பங்குச் சந்தை வர்த்தக நேரம் நீட்டிக்கப்பட்டால்

பங்குச் சந்தை வர்த்தக நேரம் நீட்டிக்கப்பட்டால்
Updated on
3 min read

மும்பை பங்குச் சந்தை (BSE). தேசியப் பங்குச் சந்தை (NSE). இந்திய நிறுவனங்களின் பங்குகளைக் கையாளும் முதன்மையான தளங்கள் இவை. உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை தளங்களாகவும் இவை உள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் 5,500-க்கு மேற்பட்ட நிறுவனங்களும், தேசியப் பங்குச் சந்தையில் 1,600-க்கு மேற்பட்ட நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் காலை 9.15 மணியிலிருந்து மாலை 3.30 மணி வரையில் இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் நிகழ்கிறது. 2018-ம் ஆண்டு பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம் (செபி) வர்த்தக நேர நீட்டிப்பு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

பங்கு வர்த்தக நேரத்தை மாலை 5 மணி வரையிலும் டெரிவேட்டிவ்ஸ் வர்த்தக நேரத்தை இரவு 11.55 வரையிலும் நீட்டித்துக்கொள்ள அனுமதி வழங்கியது.

இதற்கு பங்கு தரகு நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அப்போது நேர நீட்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், இப்போது நேரத்தை நீட்டிப்பதற்கான சூழல் காணப்படுகிறது.

கரோனாவுக்குப் பிறகு இளைஞர்கள் பங்குச் சந்தைக்கு வருவது பல மடங்கு அதிகரித்துள்ளது. கரோனா ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீட்டில் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், பலர் பங்குச் சந்தையில் சோதனை முயற்சியாக ஈடுபடத் தொடங்கினர். யூடியூப் வீடியோக்கள் அவர்களுக்கு வழிகாட்டின. தங்கள் வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களும் உண்டு.

கரோனாவுக்கு முன்பாக, 2020 மார்ச்சில் இந்தியாவில், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 4.1 கோடியாக இருந்து. தற்போது அது 10 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும், கரோனாவுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் புரோக்கிங் நிறுவனங்களும் உருவாகி உள்ளன. அந்தவகையில், 2018 -ல் இருந்ததைவிட தற்போது சூழல் பல விதங்களில் மாறியுள்ளது. இந்நிலையில், வர்த்தக நேரத்தை நீட்டிக்கும் முயற்சியில் பங்குச் சந்தை தளங்கள் இறங்கியுள்ளன.

தேசியப் பங்குச் சந்தை, கடந்த பிப்ரவரி 23 முதல் அதன் தளத்தில் வட்டிவிகித அடிப்படையிலான டெரிவேட்டிவ் வர்த்தக நேரத்தை மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளது. அடுத்தகட்டமாக, பங்கு வர்த்தக நேரத்தையும், பியூச்சர் அண்ட் ஆப்சன் வர்த்தக நேரத்தையும் நீட்டிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இது பல தளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது. ஒரு சாரார் வர்த்தக நேர நீட்டிப்பை பெரும் வாய்ப்பாக பார்க்கின்றனர். மற்றொரு சாரார், நேர நீட்டிப்பு மக்களின் உளவியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். வர்த்தக நேரத்தை நீட்டித்தால் என்ன நடக்கும்?

சாதகங்கள்: பங்குச் சந்தை வர்த்தகம் என்பது பல்வேறு காரணிகளால் பிணைக்கப்பட்டது. உதாரணத்துக்கு அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதும், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்துவதும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

இப்படியாக சர்வதேச நிகழ்வுகள் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கின்றன. இந்தியாவில் பிற்பகல் 3.30 மணியுடன் பங்குச் சந்தை வர்த்தகம் முடிந்து விடுவதால், அதன் பிறகு நிகழும் உலக நிகழ்வால் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப பங்குகளை விற்கும், வாங்கும் முடிவை இந்தியாவில் மேற்கொள்ள முடியாது.

இதனால், மறுநாள் காலையில் வர்த்தகம் தொடங்கும்போது, முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. வர்த்தக நேரம் நீட்டிக்கப்படும்போது, இந்த இழப்பை ஓரளவு குறைக்க முடியும். தவிர, அதிக நேரம் பங்கு வர்த்தகம் நிகழ்வதால், முதலீட்டாளர்கள் பங்கு வாங்கல், விற்றலில் கூடுதல் அவகாசத்தைப் பெற முடியும். அதேபோல் வர்த்தக நேரம் நீட்டிக்கப்பட்டால், வர்த்தக எண்ணிக்கை அதிகமாகும். அதனால், பணச் சுழற்சி அதிகரிக்கும். இவை வர்த்தக நேர நீட்டிப்பை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதங்கள்.

பாதக அம்சங்கள்: பத்து ஆண்டுகளுக்கு மேலாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் தினேஷ், வர்த்தக நேர நீட்டிப்பால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்கிறார்: ‘‘என்னுடைய வேலை மூலம் கிடைக்கும் மாதச் சம்பளத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக பங்குச் சந்தையில் வருமானம் ஈட்டுகிறேன். நஷ்டமோ, லாபமோ வர்த்தக நேரம் முடிந்த பிறகுதான் மனம் அமைதி அடைகிறது.

பலரும் என்னைப் போன்ற மனநிலையில் இருப்பவர்கள்தான். இந்தச் சூழலில் வர்த்தக நேரம் நீட்டிக்கப்பட்டால், அதில் ஈடுபடும் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். சிலர் சொல்கிறார்கள், ‘நீங்கள் ஏன் முழு நேரமும் வர்த்தகத்தில் ஈடுபட விரும்புகிறீர்கள். உங்களுக்கென்று ஒரு நேரத்தை நிர்ணயித்துக் கொண்டு அத்துடன் வர்த்தகத்தை முடித்துக்கொள்ள வேண்டியதுதானே?’ சொல்வதற்கு எளிது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமில்லை. பங்கு வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் அதிலிருந்து விடுபட்டு இருக்க முடியாது.

நம் மனம் பங்கு வர்த்தகத்திலேயே இருக்கும். இதைக் கருத்தில்கொண்டுதான், ஷாங்காய், டோக்கியோ, ஹாங்காங் பங்குச் சந்தைகள், மதிய உணவு இடைவேளையின்போது, பங்குச் சந்தை செயல்பாட்டுக்கு இடைவெளி விடுகிறது. வருமானம், பணப்புழக்கம் எல்லாவற்றையும் தாண்டி மன ஆரோக்கியம் மிக முக்கியம். வர்த்தக நேர நீட்டிப்பு, நிச்சயமாக மக்களிடம் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்’’ என்கிறார்.

உளவியல் பாதிப்பைத் தாண்டி நிர்வாகரீதியாகவும், வர்த்தக நேர நீட்டிப்பு சிக்கல்களை ஏற்படுத்தும் என்கின்றனர். குறிப்பாக, வர்த்தக நேரம் நீட்டிக்கப்பட்டால், பங்கு தரகு நிறுவனங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும். இதற்கென்று அவை ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அலுவலக கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும்.

இதனால், பங்கு தரகு நிறுவனங்களின் செலவுகள் பல மடங்கு உயரும். பெரிய தரகு நிறுவனங்களால், இந்த செலவினங்களை எதிர்கொள்ள முடியும். ஆனால், சிறிய நிறுவனங்களுக்கு இது சவால் நிறைந்தது. அந்த வகையில் வர்த்தக நேர நீட்டிப்பு சிறிய தரகு நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என்று கூறுகின்றனர்.

பங்கு வர்த்தக நேரம் குறித்து முடிவெடுக்கும்போது, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை மட்டுமல்ல, மக்களின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கருத்தில் கொள்வது மிக அவசியம். எனவே, பங்குச் சந்தைத் தளங்கள் இந்த விவகாரத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியம்.

- riyas.ma@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in