில் ஆலோசனை வழங்கி வந்துள்ளது மெக்கின்சி. அரசு அமைப்புகளிலும் மெக்கின்சியின் ஆலோசனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
1926-ம் ஆண்டில் ஜேம்ஸ் ஓ. மெக்கின்சி என்ற கணக்கியல் பேராசிரியரால் நிறுவப்பட்ட மெக்கின்சி, உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வந்தது. மெக்கின்சி ஆலோசகர்களை அழைப்பதன் மூலம் சிறந்த ஆலோசனைகளை பெறமுடியும் என கார்ப்பரேட் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் நம்பினர்.
உலகின் முன்னணி கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் மெக்கின்சி நிறுவனத்தில் சேர்வதை லட்சியமாக கொண்டனர். ஆனால், மெக்கின்சியோ நிழல் உலகில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது என்கிறது இந்நூல்.
மெக்கின்சி தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் லாபம் ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் தார்மீக நெறிகளைக் கடைபிடிப்பதில்லை என்றும் கூறும் இந்நூல், நாணயத்துக்குஇரு பக்கங்கள் இருப்பது போல மெக்கின்சியின் மறுபக்கத்தைப் பகிர்கிறது.
- சித்தார்த்தன் சுந்தரம் | sidvigh@gmail.com