கியூபாவின் அரசியல், பொருளாதாரப் பயணம்

கியூபாவின் அரசியல், பொருளாதாரப் பயணம்
Updated on
2 min read

15-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டின் இறுதி வரையில் கியூபா, ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 19-ம் நூற்றாண்டில் கியூபா உலகின் கரும்பு உற்பத்தி மையமாக மாறியது. அதுவரையில் வறுமையில் இருந்த கியூபா, கரும்பு உற்பத்தி பெருகிய பிறகு மேம்படத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக கியூப மக்களிடம் சுதந்திர நாடு சிந்தனை வலுப்பெற்றது. ஸ்பெயினுக்கு எதிராக அவர்கள் போராடத் தொடங்கினர்.

அமெரிக்காவின் தலையீடு

1895-ல் ஸ்பெயினுக்கு எதிரான கியூபமக்களின் போர் உச்சம் தொட்டது. அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே பகைஇருந்துவந்தது. இந்நிலையில், கியூபாவின் அரசியல் சூழலைப் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா கியூபாவுக்குள் நுழைந்தது. ஸ்பெயின் பின்வாங்கியது. இதன் தொடர்ச்சியாக 1902-ல் கியூபா தன்னை ஒருசுதந்திர நாடாக கட்டமைத்துக் கொண்டது.

அதே சமயம் அமெரிக்கா கியூபாவிலிருந்து முற்றிலும் வெளியேறாமல், அதன்கொள்கை உருவாக்கத்தில் தலையிட்டு கொண்டிருந்தது. குறிப்பாக ராணுவக் கொள்கையில். இதன் பிறகான 50 ஆண்டுகள்அரசியல் கொந்தளிப்பிலும் பொருளாதாரத் தடுமாற்றத்திலும் கியூபா பயணித்தது.

கியூபாவை மாற்றிய புரட்சி

அமெரிக்காவின் ஆதரவோடு சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார் அதிபர் ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா. அவரை ஆட்சியிலிருந்து அகற்றி,கியூபாவில் சமூக சீர்திருத்ததைக் கொண்டு வரகியூபாவில் புரட்சி (1953 - 1959) வெடித்தது. அர்ஜென்டினாவில் பிறந்த சே குவேரா, கியூபப் புரட்சியில் மிக முக்கியப் பங்காற்றினார். விவசாயிகளையும் இளைஞர்களையும் புரட்சிக்குத் தயார்படுத்தினார்.

கியூபப் புரட்சியைசே குவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் முன்னின்று நடத்தினர். இந்தப் புரட்சியின் தொடர்ச்சியாக பாடிஸ்டா ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ 1959-ம் ஆண்டு கியூபாவின் அதிபரானார். சே குவேரா தொழில்துறைஅமைச்சராக நியமிக்கப்பட்டார். கியூபாவின்வரலாற்றில் திருப்புமுனை காலகட்டம் இது.

அதிபர் பதவிக்கு வந்த பிடல் காஸ்ட்ரோ, கியூபாவை முழுமுற்றான சோசலிச நாடாக மாற்றும் வகையில் பல்வேறு சமூக, பொருளாதார மாற்றங்களை முன்னெடுத்தார். கியூபாவில் அமெரிக்காவின் தலையீட்டை முற்றிலும்ஒழிக்கும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இதனால் அமெரிக்கா பிடல் காஸ்ட்ரோமீது கோபம் கொண்டது. கியூபாவை முடக்கும்நோக்கில் அதன் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்து தனிமைப்படுத்தியது.

இந்தக் காலகட்டத்தில் கியூபா தனக்கான பாதையை உருவாக்க ஆரம்பித்தது. தொழில், வர்த்தகம் அனைத்தும் அரசுவசமாகின. மருத்துவம் மற்றும் கல்வித் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசே வழங்கியது.

பொருளாதாரத் தடுமாற்றம்

பொருளாதாரரீதியாக சோவியத் யூனியன் கியூபாவுக்கு பக்க பலமாக இருந்துவந்த நிலையில் 1991-ல் சோவியத் யூனியன் உடைந்தது கியூபாவுக்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. சோவியத்தின் பொருளாதார உதவி நின்றுபோனதால் கியூபா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏனென்றால் அந்த சமயத்தில் உலகமயாக்கல் நிகழ்ந்துகொண்டிருந்தது. இந்தப் போக்கு கியூபாவுக்கு மேலும் நெருக்கடியாக அமைந்தது. இந்நிலையில், வெளிநாட்டு முதலீடு, தனியார் தொழில்களில் சற்று தளர்வை பிடல் காஸ்ட்ரோ கொண்டுவந்தார்.எனினும், கியூபாவால் உலகமயமாக்கல் சூழலில் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை.

பிடல் காஸ்ட்ரோவைத் தொடர்ந்து அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008-ம்ஆண்டு கியூபா அதிபராக பொறுப்பேற்றார். அவர் பொருளாதார கொள்கையில் கூடுதல் தளர்வுகளைக் கொண்டு வந்தார். தனியார் துறை வேலை வாய்ப்புகளுக்கான கதவைத் திறந்தார். 1981 நிலவரப்படி, கியூபாவில் இருந்தமொத்த வேலைவாய்ப்புகளில் 92 சதவீதம் அரசு வேலைவாய்ப்புகளாக இருந்தன.8 சதவீதம்தான் தனியார் வேலைவாய்ப்புகள். 2008-க்குப் பிறகு அரசு வேலைவாய்ப்பு70 சதவீதத்துக்கு கீழ் குறைந்தது.

2014-ல் அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்தபோது, அமெரிக்க - கியூபா இடையிலான உறவு மீண்டும் தொடங்கப்பட்டது. (டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு கியூபா மீது மீண்டும் தடை கொண்டுவந்தார்.) இப்படியான சில குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகள் ரவுல் காஸ்ட்ரோ காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. எனினும், கியூபா பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடவில்லை.

இளைய தலைமுறையினரின் அதிருப்தி

கியூப மக்களுக்கு அரசு வழங்கும் ஊதியம் போதுமானதாக இல்லை. தங்கள் குடும்பத்தை மேம்படுத்த அவர்கள் பகுதி நேரமாக வேறு வேலையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பலர் தங்கள்வருவாயைப் பெருக்க கள்ளச் சந்தையில் வர்த்தகம் செய்கின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் உலகம் மிகப்பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது.அதிகவேக இணையமும், சமூக ஊடகங்களும் உலகின் போக்கை மாற்றி அமைத்துஇருக்கின்றன. ஆனால், கியூபா தாராளவாதக் கொள்கைகளை முழுமையாக ஏற்காதநிலையில், அங்கு இணைய வசதி பரவலாகவில்லை. இணையப் பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் உண்டு. தவிர, கட்டணமும் மிக மிக அதிகம். இணையப் பயன்பாடு பரவலாகாததால், கியூபாவின் பொருளாதார மேம்பாடு இன்னும் தேக்க நிலையிலேயே உள்ளது.

இந்தச் சூழலால், கியூபாவின் இளம்தலைமுறையினரிடம், தங்கள் நாட்டின் சோசலிசக் கொள்கை சார்ந்து அதிருப்தி அதிகரித்துள்ளதாகவும் அவர்கள், பிறநாட்டு இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்துடன் தங்கள் வாழ்க்கைச் சூழலை ஒப்பிட்டு வருந்துவதாகவும் கூறப்படுகிறது.

புதிய தொடக்கம்

ரவுல் காஸ்ட்ரோவைத் தொடர்ந்துமிகேல் டயஸ் கேனல் 2018-ல் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் 2021-ல்கியூபாவின் ஆட்சி அதிகாரமிக்க கட்சியானகம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 60 ஆண்டுகாலமாக கியூப கம்யூனிஸ்ட் கட்சியில்காஸ்ட்ரோ சகோதரர்கள் தலைமை வகித்து வந்த நிலையில், தற்போது புதியவர் ஒருவர்நியமிக்கப்பட்டிருப்பது கியூபாவின் புதிய பயணத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in