

சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களுக்கும் மருத்துவ சேவையை விரைவாகவும் குறைவான கட்டணத்திலும் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடமாடும் ஆய்வகத்தை தொடங்கி உள்ளது ‘வீ லேப்ஸ்’ நிறுவனம்.
இதுகுறித்து ‘வீ லேப்ஸ்’ நிறுவனரும் மருத்துவருமான மசூத் இக்ரம் உடன் ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பாக உரையாடியதிலிருந்து: ஒடிசா போன்ற மாநில ஆய்வகங்களில் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டுமுன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த நடமாடும் ஆய்வகம். மக்கள்உடலில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு விரைவான மருத்துவ சேவையை கிடைக்கச் செய்வதே நடமாடும் ஆய்வக திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
தற்போதைய நிலையில் மருத்துவர் எழுதிக் கொடுக்கும் பரிசோதனைகளை எடுத்துக் கொள்ள குறைந்தபட்சம் 1 நாள் அதிகபட்சம் 3 நாள் வரை ஆகிறது. இதனால், நோயாளிகளுக்கு கால விரயம் மட்டுமின்றி, நோய்த் தன்மையின் தீவிரமும் அதிகரிக்க காரணமாக அமைந்து விடுகிறது. இதுபோன்ற எதிர்மறை விளைவுகளை கருத்தில் கொண்டே ‘வீ லேப்’ எனும் நடமாடும் ஆய்வக திட்டத்தை முன்மாதிரியாக செயல்படுத்தி வருகிறோம்.
பொதுவாக ஆய்வகங்களில் ஒரு நாள்பிடிக்கக்கூடிய பரிசோதனைகளை நாங்கள் 90 நிமிடங்கள் என கால நிர்ணயம் செய்து முடிவுகளை விரைவாக தருகிறோம். பெரும்பாலான பரிசோதனையின் முடிவுகளை 20 நிமிடங்களிலேயே நோயாளிகளுக்கு வழங்கி விடுகிறோம்.
மாரடைப்பு போன்ற நோய்களுக்கான பரிசோதனைகளை ஒரு சில நிமிடங்களில் அறிந்து கொள்வதால் நிலைமை விபரீதம் ஆவதற்கு முன்பாகவே கிசிச்சை எடுத்துக் கொள்ள இந்த நடமாடும் ஆய்வகம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதற்கான கட்டணங்களும் இதர ஆய்வகங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகவே நிர்ணயித்துள்ளோம்.
இந்த பயணத்தின் முதல் அடியாக, திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை புறநகர் மக்களுக்கு இந்த சேவையை வழங்க தொடங்கியுள்ளோம்.
இந்த நடமாடும் ஆய்வகத்தில் தைராய்டு, சர்க்கரை, ரத்தம் உள்ளிட்ட அனைத்துவிதமான அடிப்படை பரிசோதனைகளையும் மேற்கொள்ள தேவையான கட்டமைப்புகளை ரூ.30 லட்சத்தில்உருவாக்கியுள்ளோம். மேலும், பரிசோதனைக்கு தேவையான பிரத்யேக ரசாயனமூலப்பொருட்களை ஜப்பானில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் இறக்குமதி செய்கிறோம்.
சர்க்கரை, ரத்தம் தொடர்பான பரிசோதனைகளுக்கு வெளி ஆய்வகங்களில் ரூ.200-க்கும் அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், எங்களின் நடமாடும் ஆய்வகத்தில் ரூ.100 கட்டணத்திலேயே சேவை அளிக்கிறோம். கமிஷன் போன்ற தேவையற்ற செலவினங்கள் தவிர்க்கப்படுவதால் இது சாத்தியமாகிறது.
நடமாடும் ஆய்வகத்தில் நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கான முடிவுகள் ‘டெலிபேத்தாலஜி’ தொழில்நுட்பம் மூலம் எங்கள் மருத்துவரை சென்றடைந்து விடும். இந்த முடிவுகளை நுணுக்கமாக ஆய்வு செய்த அவர் உடனடியாக பரிசோதனைக்கான சான்றினை அளித்துவிடுவார்.
தற்போதைய நிலையில், இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலமாக நாளொன்றுக்கு 40 நோயாளிகள் வரை மருத்துவ சேவை வழங்கி வருகிறோம். கூடிய விரைவில் இந்த எண்ணிக்கையை மேலும்அதிகரிக்க சென்னையை 8 மண்டலங்களாக பிரித்து நடமாடும் ஆய்வகசேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தை தாண்டி கர்நாடகம், ஒடிசா, டெல்லி, மகாராஷ்டிர மாநிலங்களிலும் அடியெடுத்து வைக்க திட்டமிட்டுள்ளோம்.
தமிழக அரசு முன்னெடுத்துள்ள ‘இல்லம் தேடி மருத்துவ சேவை’ குக்கிராம மக்களையும் சென்றடைந்து அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் இந்த திட்டத்திலும் இணைந்து பயணிக்க வீ லேப்ஸ் மிக ஆர்வமாகவே உள்ளது என்று நம்பிக்கை துளிர்க்கிறார் டாக்டர் மசூத்.
- அ.ராஜன் பழனிக்குமார்; rajanpalanikumar.a@hindutamil.co.in