

கடந்த 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி தொடர்பான முக்கியமான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இதில் புதிய வருமான வரி முறையில் சில சலுகைகளை வழங்கி உள்ளார். ஆனால் பழைய வருமான வரி முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், எந்த முறையை தேர்ந்தெடுப்பது என்பதில் பொதுமக்களுக்கு குழப்பம் நிலவுகிறது. யாருக்கு எந்த முறை சிறந்தது என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.
தனிநபர் வருமான வரி விதிப்பில் பழையமுறை, புதிய முறை என 2 நடைமுறைகள் உள்ளன. புதிய முறை 2020-21 நிதியாண்டில் அறிமுகம்செய்யப்பட்டது. இரு நடைமுறைகளிலும் தற்சமயம் ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
இந்த பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புதிய வரி விதிப்பு முறையில் 6 அடுக்காக இருந்த வரி விகிதங்கள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த முறையில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ.3 லட்சம் வரை வரி கிடையாது. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5%, ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10%, ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15% , ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% , ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி செலுத்த வேண்டும்.
இதன்படி, ஒருவர் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வருவாய் ஈட்டினால் அவர் ரூ.45,000 வரி செலுத்த வேண்டும். இதற்கு முன்பு இதே வருமான வரம்புக்கு ரூ.60,000 வரி செலுத்த வேண்டி இருந்தது. தற்போது வரி விகிதம் 25% குறைக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வருவாய் ஈட்டினால் அவர் ரூ.1.5 லட்சம் வருமான வரி செலுத்த வேண்டும். இதற்கு முன்பு இதே வருமான வரம்புக்கு ரூ.1,87,500 வரி விதிக்கப்பட்டது. தற்போது 20 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் பழைய வரி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாகவே தொடர்கிறது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5%, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20%, ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படுகிறது.
பழைய வரி நடைமுறையின் சாதகம்: பழைய வருமான வரி முறையில் அதிக வரி விதிப்பது போன்ற தோற்றம் நிலவும். ஆனால், இந்த முறையில் வரியைக் குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை வருமான வரித் துறை வழங்கி உள்ளது. குறிப்பாக, வரி விலக்கு மற்றும் கழிவு என 70 வகைகளை வருமான வரித் துறை பட்டியலிட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி வரிச் சலுகை பெற முடியும்.
குறிப்பாக, வீட்டுக்கடன் மீதான வட்டியில் ரூ.2 லட்சம் வரையில் வரி விலக்கு பெறலாம். இதுபோல, முதலீடு, சேமிப்பு உள்ளிட்ட வகைகளின் கீழ் கழிவு பெறலாம். வருமான வரிச் சட்டம்80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வகை வரிவிலக்கு கோரலாம். பிபிஎப், இபிஎப், ஆயுள் காப்பீடு, குழந்தைகளின் கல்விக்கட்டணம் உள்ளிட்டவை இந்த பிரிவின் கீழ் வரும். இதுதவிர மருத்துவக் காப்பீடு செலுத்தினாலும் வரிவிலக்கு பெறலாம்.
பொதுவாக எல்லோருக்கும் சேமிப்பு பழக்கம்இருப்பதில்லை. இந்நிலையில், பழைய வரிமுறை தனிநபர்கள் மத்தியில் சேமிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. வரியை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த சேமிப்பு பின்னாளில், திருமணம், வீடுவாங்குதல், திடீர் மருத்துவ செலவு ஆகியவற்றைசமாளிக்க பெரிதும் உதவியாக உள்ளது.
பாதகமான அம்சங்கள்: பழைய வரி முறையில் சில முதலீட்டு திட்டங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் எடுக்க முடியாதவையாக உள்ளன. இதனால் அவசர தேவைக்கு முதலீட்டை எடுக்கமுடியாமல் போகலாம். மேலும் வரி சேமிப்பு திட்டங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
புதிய வரி முறையின் சாதகம்: புதிய வரி நடைமுறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி இல்லை. பழைய நடைமுறையில் 3 அடுக்கு வரி விதிப்பு உள்ள நிலையில் இதில்5 அடுக்கு உள்ளது. பழைய முறையைவிட இதில் ரூ.15 லட்சம் வரையில் குறைவானவரி விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட முதலீட்டு திட்டத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் இதில் இல்லை.
பாதகமான அம்சங்கள்: புதிய நடைமுறையில் வீட்டுக் கடன் வட்டி, கல்விக் கட்டணம், இபிஎப், பரஸ்பர நிதி முதலீடு, ஆயுள் காப்பீடு பிரீமியம் ஆகியவற்றுக்கு வரிச்சலுகை பெற முடியாது. மேலும் ஆண்டு வருமானம் ரூ.7.5 லட்சத்தைத் தாண்டிவிட்டால் (ரூ.50 ஆயிரம் நிலையான கழிவு)ரூ.3 லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு உள்ளது. அதற்கு மேற்பட்ட வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும்.
எதை தேர்ந்தெடுப்பது: இரண்டு வரி நடைமுறையிலும் சாதகமான அம்சங்களும் உள்ளன. பாதகமான சில அம்சங்களும் உள்ளன. வரிதாரர்கள் இரண்டையும் தெரிந்து கொண்டு தங்களுக்கு எது சாதகமோ அதை தேர்வு செய்ய வேண்டும். வீட்டுக் கடன் வட்டி, கல்விக் கட்டணம், இபிஎப், பரஸ்பர நிதி முதலீடு, ஆயுள் காப்பீடு பிரீமியம் ஆகியவற்றை செலுத்துவோர் பழைய வரி முறையை தேர்ந்தெடுப்பது நல்லது.
இதுபோன்ற இனங்களில் முதலீடு செய்யாதவர்கள் புதிய வரி முறையை தேர்வு செய்யலாம். குறிப்பாக, புதிதாக வேலைக்கு சேர்ந்த இளைஞர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். இதுபோல, வருமான வரி மீதான அதிகபட்ச உபரி வரி (சர்சார்ஜ்) 37-லிருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரூ.5.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு இந்தமுறையின் கீழ் ரூ.19 லட்சம் வரி மிச்சமாகும். மேலும் இணையத்தில் வருமான வரி கணிப்பான்கள் மூலம், தங்கள் வருமானத்தை உள்ளீடுசெய்து எதில் வரி குறைவாக உள்ளதோ அதை தேர்ந்தெடுக்கலாம்.
- க.ஆனந்தன்; anandhan.k@hindutamil.co.in