பங்குச்சந்தை: லாபம் தரும் நீண்டகால முதலீடு

பங்குச்சந்தை: லாபம் தரும் நீண்டகால முதலீடு
Updated on
2 min read

முகிலன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், அவரது நண்பர்கள் பலர் அவருக்கு நல்ல லாபம் ஈட்ட பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு பரிந்துரை செய்தனர். துரதிருஷ்டவசமாக பல சந்தர்ப்பங்களில், அவர் சில பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய போதெல்லாம், பல்வேறு காரணங்களால் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. அவரது முதலீடும் நஷ்டத்தை சந்தித்தது. ஓவ்வொரு சமயமும் அவர் சில நாட்கள் காத்திருந்த பிறகு, தனது பங்கை நஷ்டத்தில் விற்றார். பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்
கும் அதிர்ஷ்டம் தனக்கு இல்லை என்ற முடிவுக்கும் வந்தார்.

முகிலனைப் போலவே, நம்மில் பலர் பங்குச் சந்தையில் நல்ல லாபம் ஈட்ட, அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இது ஓரளவு உண்மையாக இருக்கலாம். ஒருவர் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவர் ஏராளமான வருமானத்தைப் பெறலாம். அதாவது ஒருவர் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவர் தொடர்ந்து ‘குறைவான விலைக்கு வாங்கவும், அதிகமான விலைக்கு விற்கவும்’ வாய்ப்பு அமையலாம். இது போன்று தொடர்ந்து பரிவர்த்தனை செய்யும்போது அவருக்கு மிக உயர்வான லாபம் கிடைக்கலாம். ஆனால் இதுபோன்று எப்போதும் குறைவான விலைக்கே வாங்கி அதிக விலைக்கு விற்க இயலாதவர்கள் நல்ல வருமானத்தை ஈட்ட முடியாது என்று பொருள் அல்ல.
பங்கு முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒப்பீட்டு அடிப்படையில் மதிப்பிட வேண்டும். அதாவது, பங்கு முதலீட்டின் மீதான வருவாயை வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் நிலையான வருமானம் அல்லது தங்கத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம் போன்றவற்றுடன் ஒப்பிட வேண்டும். வங்கிகளின் நிலையான வைப்பு அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டம் போன்றவற்றின் வருமானத்தை விட பங்குச் சந்தையில் அதிக வருமானம் கிடைத்தால், அதில் முதலீடு செய்வதே நல்லது. ஒரு சிலருக்கு சரியான பங்குகளில் சரியான நேரத்தில் முதலீடு செய்ததின் காரணமாக அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியது போல் செல்வம் பெருகலாம். இதுபோல எல்லோருக்கும் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்ட வாய்ப்பில்லை. ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் சில விதிகளுக்கு உட்பட்டு நல்ல லாபத்தை பெறுவது சாத்தியமே. எவர் ஒருவரும் போதுமான கட்டுப்பாட்டுடன், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய தயாராயிருந்தால் பங்குச் சந்தையில் நல்ல லாபம் ஈட்ட முடியும்.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். முகிலன் 2011 முதல் பத்து வருட காலத்திற்கு சென்செக்ஸில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,00,000 முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நிலை என்ன?

2011 – 12 நிதி ஆண்டில் சென்செக்ஸ் அடைந்த உச்ச புள்ளி 19,811 ஆகும். 2020 -21 நிதி ஆண்டில் சென்செக்ஸ் 52,517 புள்ளிகளாக உயர்ந்தது. இதன் அடிப்படையில் இந்தப் 10 ஆண்டுகளில், அவருக்குக் கிடைத்த மிகக் குறைந்த வருடாந்திர வருமானம் 11.52 % மற்றும் அதிகபட்ச வருமானம் 39.28% ஆகும். இது அவருக்கு நிறைவான ஒரு வருவாய்.

நீண்ட காலத்திற்கு, பெரிய நிறுவனங்களில் (லார்ஜ் கேப்) செய்த முதலீடு சிறந்த வருமானத்தை வழங்குகிறது.

பங்குச் சந்தை என்பது ஏற்ற இறக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் வாங்கிய பங்கின் விலை குறையும்போது பதற்றம் அடைந்து அதை விற்பதால்தான் நஷ்டம் ஏற்படுகிறது. மாறாக, விலை குறைந்ததும் அந்த பங்கை விற்கக் கூடாது. குறைந்தது 5 ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். ஒருவர் காத்திருக்கத் தயாராக இருந்தால், முதலீட்டில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.

உதாரணமாக, ஒரு நிறுவன பங்கில் முதலீடு செய்வதற்கு முன் அந்த பங்கு எப்போது சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதன் பிறகு 5 ஆண்டு இடைவெளியில் சராசரியாக எவ்வளவு சதவீதம் ஏற்றம் அடைந்திருக்கிறது என்பதை பார்த்தால் பெரும்பாலான பங்குகள் ஏற்றம் அடைந்திருக்கும். எனவே, அதிக வருமானத்திற்கு, ஒருவர் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பங்குச்சந்தையில் நல்ல வருமானம் பெற தேவை நீண்ட கால முதலீடும் கட்டுப்பாடுமே.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in