

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரும் தொழிலதிபருமான கவுதம் அதானியின் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம்கடந்த வாரம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை வெளியான இரண்டு தினங்களில் அதானி குழும நிறுவன பங்குகள் ரூ.4.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தன.
கடந்த 2 ஆண்டுகளில் கவுதம் அதானி அடைந்த வளர்ச்சி யாவரையும் வியக்கச் செய்யக்கூடியது. கரோனா காலகட்டத்தில் அவரது ஒரு நாள் வருமானம் ரூ.1,000 கோடியாக உயர்ந்தது. 2020-ம் ஆண்டு கரோனாவுக்கு முன்பு அவரது சொத்து மதிப்பு 9 பில்லியன் டாலராக (ரூ.73 ஆயிரம் கோடி) இருந்தது. இவ்வாண்டு தொடக்கத்தில் அது 137 பில்லியன் டாலராக (ரூ.11 லட்சம் கோடி) உயர்ந்த நிலையில், அவர் உலக பில்லியனர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார்.
அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தால், பெரும் லாபம் உத்தரவாதம் என்று மக்கள் நம்பினர். அவரது நிறுவனப் பங்குகளை பெரும்தொகை கொடுத்து வாங்கினர். பொதுத் துறை நிறுவனங்களும் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தன. எல்ஐசி ரூ.77 ஆயிரம் கோடியைஅதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கிறது. பொதுத் துறைவங்கிகள் அதானி குழுமத்துக்கு கடன்களை வாரி இறைத்துள்ளன. இத்தகைய சாம்ராஜ்யம் இன்று, ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஆட்டம் காணத் தொடங்கி இருக்கிறது
அதானியின் வளர்ச்சி: குஜராத்தில், 1962-ம் ஆண்டு கவுதம் அதானி பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் 7 பேர். அவரது தந்தை ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அதானிக்கு அதில் ஆர்வமில்லை. கல்லூரி படிப்படை பாதியில் நிறுத்திவிட்டு தன்னுடைய 16 வயதில் மும்பைச்சென்றார் அதானி. அங்கு ஒரு வைர வியாபார நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
அந்த சமயத்தில் அவரது மூத்த சகோதரர் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தை அகமதாபாத்தில் ஆரம்பிக்கவும், அதை நிர்வகிக்க அதானி மீண்டும் சொந்த மாநிலம் திரும்புகிறார். அங்கு வர்த்தக உலகம் பற்றி ஆழ்ந்த புரிதல் அவருக்குக் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாகவே, அவர் 1988-ம்ஆண்டு ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை தொடங்கினார். தற்போது அது அதானி எண்டர்பிரைசஸ் என்று அழைக்கப்படுகிறது.
உலகமயமாக்கலுக்குப் பிறகு அதானியின் தொழில் பயணம் ஏற்றம் காணத் தொடங்கியது. 1994-ம் ஆண்டு முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்க குஜராத் அரசு முடிவு செய்தது. இந்த ஒப்பந்தம் அதானிக்கு கிடைத்தது. இது அதானியின் தொழில் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
அதன் தொடர்ச்சியாக அவரது அரசியல் தொடர்பு படிப்படியாக விரிவடையத் தொடங்கியது. தற்போது அதானி குழுமம் நிலக்கரி சுரங்கம், துறைமுகம், மின் உற்பத்தி, விமான நிலையம், தகவல் தொழில்நுட்பம் என பல தளங்களில் செயல்பட்டு வருகிறது. நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வந்த பிறகு அதானி நிறுவனங்கள் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டத் தொடங்கின. முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் சர்வ வல்லமைமிக்க தொழிலதிபராக அதானி உருவெடுத்தார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை என்ன சொல்கிறது? - இந்தச் சூழலில்தான் ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியின் தொழில் வளர்ச்சியை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமெரிக்காவைச் சேர்ந்த நிதிஆய்வு நிறுவனம். 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கார்ப்பரேட் நிறுவனங்களில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்வதை தனது பணிகளில் ஒன்றாகக் கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனமானது வணிக உலகில் நடக்கும் முறைகேடுகளை புலனாய்வு செய்து பொதுவெளிக்குக் கொண்டு வருகிறது. அப்படியாக, இந்நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வந்துள்ளது. அதானி குழுமத்தின் முன்னாள் உயர் அதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும், தகவல் திரட்டியுள்ளது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அறிக்கையை அந்நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட நிலையில் அது இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமம் பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை உயர்த்திக்காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்புஉள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவிக்கிறது.
பங்கு முறைகேடு: அதானி குழுமம் பல ஆண்டுகளாக அதன் நிறுவனப் பங்குகளிலும், கணக்கியல் முறையிலும் மோசடி செய்து வருகிறது. நிதிநிலை சிறப்பாக இருப்பதாக பொய்யாகக் காட்டி அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி அதானி குழுமம் லாபம் பார்த்துள்ளது.
அதிக கடன்: பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் பங்கு விலை கடந்த மூன்று ஆண்டுகளில் 819 சதவீதம் அதிகரித்ததன் மூலம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர் (ரூ.8.20 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி அதானி குழுமம் வங்கிகளிலிருந்து பெரும் தொகை கடன் பெற்றுள்ளது. அக்குழுமத்தின் கடன்தொகை ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், அதானி நிறுவனங்களின் பங்குகள்அதனுடைய நிதிநிலையோடு ஒப்பிடும்போது 85 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
வரி ஏய்ப்பு: வரி செலுத்தத் தேவையில்லாத மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம், கரிபீயன் தீவுகள் ஆகிய நாடுகளில் போலிநிறுவனங்களை தொடங்கி அதானி குழுமத்தினர் வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இந்த நிறுவனங்கள் எந்த வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகத் தகவல்கள்இல்லை.
பணியாளர்கள் யாரும்இல்லை, தனியான முகவரியோ, தொலைபேசி எண்களோ இல்லை. இருப்பினும் ஒட்டு மொத்தமாக பல பில்லியன் டாலர்கள் இந்நிறுவனங்களின் கணக்கில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது. இவை தவிர மேலும் சில குற்றச்சாட்டுகளையும் ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ளது.
அதானி குழுமத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் 22 பேரில் 8 பேர் அதானியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குழுமத்தின்முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இவர்களிடம் மட்டுமே இருக்கிறது.
அதேபோல் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களில் 25 சதவீத பங்குகள் நிறுவனர்களை சாராதவர்களிடம் இருக்க வேண்டும் என்பது விதி.ஆனால் அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களில் இந்த விதி கடைப்பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இப்படி அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. தங்கள் குழுமத்துக்கு தீங்கிழைக்கும் நோக்கில், ஆதாரமற்ற தவறானதகவலை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது என்றும் அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் அதானிகுழுமம் தெரிவித்துள்ளது.
ஆனால், ஹிண்டன்பர்க் தன்னுடைய அறிக்கையில்உறுதியாக நிற்கிறது. “எங்கள் அறிக்கையில் அதானி குழுமத்தை நோக்கி 88 கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால், இவற்றில்ஒன்றுக்குக்கூட அதானி பதிலளிக்கவில்லை.
அவர்கள் எங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் நாங்கள் அதை வரவேற்கிறோம். நாங்கள் அமெரிக்காவை மையமாகக்கொண்டு இயங்குவதால் அமெரிக்காவில் வழக்கு தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படிசெய்யும்பட்சத்தில் நாங்கள் சட்டரீதியில், அதானி குழுமத்திடமிருந்து அதன் நடவடிக்கைகள் குறித்த மேலும் முக்கியமான ஆவணங்களை நீதிமன்றம் மூலம் கேட்போம்” என்று ஹிண்டன்பர்க் சவால் விடுத்துள்ளது.
அதானி குழுமத்தின் முறைகேடு அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “கருப்புப் பணம் ஒழிப்பைப் பற்றி பேசும் மோடி அரசு, ஏன் அதானி விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியும் அதானி குழும முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களுக்கு என்ன ஆபத்து? - பொதுத் துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. எல்ஐசி அதானி குழுமத்தில் ரூ.77,000 கோடி முதலீடு செய்துள்ள நிலையில், இந்தப்பிரச்சினையால் ரூ.23 ஆயிரம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ, இந்தியன் வங்கி ஆகிய பொதுத் துறை வங்கிகள் அதானி குழுமத்துக்கு பெருமளவில் கடன் வழங்கியுள்ளன. இவையெல்லாம் மக்கள் பணம். இதனால், இந்திய நிதிக் கட்டமைப்பில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், அதானி விவகாரம் எளிதில் முடிந்துவிடுவதுபோல் தெரியவில்லை!
- சித்தார்த்தன் சுந்தரம்; sidvigh@gmail.com