Published : 25 Sep 2017 11:28 AM
Last Updated : 25 Sep 2017 11:28 AM

தொடர்பு எல்லைக்கு வெளியே...!

லக அளவில் இரண்டாவது மிகப் பெரிய தொலைத் தொடர்பு சந்தையைக் கொண்ட நாடு இந்தியா. இணையதளம் பயன்படுத்துவதிலும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தை. ஸ்மார்ட்போன் பயன்பாட்டிலும் இரண்டாவது இடம். தற்போது இந்த துறை சார்ந்து 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. சுமார் 86 கோடி ஸ்மார்ட்போன்கள் புழங்குகின்றன. சுமார் 40 சதவீத வாடிக்கையாளர்கள் மொபைல் மூலம் இன்டர்நெட் பயனாளிகளாகவும் உள்ளனர். 2020-ம் ஆண்டுக்குள் 100 சதவீத மக்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கும்.

தொலைத் தொடர்பு துறையில் 74 சதவீதமாக இருந்த அந்நிய முதலீடு 100 சதவீதமாக திறந்துவிடப்பட்டுள்ளது. தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் அறிக்கைப்படி 2000-ஆவது ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை சுமார் 2,395 கோடி டாலர் அந்நிய முதலீடு தொலைத் தொடர்பு துறைக்கு வந்துள்ளது. தவிர ஜிடிபியில் 6.25 சதவீத பங்களிப்பு கொண்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 8.2 சதவீத பங்களிப்பை செலுத்தும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.

இவையெல்லாம் இந்திய தொலைத் தொடர்பு துறை குறித்த புள்ளிவிவரங்கள். தினசரி சந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது. கிராமப்புற சந்தைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தொலைத் தொடர்பு துறைக்கு நிகழ்காலமும் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கிறது / இருக்கும் என்கிற தோற்றம் இதன் மூலம் உருவாகிறது. ஆனால் தொலைத் தொடர்பு துறையின் தற்போதைய நிலவரமோ இதற்கு நேர்மறையாக உள்ளது. இந்திய தொலைத் தொடர்பு துறை மிகப் பெரிய நெருக்கடியில் உள்ளது என்கின்றன புள்ளிவிவரங்கள். கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனங்களின் வருமானம் முதல் முறையாக சரிந்திருக்கிறது. தவிர இந்திய வங்கிகளின் மிகப் பெரிய சுமையாக உள்ள வாராக்கடனில் தொலைத் தொடர்பு துறையின் பங்கு மட்டும் ரூ.4.6 லட்சம் கோடி. கடந்த சில ஆண்டுகளில் முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தங்களது லாப சரிவை அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

சிக்கல்கள்

இந்திய தொலைத் தொடர்பு துறை 1995-ம் ஆண்டு தாராளமயமாக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் இந்த துறையில் இறங்கின. தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளும் அனுமதிக்கப்பட்டதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்குள்ள நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மிகப் பெரிய அளவில் தொலைத் தொடர்பு கட்டமைப்புகளை உருவாக்கின. ஆனால் நிறுவனங்களிடையேயான போட்டி, அரசின் வரிகள், ஸ்பெக்ட்ரம் அனுமதி கட்டணங்கள், உள்கட்டமைப்பு செலவுகள், செயலி சேவை போட்டிகள் என அனைத்தும் சேர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களை வீழ்ச்சியை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றன. எதிர்பார்த்த லாபம் இல்லாததால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டன.

தொலைத் தொடர்பு துறையில் நீடித்துவரும் சிக்கல்களை அடையாளம் காண அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (ஐஎம்ஜி) அரசு அமைத்தது. இதன் அறிக்கையும் நிலைமை மோசமாக உள்ளதை உணர்த்தியுள்ளது

அதிகரிக்கும் சுமைகள்

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நிறுவனங்களின் செலவினங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தொலைத் தொடர்பு அனுமதிக்கான கட்டணம் மற்றும் அலைவரிசை பயன்பாட்டு கட்டணங்களை குறைப்பது மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பது என பல கோரிக்கைகளை நிறுவனங்கள் முன்வைத்தன. ஏனென்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயில் சுமார் 30 சதவீதத்தை இதற்காக மட்டுமே செலவழிக்கின்றன. 2016-17ம் ஆண்டில் லைசென்ஸ் கட்டணமாக மட்டும் மத்திய அரசுக்கு ரூ. 78,000 கோடியை அளித்துள்ளன.

இந்த துறைக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக உள்ளது. இதனால் நிறுவனங்களுக்கு செலவினங்கள் அதிகரித்துள்ளன. எனவே இதை அத்தியாவசிய சேவையாக கணக்கிட்டு வரிவிலக்கு அளிக்க வேண்டும் அல்லது 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று இவர்கள் கோருகின்றனர்.

மத்திய அரசின் வரியல்லாத வருவாயில் 90 சதவீதம் இந்த துறையிலிருந்துதான் கிடைத்துவருகிறது. வருமான வரிக்கு அடுத்து மிகப்பெரிய வருவாயை அரசுக்கு அளிக்கும் துறையாக உள்ளது. எனவே தங்களது சுமைகளைக் குறைக்க குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை அரசுக்கு முன்வைத்தனர்.

ஐஎம்ஜி தனது பரிந்துரையில் அடுத்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பணம் அளிப்பதற்காக காலத்தை அதிகரிப்பது மற்றும் வட்டி விகிதத்தை குறைப்பது போன்றவற்றை அளித்துள்ளது. இது நிறுவனங்களின் கடன் சுமையை குறைப்பதற்கு உதவும். ஆனால் நிரந்தர தீர்வாக இருக்காது என நிறுவனங்கள் கூறுகின்றன.

எதிர்கால இலக்குகள்

இந்த நிலையில்தான் மத்திய அரசு பல டிஜிட்டல் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் நகரங்கள் போன்ற திட்டங்கள் இந்த துறையை நம்பித்தான் தொடங்கப்படுகின்றன. இதற்கான கூடுதல் முதலீடுகள் தேவையாக உள்ளன. இது தவிர 5 ஜி தொழில்நுட்பத்துக்கான முதலீடுகளையும் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு தேவையாக உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் நகரங்கள் தவிர, மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான தொலைத் தொடர்பு தொழில்நுட்பமும் அவசியமாக உள்ளது. இந்திய தொலைத் தொடர்பு துறை நிதிசார்ந்து வலுவாக இருந்தால்மட்டுமே மக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை கொண்டுவர முடியும்.

வேலைவாய்ப்பில் தாக்கம்

இந்த துறையை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 40 லட்சம் பணியாளர்கள் உள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள். தொலைத்தொடர்பு துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும் என்றும், இதனையொட்டி அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும், 20 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

கட்டண போட்டி

இந்தியாவில் இயங்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண விகிதமும் இதர நாடுகளைவிட குறைவு என்பதுடன், பயனாளிகளிடமிருந்து கிடைக்கும் வருமான சராசரியும் 2.5 டாலர்தான். இது கனடாவில் 49.84 டாலராகவும், அமெரிக்காவில் 38.09 டாலராகவும் உள்ளது. சீனாவில் 8.36 டாலர் என்கிற சராசரி வருவாய் உள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே சமீப சில ஆண்டுகளாக நிலவிவரும் உச்சபட்ச போட்டியால கட்டண விகிதங்களை உயர்த்த முடியாத நிலையில் உள்ளன. தவிர வாட்ஸ் அப், மெசெஞ்சர் போன்ற செயலிகளின் குரல்வழி சேவையும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கிறன.

இந்த சிக்கல்கள் நிலவினாலும் அரசு இன்னும் தெளிவான முடிவுகளை நோக்கி நகரவில்லை. இதனாலும் தொலைத் தொடர்பு துறையின் நிதிச் சுமை தொடர்ந்த வண்ணம் உள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கை 100 சதவீதத்தை தொடலாம். ஆனால் இந்த துறையின் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x