

வெளிநாட்டுக்கு படிக்கச் செல்லும் இளைஞர்கள் அங்கு பயன்படுத்தப்படும் கரன்ஸிகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். கையிலேயே மொத்த பணத்தையும் வைத்திருக்க முடியாது. ஏனெனில் எந்நேரமும் அதைப் பாதுகாப்பதிலேயே அவர்களது கவனம் செல்லும். இந்த குறையைப் போக்குவதற்காக வங்கிகள் மற்றும் சில பயண ஏஜென்ஸிகள் வெளிநாட்டு கரன்ஸிக்கான பிரீபெய்டு கார்டுகளை வழங்குகின்றன.
இத்தகைய பிரீபெய்டு கார்டுகளை பயணிகளுக்காக மாணவர் டிராவல் கார்டை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது. ஐஎஸ்ஐசி மாணவர் போரெக்ஸ் பிளஸ் பிரீபெய்டு கார்டை ஹெச்டிஎப்சி வங்கி வழங்குகிறது. சில பயண நிறுவனங்கள் மற்றும் அந்நிய செலாவணி நிறுவனங்களும் இதுபோன்ற கார்டுகளை வழங்கி வருகின்றன. உதாரணமாக தாமஸ் குக் நிறுவனம் பார்டர்லெஸ் பிரீபெய்டு கார்டை மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக வழங்கி வருகிறது. வங்கிகளில் வழங்கப்படும் டெபிட் கார்டு போல்தான் அந்நிய செலாவணி பிரீபெய்டு கார்டுகள்.
இந்த கார்டுகளுக்கென்று வங்கிகள் கட்டணங்களை வசூலிக்கிறது. உதாரணமாக ஹெச்டிஎப்சி வங்கி அந்நிய செலாவணி பிரீபெய்டு கார்டுக்கு 300 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறது. இருந்தபோதிலும் ஐசிஐசிஐ வங்கி 150 ரூபாயை கட்டணமாக வசூலித்து வருகிறது. பெரும்பாலும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் இந்த கார்டுகள் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களாக இருந்தால் அவர்களுடைய கல்லூரி படிப்பு முடியும் வரை செல்லுபடியாகும்படி கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக இந்த கார்டில் 2,50,000 டாலர் வைத்துக் கொள்ளமுடியும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் கார்டுகளில் பெற்றோர்கள் பணத்தை போடவும் எடுக்கவும் முடியும். மேலும் அவர்கள் ஆன்லைன் மூலமாக பயன்படுத்திக் கொள்ளவும் சலுகைகள் வழங்கப்படுகிறது.
மேலும் சில சமயங்களைத் தவிர ஏடிஎம் மையங்களில் இருந்து எந்தவித கட்டணமும் இல்லாமல் மாணவர்கள் பணத்தை எடுத்துக் கொள்ளமுடியும். தாமஸ் குக் இந்த சலுகையை வழங்குகிறது. இருந்தபோதிலும் ஹெச்டிஎப்சி வங்கி வழங்கும் அந்நிய செலாவணி கார்டு ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எத்தனை முறை பணம் எடுக்கலாம் என்பதில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் ஒருமுறை ஏடிஎம் மூலமாக 500 டாலரிலிருந்து 1000 டாலர் வரை மட்டுமே எடுக்கமுடியும்.
ஆனால் சாதாரணமாக வழங்கப்படும் அந்நிய செலாவணி கார்டுகளில் ஒரு நாளில் மூன்று முறை மட்டுமே ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கமுடியும். சில நிறுவனங்கள், வங்கிகள் இதில் கொஞ்சம் சலுகைகள் வழங்கிவருகின்றன. மேலும் இந்த கார்டு மூலம் கல்லூரி கட்டணங்களை இந்தியாவிலிருந்து உடனடியாக அனுப்ப முடியும். இதற்கென்று வங்கிகள் சில கட்டணங்களை வசூலிக்கின்றன.
பல நாட்டு கரன்ஸி கார்டுகளை வைத்திருந்தாலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. உதாரணமாக ஐசிஐசிஐ வங்கி வழங்கக்கூடிய ஸ்டூடெண்ட் பயண கார்டுகளில் மொத்தமாக ஐந்து கரன்ஸிகளை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்டு, யூரோ, கனடியன் டாலர், ஆஸ்திரேலியன் டாலர் ஆகியவை மட்டுமே வைத்துக் கொள்ளமுடியும். ஆனால் ஐசிஐசிஐ வழங்கக்கூடிய மல்டி கரன்ஸி கார்டுகளில் 15 கரன்ஸிகளை வைத்துக் கொள்ளமுடியும்.
அதேபோன்று ஹெச்டிஎப்சி வங்கி வழங்கக்கூடிய ஐஎஸ்ஐசி ஸ்டூடண்ட் போரெக்ஸ் கார்டுகளில் 3 கரன்ஸிகளை வைத்துக் கொள்ள முடியும். ஆனால் சாதாரணமான போரெக்ஸ் கார்டுகளில் 10 கரன்ஸிகளைப் பயன்படுத்த முடியும்.
உங்கள் இண்டர்நேஷனல் மொபைல் எண்ணுடன் இந்த கார்டு இணைக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போதோ அல்லது பணம் போடும்போதோ உங்கள் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும். பல கரன்ஸிகளை கொண்டிருப்பதால் வேறு நாடுகளுக்குச் சென்றால் இந்த கார்டுகளை எளிதாக பயன்படுத்திக் கொள்ளமுடியும். பொதுவாக பணத் தை பாதுகாப்பது மிக கடினமான செயல். அதுவும் புதிதாக செல்லும் நாடுகளில் நாம் பழகுவதற்கே நெடுநாளாகும். அதனால் இதுபோன்ற கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
-