

கரோனா வைரஸ் பெருந்தொற்றானது மனித வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கல்வி, தொழில், வர்த்தக நடவடிக்கைகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பூகோள அமைப்பில் சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்பு ஆலைகள் இடம் மாறுவதற்கு கரோனா முக்கிய காரணியாக மாறியுள்ளது.
கரோனா வைரஸின் பிறப்பிடமான சீனா,முதலில் பாதிப்புகளை மறைத்துக் காட்டியது. அதன் பிறகு கரோனாவின் தாக்கம் விஸ்வரூபம்எடுத்தது. இதையடுத்து சீனாவில் செயல்பட்டுவந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது ஆலைகளை அமைக்க வேறு நாடுகளுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவுக்கு.
ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பது, இந்தியா மீது சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெற உதவியுள்ளது. உலக வங்கி, பன்னாட்டு நிதியம், மோர்கன் ஸ்டான்லி போன்ற உலகப் புகழ்பெற்ற நிதி ஆய்வுஅமைப்புகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி வேகம் ஏனைய உலகநாடுகளைவிட அதிகமாக இருக்கும் என்று தொடர்ச்சியாக கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
மேலும், உலகின் பெரிய பொருளாதார நாடுகள்பட்டியலில் இப்போது 5-வது இடத்தில் உள்ளநிலையில், 2030-ம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்பது இந்தியாவின் இலக்காக உள்ளது. இதற்காகவே, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு வரும் ஆப்பிள்: செல்போன் பயன்பாட்டில் வாடிக்கையாளர்களிடையே எப்போதும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்கென்று தனி மதிப்பு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் சீனாவில் ஏற்பட்ட குளறுபடிகளை அடுத்து இந்தியாவில் ஆலை செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக பெங்களூருவில் மிகப்பெரிய ஆலையை அந்நிறுவனம் அமைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை 25 சதவீதமாக அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் சில்லறை விற்பனையகங்களை அதிக அளவில் திறப்பதன் வாயிலாக அதிகவேலைவாய்ப்பை உருவாக்கவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை டெல்லி,மும்பை போன்ற நகரங்களில் தொடங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 லட்சம் கூகுள் போன்: ஐபோனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் இந்தியாவில் ஆலை அமைத்து ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இது, அந்நிறுவனத்தின் ஆண்டுஉற்பத்தியில் 10 முதல் 20 சதவீத பங்காக இருக்கும்.இந்தியாவில் பிக்ஸல் போன்களுக்கான தேவையை ஈடுசெய்ய இந்தத் தயாரிப்பு மிகவும்உதவியாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன் இருக்கும் சவால்: ஏற்றுமதி, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்டதே ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டம். ஆனால், அந்த இலக்குகள் எட்டப்பட்டதா என்றால் அதுஇன்னமும் கேள்விக்குறியே. ஆனால், சுமார் 142 கோடி மக்கள் சக்தியை கொண்ட இந்தியாவில் அந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்பதே சர்வதேச நிபுணர்களின் கணிப்பு.
இந்திய பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு இன்னும் தேக்க நிலையில்தான் உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதற்கு ஏற்ற சிறப்பான திட்டம்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இன்னமும் உள்ளது.
அரசு அதிகார மையங்கள், எதிர்கால சிக்கல்களை கருத்தில்கொண்டு ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, ஹார்லி டேவிட்சன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கெனவே இந்தியாவை விட்டு வெளியேறியுள்ள சூழ்நிலையில், இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானதாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல்தான் டெஸ்லா நிறுவனமும் இந்தியாவில் தனது வர்த்தகத்தை தொடங்க ஆர்வம் தெரிவித்தது. ஆனால், அது முறையாக கண்டு கொள்ளப்படாததால் அருகில் உள்ள இந்தோனேசியாவுக்கு அந்த வாய்ப்பு சென்றுவிட்டது.
அரசு நடைமுறை மூலமும் தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்தி சலுகைகள்வழங்குவதன் மூலமும் இந்த பின்னடைவுகளை சரிசெய்ய முடியும். இதில் அரசு கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
சீனாவை விஞ்சுமா இந்தியா: தற்போதைய சூழ்நிலையில் பொருளாதாரம், தொழில் வளர்ச்சியில் சீனாவை இந்தியா விஞ்ச முடியுமா என்ற கேள்வி பொதுத் தளத்தில் பரவலாகியுள்ளது. இதற்கு பதில் கூற வேண்டுமெனில் இரு நாடுகளுக்கிடையிலும் உள்ள சாதக பாதகமான அம்சங்களை சீர்தூக்கி பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது.
இந்தியா தனது பொருளாதார சீர்திருத்தத்தை 1990-களின் முற்பகுதியில்தான் தொடங்கியது. ஆனால், சீனாவைப் பொருத்தவரையில் கடந்த கால்நூற்றாண்டில் தனது பொருளதார வலிமையை உலக வல்லரசுகளுக்கு நிகராக வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா ரஷ்யா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக சீனா டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
குறிப்பாக, புதிய நகரங்கள், அதிவேக ரயில்பாதைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், உற்பத்தி துறை கட்டமைப்புகளில் முன்னேறிய நாடுகள் வியப்படையும் அளவிலான வளர்ச்சியை சீனா சாத்தியமாக்கிக் கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகின் தொழிற்சாலையாக சீனா மாறியுள்ளது என்றால் அது மிகையான வார்த்தையில்லை.
முதலீட்டை அதிகரிக்க வேண்டும்: ஆனால், இந்தியாவைப் பொருத்தவரையில் மேற்கூறிய அனைத்து தளங்களிலும் பின்தங்கியே உள்ளது என்பதை மறுப்பதற்கு இயலாது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 30 சதவீதத்தை மட்டுமே முதலீடு செய்கிறது. அதேசமயம், சீனா 50 சதவீத முதலீட்டை மேற்கொள்கிறது. எனவே, சீனாவுடன் போட்டியிட முதலீட்டை 20 சதவீதம் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இந்திய தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியானது பெரிய அளவிலான தனியார் துறை முதலீடுகளால் மட்டுமே தூண்டப்பட்டது. எனவே,இந்தியாவில் தொழிற் கொள்கை சார்ந்த முடிவுகளில் அரசியல் தாக்கம் இருக்கும் வரை தனியார்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டும் என்பதே வெளிப்படையான உண்மை.இவற்றை கருத்தில் கொண்டுதான் வளர்ச்சிக்கான தடைகளைக் களைவதில் இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு, உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தற்போது மக்கள் தொகையில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடம் பிடிக்க உள்ளது. அந்த வகையில் சீனாவைக் காட்டிலும் இந்தியாவில்தான் அதிக வேலைத் திறன் கொண்ட இளைஞர்கள் பட்டாளம் உள்ளது.
ஒரு குழந்தை கொள்கையை கடைபிடித்ததால் 2050 வாக்கில் சீனாவில் குழந்தைகள் மற்றும்வயதானவர்கள் எண்ணிக்கை 35 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக இரட்டிப்பாகும் நிலை உருவாகியுள்ளது. இது, சீனாவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், உழைக்கும் வயதினருக்கான மக்கள் தொகை இந்தியாவில் அதிகரித்து வருவது வளர்ச்சிக்கு சாதகமான அம்சமே. ஏன் இதுவே கூட, எதிர்காலத்தில் சீனாவை விஞ்ச இந்தியாவின் கையில் கிடைத்த பிரம்மாஸ்திரமாகவும் மாறலாம்.
- அ.ராஜன் பழனிக்குமார்; rajanpalanikumar.a@hindutamil.co.in