

சமீப காலமாக குறைந்துவரும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), பண மதிப்பு சரிவு, வட்டி விகித உயர்வு, உணவு, எரிபொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய நிலையில் பொருளாதார பின்னடைவை தவிர்க்க முடியாது என உலக வங்கி தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி) இந்த ஆண்டு உலகின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 2.2 % ஆக இருக்கும் என்றும், ஆனால் முன்பு யூகிக்கப்பட்ட3.1% வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பொதுவாக பொருளாதார நெருக்கடி என்பது தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு ஒரு நாட்டின் ஜிடிபி குறைவதை குறிக்கும். ஒரு நாட்டின் ஜிடிபியில் முதலீட்டுச் செலவும் நுகர்வுச்செலவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இரண்டுமே குறையும் போது வளர்ச்சி வேகம் குறையவே செய்யும்.
கரோனா தாக்கத்துக்குப் பிறகு பொருட்களின் உற்பத்தி சுணக்கமும், தேவை அதிகரிப்பும் பணவீக்கத்தை அதிகரித்தன. இதனிடையே ரஷ்யா - உக்ரைன் போரும் சேர்ந்து கொண்டு பணவீக்கத்தை மேலும் அதிகரித்தது.
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உச்சத்தை தொட்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. நம் நாட்டின் ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 6 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
பொதுவாக பணவீக்கத்தின் தாக்கம் பொருளாதார சரிவு ஏற்பட வழிவகுக்கும். ஏனெனில் அதிகப்படியான பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்படும். அதன் விளைவாக உற்பத்தி செலவுகள் கூடும். நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும். இதனால், வருமானம் சரிந்து நுகர்வோரின் தேவைகளும் குறையும். தேவைகள் குறையும்போது நிறுவனங்கள் முதலீடுகளை குறைத்துக் கொள்ளும். இது தேக்கநிலைக்கு வழிவகுக்கும்.
வட்டி விகிதத்தை உயர்த்தி பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்போது தற்போதைய உலக மயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் பாதிப்புகள் கடுமையானதாகவே இருக்கும்.
ஒரு நாடு மட்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும்போது அந்நியச் செலாவணி அதிக அளவில் உள்ளே வரும். இதனால் அந்த நாட்டின் நாணய மதிப்பு உயரும். ஏற்றுமதி அதிகரித்து பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஆனால் வட்டி விகிதத்தை ஒரே நேரத்தில் உலக நாடுகள் உயர்த்துகின்ற போது ஏற்றுமதியும் அதிகரிக்காது, வளர்ச்சியும் ஏற்படாது.
நெருக்கடி காலத்தில் வேலையின்மை அதிகரிக்கும்போது வங்கிகள் கடன் வழங்க தயங்கும் அல்லது கடன் வழங்கும் அளவை குறைத்துக் கொள்ளும். மேலும், வாடிக்கையாளர்களின் கடன் திருப்பி செலுத்தல் விகிதமும் குறையும். வளரும் நாடுகளின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளது. வெளிநாட்டுக் கடன்களை நம்புகிறபட்சத்தில் மிகவும் மோசமான நிலையை சந்திக்க நேரிடலாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு மதிப்பீட்டின்படி மூன்றில் ஒரு பங்கு வளரும் நாடுகளின் நாணய மதிப்பு 10 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் சூழ்நிலையில் இந்த நாடுகள் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.
வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாக இருப்பதால் வளரும் நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகும். இதனை எதிர்கொள்ள நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் உலக வங்கியின் தலைவர் மால்பஸ். இந்த யோசனையை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது.
பணவீக்கத்திற்கு அடிப்படை காரணமாக இருக்கக்கூடிய உற்பத்தி குறைவை சரிப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் அவர்களது நலன் சார்ந்த கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஊதியம் என்பது முதலாளிகளுக்கு உற்பத்தி செலவு மட்டுமல்ல எண்ணற்ற தொழிலாளர்களின் வருமானமாகவும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. அவர்களுடைய ஊதியம்தான் பொருள்களுக்கான தேவையை குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது. தேவையில் குறைபாடு ஏற்படுகிற போதுதான் சந்தை தேக்க நிலையை சந்திக்கிறது. வேலையின்மை பிரச்சினை உருவாகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆளும் அரசுகள் பொருளாதார கொள்கையை வகுக்க வேண்டும்.