அலசல்: வங்கித்துறையில் மேலும் ஒரு மாற்றம்!

அலசல்: வங்கித்துறையில் மேலும் ஒரு மாற்றம்!
Updated on
2 min read

காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட துறைகளில் முக்கியமானது வங்கித்துறை. இந்த துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சில வருடங்களுக்கு முன்பு வரை பொதுத்துறை வங்கிகளில் அதிகாரம் முழுக்க ஒருவரிடமே குவிந்திருந்தது. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (சிஎம்டி) பதவியில் ஒருவரே இருந்து வந்தார்கள். இந்த பதவியை இரண்டாக பிரிப்பதற்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது.

கடந்த 2004-05-ம் ஆண்டு ஏ.எஸ். கங்குலி தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. வங்கியின் தலைவர் என்பவர் இயக்குநர் குழுவை வழி நடத்துவதற்கும், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் என்பவர் தினசரி நிகழ்வுகளை செயல்படுத்துபவராக இருக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த கமிட்டியின் பரிந்துரைகளை தனியார் வங்கிகள் கடந்த 2007-08-ம் ஆண்டே அமல்படுத்தின. ஆனால் சிண்டிகேட் வங்கியின் சிஎம்டி ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பின்புதான் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளை பிரித்தது.

தற்போது அடுத்தகட்டத்துக்கு ஏற்ப வங்கிகள் புதிய பதவிகளை உருவாக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. தொழில் நுட்ப மாற்றங்களுக்கு வங்கியை கையாள தலைமை தொழில்நுட்ப அதிகாரி (சிடிஓ) மற்றும் வங்கியின் நிதி நிலையை கையாளுவதற்கு தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) ஆகிய பதவிகளை வங்கிகள் உருவாக்க வேண் டும் என ரிசர்வ் வங்கி கூறி யிருக்கிறது.

வங்கிகளுக்கு மட்டு மல்லாமல் ரிசர்வ் வங்கி யின் நிதிப்பிரிவை கவனிப் பதற்காகவும் தலைமை நிதி அதிகாரி என்னும் புதிய பொறுப்பை ரிசர்வ் வங்கி உருவாக்குகிறது. செயல் இயக்குநர் அந்தஸ்த்தில் ரிசர்வ் வங்கியின் தலைமை நிதி அதிகாரி இருப்பார். இப்பதவிக்கு வரும் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

வங்கிகளின் தலைமைச் தொழில்நுட்ப அதிகாரி பொறுப்புக்கு, பொறியியல் அல்லது எம்சிஏ (அல்லது அதற்கு இணையாக) படித்திருக்க வேண்டும், வங்கி தகவல் தொழில்நுட்பம் சார்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் இருக்க வேண்டும், இதில் ஐந்தாண்டுகள் நிர்வாக ரீதியில் பணியாற்றி இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

அதேபோல தலைமை நிதி அதிகாரி பொறுப்புக்கு சிஏ படித்திருக்க வேண்டும், 15 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். இதில் 10 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி நிறுவன அனுபமும், நிர்வாக அனுபவமும் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது.

பல தனியார் வங்கிகளில் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைமை தொழில் நுட்ப அதிகாரிகள் உள்ளனர். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொதுத்துறை வங்கிகளிலும் புதிய பதவிகள் உருவாக்கப்படும் என நம்பலாம். வானகரை ரேண்ட்சம் வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் வெளிவர தொடங்கி இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in