ஜம்மு - காஷ்மீரில் லித்தியம்: முன்னிருக்கும் சவால் என்ன?

ஜம்மு - காஷ்மீரில் லித்தியம்: முன்னிருக்கும் சவால் என்ன?
Updated on
2 min read

ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளில் லித்தியம் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இது ஸ்மார்ட்போன், மடிக்கணினிகள், மின்சார வாகனங்கள் போன்ற பலவற்றுக்கு ஆற்றல் வழங்கும் மையமாக உள்ளது.

புவி வெப்பமடைதலைச் சமாளிக்க கரிம வாயுவெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030-க்குள் மின்சார கார்களின் எண்ணிக்கையை 30% வரை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தச் சூழலில்தான் ஜம்மு-காஷ்மீரில் உள்ளரியாசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சலால்-ஹைமானா என்ற பகுதியில் லித்தியம் இருப்பைஇந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. இங்கு 59 லட்சம் டன் லித்தியம் படிமங்கள் இருப்பதாக சுரங்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியா தனது லித்தியம் பயன்பாட்டுக்கு இதுவரை சீனா, இந்தோனேஷியா, வியட்நாம், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினாவை நம்பியிருக்கும் நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு பல்வேறு துறைகளுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரவளர்ச்சிக்கும் உத்வேகம் அளிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு லித்தியம் போன்றஅரிய வகை தனிமங்கள், உலோகங்கள் மிக அடிப்படையானவை.

பேட்டரி முதல் மருத்துவம் வரை: நவீன உலகில் லித்தியத்தின் பயன்பாடு பேட்டரி முதல் மருத்துவம் வரை எங்கும் பரவிக்கிடக்கிறது. பல துறைகளில் புரட்சி ஏற்படுவதற்கு லித்தியம் அடிப்படையானதாக உள்ளது.

காலநிலை மாறுபாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி மின் வாகனங்களுக்கான தேவைதற்போது அதிகரித்து வருகிறது. எனவே வரும்ஆண்டுகளில் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான தேவையும் கணிசமான அளவில் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மருந்துகள், மனநிலை சிகிச்சை, விண்வெளி பாதுகாப்பு, கண்ணாடி மட்பாண்டங்கள் உருவாக்கம், லூப்ரிகண்ட் ஆயில் தயாரிப்பு, அலுமினியம் உற்பத்தி, பயிர் விளைச்சலை மேம்படுத்தும் உரங்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் லித்தியத்தின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.

காலநிலை மாறுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மின் வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுக்கு மாறி வரும் சூழ்நிலையில் லித்தியம் உலக அளவில் மதிப்புமிக்கதாகவும் மாறியுள்ளது. அதன் காரணமாக, லித்தியம் இருப்புகளை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க உலக நாடுகளும், நிறுவனங்களும் போட்டி போட தொடங்கியுள்ளன.

தற்போது லித்தியம் இருப்பு அதிகம் காணப்படும் பொலிவியா, அர்ஜென்டினா, சிலி ஆகிய நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. எனவே அந்நாடுகளுக்கு சுரங்கத் திட்டங்களை உருவாக்குவது, லித்தியத்தை ஏற்றுமதிசெய்வது என்பது சவாலான பணியாக உள்ளது. இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக, பொலிவியா, காங்கோ போன்ற நாடுகள் உள்ளன.

வருங்காலத்தில் லித்தியம்தான் வர்த்தகத்துக்கான மிகப்பெரிய ஆதாரம் என்பதை உணர்ந்துள்ள சீனா, பல நாடுகளின் நெருக்கடி சூழலை பயன்படுத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டு லித்தியம் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை நிலைநாட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகிலேயே அதிகளவாக 2.1 கோடி டன்லித்தியம் இருப்பு உள்ளதாக கருதப்படும் பொலிவியாவில் சீனா ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் நடப்பாண்டில் கையெழுத்திட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு: லித்தியம் உற்பத்திக்கான சுரங்க செயல்முறைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இல்லாமல் இருப்பதுதான் அத்துறைக்கான பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, சிலி, அர்ஜென்டினாவில் காணப்படும் கடினமான பாறைகள், நிலத்தடிஉவர்நீர்த் தேக்கங்களில் இருந்து லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. அதன் பிறகு புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்தி லித்தியம் தயாரிப்பு நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த செயல்முறைக்கு அதிக நீர் தேவைப்படுவதுடன், கரிம வாயு வளிமண்டலத்தில் அதிகமாக கலப்பதால் அங்கு சுற்றுச்சூழல் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

நீர், காற்று போன்ற இயற்கை வளங்களை பாதிப்படையச் செய்யும் லித்தியம் உற்பத்திக்கு சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் பகுதி வளமான புவியியல் பன்முகத்தன்மை கொண்ட ஜம்மு-காஷ்மீராக உள்ளது. மலைகள், பனிப்பாறைகள், புல்வெளிகள், பசுமையான பள்ளத்தாக்குகள், நீர்நிலைகள் மற்றும் வளமான பல்லுயிர் ஈரநிலங்கள் உள்ளிட்ட சிறப்பியல்புகள் கொண்ட இயற்கை அழகின் சிகரமாக ஜம்மு-காஷ்மீர் விளங்குகிறது.

இங்கு, கடந்த ஆண்டில் மட்டும் 1.88 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். வெளிநாட்டு பயணிகள் அந்நியச் செலாவணியை அதிகளவில் அள்ளித்தரும் சுற்றுலா மையமாக விளங்கும் காஷ்மீரின் சுற்றுச்சூழலில் ஏற்படும் எந்தவொரு சிறிய பாதிப்பும் இந்தியாவுக்கு பாதகமாகவே அமையும்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் லித்தியத்தைப் பெறுவதற்கான சுரங்க நடவடிக்கைகளை ஜம்மு-காஷ்மீர் சூழலியலை பாதிக்காமல் எவ்வாறு மேற்கொள்ளப் போகிறோம் என்பதுதான் நம் முன் தற்போதுள்ள இமாலய இலக்கு.

- அ. ராஜன் பழனிக்குமார் | rajanpalanikumar.a@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in