

எங்கு திரும்பினாலும் வேலைநீக்கம் பற்றிய செய்திகள்தான். சென்ற ஆண்டில் சர்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் 1.60 லட்சம் ஊழியர்களை வேலைநீக்கம் செய்தன. 2023 தொடங்கி ஒன்றரை மாதம்தான் ஆகிறது. அதற்குள்ளாக 334 நிறுவனங்கள் 1 லட்சம் ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளன.
உலகின் முன்னணி நிறுவனங்களாகவும் வேலைக்கு உத்தரவாதமிக்க நிறுவனங்களாகவும் கருதப்பட்டுவந்த அமேசான் 18,000, கூகுள் 12,000, மெட்டா 11,000, மைக்ரோசாஃப்ட் 10,000, டெல் 6650, ஐபிஎம் 3,900, ட்விட்டர் 3,700 என்ற எண்ணிக்கையில் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன.
இந்தியாவிலும் வேலைநீக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 71 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 21,532 ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளன. இவற்றில் பைஜூஸ், அன்அகாடமி, வொயிட்ஹேட் ஜூனியர், வேதாந்து ஆகிய 4 கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் 6,500 ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளன. தொழில்நுட்ப துறையைத் தாண்டி ஏனைய துறைகளிலும் வேலைநீக்கம் தீவிர மடைந்து வருகிறது.
திறன்மிக்கவர்கள், திறன் அற்றவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், வேலை நீக்கத்தை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இப்போதைய வேலைநீக்கச் சூழலுக்கு எதிர் திசையில் 2021-ம் ஆண்டுச் சூழல் இருந்தது. கரோனா நெருக்கடியிலிருந்து உலகம் மீண்டு கொண்டிருந்த நிலையில், 2021-ம் ஆண்டு தொடக்கத்தில், ஊழியர்கள் தாங்கள் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து விலகி, கூடுதல் வசதிகளை வழங்கும் வேறு நிறுவனத்துக்கு மாறத் தொடங்கினர்.
லட்சக்கணக்கில் ஊழியர்கள் ராஜினாமா செய்தனர். இது பெருராஜினாமா (Great Resignation) என்று அழைக்கப்பட்டது. திறன்மிக்க ஊழியர்கள் ராஜினாமா செய்து கொண்டிருந்ததால், நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின. ஊழியர்களை தக்கவைக்க பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலை நேரம் குறைப்பு, விடுமுறை நாட்கள் அதிகரிப்பு, வீட்டிலிருந்து பணிபுரிதல் உள்ளிட்ட வசதிகளை நிறுவனங்கள் வழங்கின. ஆனால், இப்போது அதே நிறுவனங்கள் ஊழியர்களை இரக்கம் பார்க்காமல் நீக்கி வருகின்றன. ஒரே ஆண்டுக்குள் ஏன் இந்த தலைகீழ் மாற்றம்?
கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதாரம்: 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா பரவல் உலகெங்கும் தீவிரமடைந்த நிலையில் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தன. இதனால் தொழில் செயல்பாடுகள் முடங்கின. உற்பத்தித் துறை உட்பட பல்வேறு துறைகளில் வேலையிழப்பு தீவிரமடைந்தது.
ஆனால், தொழில்நுட்பத் துறை மட்டும் இந்தக் காலகட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை எட்டியது. ஏனென்றால், கரோனா காலகட்டத்தில் உலகம் டிஜிட்டல் கட்டமைப்பை நோக்கி மிக வேகமாக நகர்ந்தது: வீட்டிலிருந்து பணிபுரிதல் எனும் புதிய நடைமுறை உருவானது; மருத்துவம், கல்வி என பல துறைகளும் டிஜிட்டல் மயமாகின.
இதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் இறங்கின. அந்த வகையில் கரோனா காலகட்டம் ஐடி நிறுவனங்களின் புதிய பாய்ச்சலுக்கான தொடக்கப் புள்ளியாக இருந்தது. மற்ற துறைகளில் வேலைநீக்கமும் ஊதியக் குறைப்பும் நிகழ்ந்த நிலையில், தொழில் வாய்ப்புகள் அதிகரித்ததால் தொழில்நுட்பத் துறையில் புதிய ஆட்சேர்ப்பும், ஊதிய உயர்வும் உச்சம் தொட்டன. இந்த அதீத ஆட்சேர்ப்புதான் தற்போது தீவிர பணி நீக்கத்துக்குக் அடிப்படையாக அமைந்துள்ளது.
2021 பிற்பாதியில் சர்வதேச அளவில் ஊரடங்குக் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், மக்களின் தேவை அதிகரித்தது. ஆனால், இந்தத்
தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி நிகழவில்லை. தவிர, ஒரே சமயத்தில் தேவை அதிகரித்ததால், விநியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
செமி கண்டக்டருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு கார் தயாரிப்பு முடங்கியது இந்த சமயத்தில்தான். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான முதல் நெருக்கடியாக இச்சூழல் அமைந்தது.
இரண்டாம் நெருக்கடி ரஷ்யா - உக்ரைன் போர். 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இந்தப் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக உணவுப் பொருட்கள், மூலப் பொருட்களுக்கான விலையும் உயர்ந்தது.
உலக அளவில் பணவீக்கம் உச்சம் தொட்டது. பணவீக்கத்தைக் குறைக்க அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியது. இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 6 முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து உலக நாடுகள் மீண்டுவந்த நிலையில், ரஷ்ய - உக்ரைன் போர் மீண்டும் ஒரு பொருளாதார தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தப் பொருளாதார தேக்கநிலை தொழில்நுட்பத் துறையில் தீவிரமாக பிரதிபலித்
தது. மத்திய வங்கிகளின் வட்டி விகித அதிகரிப்பால் தொழில்நுட்பத் துறையில் செலவினம் அதிகரித்து வருமானம் குறைந்தது. 2022-ம் ஆண்டில், அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்கு மதிப்பு 30 சதவீதம் அளவில் சரிந்தது. 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ஐடி நிறுவனங்கள் சந்தித்த மிகப் பெரிய சரிவு இது. இந்தச் சூழலில்தான், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செலவினங்களைக் குறைக்கும் நோக்கிலும் நிறுவனத்தை சீரமைப்புச் செய்யும் நோக்கிலும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கத் தொடங்கின.
உளவியல் காரணம்: நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதற்கு தங்கள் வருவாய் குறைவை காரணம் காட்டுகின்றன. ஆனால், வேலைநீக்கம் செய்திருக்கும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டத்தில் இயங்குபவை அல்ல. உலகம் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் என அதிநவீன தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தொழில்நுட்ப நிறுவனங்களை மையப்படுத்தியே இந்தப் பயணம் அமைகிறது. அந்த வகையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் வருவாய் குறைவு தற்காலிகமானதுதான்; எனவே வருவாய் குறைவு மட்டும் வேலைநீக்கத்துக்கு முழு காரணம் இல்லை. உளவியல் காரணமும் இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
1950-களின் மத்தியில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூக உளவியலாளர் ராபர்ட் சியால்டினி, நிச்சயமற்ற சூழலில் மனிதர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது தொடர்பாக ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். மனிதர்கள் நிச்சயமற்ற சூழலில், சுயமாக சிந்திப்பதற்குப் பதிலாக, பெரும்பான்மையினரின் பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்; பிறர் என்ன செய்கிறார்களோ அதையே செய்கின்றனர் என்பது அவரது கோட்பாட்டின் சாரம்சம்.
தற்போதைய சூழலுக்கு இது மிகவும் பொருந்துகிறது. ஒரு நிறுவனம் வேலைநீக்கத்தை அறிவித்ததும், ஏனைய நிறுவனங்களும், தேவையில்லா விட்டாலும் வேலைநீக்கத்தை மேற்கொண்டு வருகின்றன. உயர் பொறுப்பில் இருப்பவர்கள், நிறுவனம் நெருக்கடிக்கு உள்ளாகும்போது, அதைத் தீர்ப்பதற்கான உண்மையான வழியை கண்டறிவதற்குப் பதிலாக, மிக எளிய வழியான வேலைநீக்கத்தை நிர்வாகத்திடம் பரிந்துரைப்பதாகவும் கூறப்படுகிறது.
அணுகுமுறையில் பிரச்சினை: வேலைநீக்க அதிர்ச்சி ஒருபக்கம் என்றால், நிறுவனத்தின் அணுகுமுறை ஊழியர்கள் மனதில் மிகப் பெரும் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதையடுத்து அதன் 3,700 ஊழியர்களை ஒரே சமயத்தில் வேலையைவிட்டு நீக்கினார். “தேவைப்பட்டால், நாளொன்றுக்கு 12 மணி நேரம் என வாரம் 7 நாட்கள் வேலை பார்க்க வேண்டும். விருப்பம் இல்லை யென்றால் வேலையிலிருந்து விலகுங்கள்” என்று நிலபிரபுத்துவ காலகட்டத்து மனநிலையை அவர் வெளிப்படுத்தினார். கூகுள் நிறுவனம், ஊழியர்கள் அலுவலகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தருணத்தில், "இனி நீங்கள் வேலையில் இல்லை" என்று மின்னஞ்சல் அனுப்பியது.
அந்தக் கணமே அந்த ஊழியர்களுக்கும் அலுவலகத்துக்குமான தொடர்பு முடிக்கப்பட்டது. தங்கள் நிறுவனத்துக்காக உழைத்தவர்களை, அவர்களது எதிர்காலம் குறித்த எந்த ஒரு அக் கறையையும் வெளிப்படுத்தாமல், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கண நேரத்தில் வேலையிலிருந்து நீக்கி இருப்பது மிகமிக மோசமான அணுகுமுறை என்று விமர்சிக்கப்படுகிறது.
வேலைநீக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஒரு நிறுவனம் அதை எப்படி மேற்கொள்கிறது என்பதுதான் அந்நிறுவனத்தின் மதிப்பை தீர்மானிக்கிறது. நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் போது ஊழியர்களுக்கு, சலுகைகளை வழங்குவது பெரிய விஷயம் இல்லை. நிறுவனம் சரிவில் இருக்கும்போதும் ஊழியர்களின் மீது அக்கறை கொண்டிருப்பதும் அவர்களை கண்ணியமாக நடத்துவதும் மிக முக்கியம்.
வேலைநீக்கம் தொடர்பாக செய்திகள் வரும் போதெல்லாம், அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனமான ஏடி&டி-யின் அணுகுமுறையை முன்னுதாரணம் காட்டுவதுண்டு. ஏடி&டி நிறுவனத்தில் 2013-ல் 2.40 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்துகொண்டிருந்தனர். இவர்களில் 1 லட்சம் பேர் தற்போதைய காலகட்டத்துக்கு தேவையான திறனைக் கொண்டிருக்காத பணியாளர்கள் என்று அந்த நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்தது. அவர்களை வேலையிலிருந்து நீக்கி புதியவர்களை வேலைக்கு எடுத்தால்தான் நிறுவனத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல முடியும் என்ற சூழல்.
ஆனால்,அந்த நிறுவனம் அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு புதியவர்களை வேலைக்கு எடுக்கவில்லை. மாறாக, அவர்களை தக்கவைத்து அவர்களது திறனை மேம்படுத்தியது. விளைவாக, அந்நிறுவனத்தின் செயல்பாடு மேம்படத் தொடங்கியது. அடுத்த ஓரிரு ஆண்டிலேயே நிறுவனத்தின் வருவாய் 27 சதவீதம் அதிகரித்தது. காரணம் எளிமையானது. அந்நிறுவனம் ஊழியர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதியது. அவர்களுக்கு தாங்கள் பொறுப்பு என்ற நிலைப்பாட்டை அந்நிறுவனம் எடுத்தது. நிறுவனத்தின் இந்த அக்கறை காரணமாக அந்த ஊழியர்களுக்கும் அந்நிறுவனம் மீது கூடுதல் பிடிமானமும் நன்றியுணர்வும் ஏற்பட்டது.
இதனால், அவர்கள் கூடுதல் கவனம் எடுத்து உழைக்கத் தொடங்கினர். வேலை நீக்கத்தை மேற்கொண்டபோதிலும், தங்கள் ஊழியர்களுக்கு அடுத்த வேலை கிடைக்கும் வரையில், அவர்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்கிய நிறுவனங்களும் உண்டு. வேலையிழப்பை தவிர்க்க முடியுமா, முடியாதா என்பதைத் தாண்டி, ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை என்னவாக மதிக்கிறது என்பது இதில் உள்ளடங்கி இருக்கிறது. லாபத்தை மட்டும் ஒரு நிறுவனம் குறிக்கோளாக கொண்டு இயங்குவது ஆரோக்கியமானது அல்ல.
வேலைவாய்ப்பின் வடிவம் மாறுகிறது: தற்போதைய தீவிர வேலைநீக்கம், வேலைவாய்ப்பு கட்டமைப்பில் புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. உலகம் தொழில்நுட்பத்தை அடிப்படையாக் கொண்டு செயல்படுவதால், அத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் தொடர்ச்சியாக உருவாகிக்கொண்டிருக்கும். ஆனால், வேலைவாய்ப்பின் வடிவம் மாறுகிறது என்கின்றனர் வேலைவாய்ப்பு நிபுணர்கள். பல ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைப்பதற்காக முழுநேர ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்குப் பதிலாக, ஃப்ரீலான்ஸர்களிடம் வேலைகளை ஒப்படைப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஃப்ரீலான்ஸ்க்கென்று தனித் தளத்தை உருவாக்கி வருகின்றன. ஐடி துறைக்கு தேவையான திறன்களைக் கொண்டவர்களை இத்தளத்தில் ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்நிறுவனங்கள் வேலைகள் வழங்குகின்றன.
2027-ம் ஆண்டில் உலக அளவில் முழு நேர பணியாளர்களைவிட ஃப்ரீலான்ஸ் முறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் வேலைவாய்ப்பு கட்டமைப்பில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஃப்ரீலான்ஸர்கள். கரோனாவுக்குப் பிறகு ஃப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன.
முழு நேர வேலைவாய்ப்பில் கிடைக்கும் பணிப் பாதுகாப்பு, காப்பீடு போன்ற வசதிகள் ஃப்ரீலான்ஸ் முறையில் கிடைக்காது என்றாலும், முழு நேர வேலையைவிட ஃப்ரீலான்ஸ் மூலம் சம்பாதிக்கும் முடியும் என்பதால் மக்கள் ஃப்ரீலான்ஸை நோக்கி நகர்ந்து வருவதும் அதிகரித்துள்ளது. முழுநேர வேலையோ, ஃப்ரீலான்ஸ் வேலையோ ஒருவர் தாம் சார்ந்திருக்கும் துறையில் சந்தை வாய்ப்பு அதிகமுள்ள திறன்களை கற்றுக்கொள்ளவதன் மூலம் மட்டுமே, மாறிவரும் வேலைச்சூழலை எதிர்கொள்ள முடியும் என்பதாக நிலைமை உள்ளது.
வேலைநீக்க அதிர்ச்சி ஒருபக்கம் என்றால், நிறுவனத்தின் அணுகுமுறை ஊழியர்கள் மனதில் மிகப் பெரும் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வேலைநீக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஒரு நிறுவனம் அதை எப்படி மேற்கொள்கிறது என்பதுதான் அந்நிறுவனத்தின் மதிப்பை தீர்மானிக்கிறது.‘மன்னிக்கவும், உங்களை வேலையிலிருந்து நீக்குகிறோம்'
- முகம்மது ரியாஸ்; riyas.ma@hindutamil.co.in