

கடந்த வாரம் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) சார்ந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். எம்எஸ்எம்இ நிறுவனங்களிடமிருந்து பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்கும் நிறுவனங்கள், அதற்கான பாக்கி தொகையை 45 நாட்களுக்குள் வழங்கி விட வேண்டும். இல்லையென்றால், அந்தத் தொகைக்கு வரி விலக்குக் கிடையாது என்று அவர் கூறினார்.
இதற்காக, வருமான வரி சட்டப்பிரிவு 43பி-ல் திருத்தம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். முதலீடு ரூ.1 கோடிக்குள் அல்லது ஆண்டு வருவாய் ரூ.5 கோடிக்குள் இருந்தால் குறு (Micro) நிறுவனம் என்றும், முதலீடு ரூ.10 கோடிக்குள் அல்லது ஆண்டு வருவாய் ரூ.50 கோடிக்குள் இருந்தால் சிறு (Small) நிறுவனம் என்றும், முதலீடு ரூ.50 கோடிக்குள் அல்லது ஆண்டு வருவாய் ரூ.250 கோடிக்குள் இருந்தால் நடுத்தர (Medium) நிறுவனம் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. ரூ.250 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் கொண்
டிருக்கும் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள் என்று வரையறுக்கப்படுகிறது.
நாடு முழுவதும் 9 கோடி எம்எஸ்எம்இ நிறுவனங்கள் (Micro, Small & Medium Enterprises) உள்ளன. இவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டின் ஜிடிபியில் எம்எஸ்எம்இ துறையின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் இத்துறை நீண்ட காலமாக ஒரு பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. எம்எஸ்எம்இ நிறுவனங்களிடமிருந்து பொருள்களை வாங்கும் பெரிய நிறுவனங்கள், அதற்கான தொகையை உரிய நேரத்துக்குள் வழங்காமல் இழுத்தடிக்கின்றன. இதனால் குறு, சிறு நிறுவனங்களில் பணப்புழக்கம் தடைபட்டு தொழில் செயல்பாடுகள் முடங்குகின்றன.
இந்தச் சூழலை மாற்றும் நோக்கில், வாங்கிய பொருள்களுக்கான தொகையை 45 நாட்களுக்கு வழங்கி விட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மத்திய அரசு, புதிய சட்ட திருத்தத்தை முன்மொழிந்துள்ளது. வருமான வரிச் சட்டப்பிரிவு 43பி-ல் ‘ஹெச்’ என்ற கூடுதல் பிரிவு சேர்க்கப்படுகிறது.
அதன்படி, பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என்ற வேறுபாடு இல்லாமல், எம்எஸ்எம்இ நிறுவனத்திடமிருந்து பொருள்களை வாங்கிய நிறுவனங்கள், அதற்கான தொகையை அதிகபட்சம் 45 நாட்களுக்குள் கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்நிறுவனம் அந்தத் தொகையை செலவாகக் காட்டி வரி விலக்கு கோர முடியாது. இந்தச் சட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆனால், இந்தச் சட்டத்தை எம்எஸ்எம்இ துறையைச் சார்ந்தவர்கள் ஏகபோகமாக வரவேற்கவில்லை.
ஒரு சாரார் இந்தச் சட்டம், எம்எஸ்எம்இ நிறுவனங்களை நிதி நெருக்கடியிலிருந்து பாதுகாக்கும் என்று கூறுகின்றனர். மற்றொரு சாரார், இந்தச் சட்டம், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். எம்எஸ்எம்இ துறையின் நீண்ட காலப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் குறித்து ஏன் அத்துறையினருக்குள் முரண்பாடு? உண்மையில் இந்தச் சட்டத்தால் பலனா, பாதிப்பா? இந்தக் கேள்விகளுக்கு எம்எஸ்எம்இ துறை சார்ந்து இயங்கும் இருவர் நமக்கு பதில் அளிக்கிறார்கள்.
அம்ரித் (ஒருங்கிணைப்பாளர், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு - ஃபிக்கி, தமிழ்நாடு): சரியான நேரத்தில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. தங்களுக்கு வர வேண்டிய பணம் உரிய நேரத்தில் கிடைக்காமல் இருப்பதால் குறு, சிறு நிறுவனங்கள் திணறுகின்றன. குறு, சிறு நிறுவனங்களால் தங்களுக்கு வர வேண்டிய பணத்தை உரிய நிறுவனத்திடம் அழுத்தமாக கேட்க முடிவதில்லை.
அப்படி கேட்கும்பட்சத்தில், தொடர்ந்து வர்த்தகம் செய்வதை அந்நிறுவனம் நிறுத்திவிட வாய்ப்புண்டு. இதனால் வேறுவழியில்லாமல், குறு, சிறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை சப்ளை செய்துவிட்டு, பணத்துக்காக நீண்ட நாள் காத்துக்கிடக்கின்றன. தற் போது மத்திய அரசு அறிவித்திருக்கும் சட்டத்தால் இந்தச் சூழல் மாறும். இனி அவர்களுக்கான தொகை 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும் என்பதால், அவர்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும். அது அவர்களது தொழிற்செயல்பாடுகளை மேலும் ஊக்குவிக்கும். ஆரம்பத்தில், இந்தச் சட்டத்தால் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்லச் சூழல்மேம்பட்டுவிடும். ஜிஎஸ்டி கொண்டு வரும்போது முதலில் அது மிகப் பெரும் சிக்கலாக அமைந்தது. ஆனால்,பிற்பாடு நிலைமை சீரடையத் தொடங்கியது. அதே போல்தான் இதுவும். ஒட்டுமொத்தத்தில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு, எம்எஸ்எம்இ துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். அந்த வகையில் வரவேற்கத்தக்க சட்டம் இது.
எஸ்.பாலாஜி (ஆடிட்டர், பார்ட்னர் பாலாஜி & துளசிராமன், திருப்பூர்): இந்தச் சட்டம் வரவேற்கத்தக்க ஒன்று தான் என்றாலும், இதன் பலன் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு முழுமையாக செல்ல வேண்டுமென்றால், சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இந்த அறிவிப்பு மேலோட்டமாக பார்ப்பதற்கு, குறு, சிறு நிறுவனங்களுக்கு பலன் அளிக்கக்கூடியதாக தோன்றும். ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை.
கள நிலவரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். எப்படி, சிறிய நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்துவிட்டு பணத்துக்காக காத்துக்கொண்டிருக்கின்றனவோ, அதுபோலவே அந்த சிறிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்குத் தேவையான பொருட்களை மற்றொரு சிறிய நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கும்.
அதற்கான தொகையை அவை 45 நாட்களுக்குள் வழங்கிவிடாது. கூடுதல் நாட்கள் எடுக்கும். அது இயல்பானது. ஏனென்றால், எப்போது பெரிய நிறுவனங்களிடமிருந்து பணம்வருகிறதோ, அப்போதுதான் சிறிய நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கியைக் கொடுக்கும். மத்திய அரசின் அறிவிப்பின்படி, 45 நாட்களுக்குள் பணத்தை வழங்காவிட்டால், அந்தத் தொகையை செலவாக முன்வைத்து வரி விலக்குக் கோர முடியாது.
பெரிய, சிறிய என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரு பெரிய நிறுவனம், சிறிய நிறுவனத்துக்கு 45 நாட்களுக்குள் பாக்கியை வழங்கத் தவறுகிறது. இதனால், அந்நிறுவனத்துக்கு அந்தத் தொகைக்கான வரிச் சலுகை கிடைக்காமல் போகிறது.
இப்போது சிறிய நிறுவனத்துக்கு வருவோம். அந்த பெரிய நிறுவனம் உரிய காலத்துக்குள் தொகையை கொடுக்கவில்லை எனில், எப்படி அந்த சிறிய நிறுவனம் தான் பாக்கிவைத்துள்ள மற்ற நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்குள் தொகையைக் கொடுக்கும்? அப்படி கொடுக்கத் தவறும்போது, அந்த சிறிய நிறுவனத்துக்கும் வரிச் சலுகை கிடைக்காது.
வரிச் சலுகை கிடைக்காவிட்டால், பெரிய நிறுவனங்களால் சமாளித்துவிட முடியும். ஆனால், சிறிய நிறுவனங்களால் சமாளிக்க முடியாது. அந்த வகையில் இந்தச் சட்டம் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் சிறிய நிறுவனங் களுக்கு கூடுதல் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். சரி, அப்படியென்றால், காலம் தாழ்த்தி பணம் வழங்கப்படுவதை எப்படி தடுப்பது? வழி இருக்கிறது. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டும் நிறுவனம் முதல் ரூ.250 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் என பல தரப்பட்ட நிறுவனங்கள் எம்எஸ்எம்இ என்ற வகைப்பாட்டுக்குள் வருகின்றன.
பெரிய நிறுவனங்களிடமிருந்து உரிய நேரத்தில் பணம் வராமல் இருப்பதுதான் சிறிய நிறுவனங்களுக்கு சிக்கலாக இருக்கிறது. எனில், இந்தச் சட்டத்தை பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியதாக மாற்ற வேண்டும். சிறிய நிறுவனங்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதனால் சிறிய நிறுவனங்கள் வரிச் சலுகையை இழக்க வேண்டிய சூழல் ஏற்படாது.
- முகம்மது ரியாஸ்; riyas.ma@hindutamil.co.in