உத்தியை மாற்றும் ஹோண்டா

உத்தியை மாற்றும் ஹோண்டா
Updated on
1 min read

சர்வதேச அளவில் இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா மோட்டார் நிறுவனம் விற்பனையை அதிகரிக்க அல்லது சரிந்துவரும் மோட்டார் சைக்கிள் விற்பனையைத் தடுத்து நிறுத்த புதிய உத்தியைக் கையாண்டுள்ளது.

உபெர், ஓலா போன்று வாடகை மோட்டார் சைக்கிள் நிறுவனமான கிராபில் ஹோண்டா முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹோண்டா முதலீடு செய்துள்ளது. எவ்வளவு தொகை என்ற விவரத்தை ஹோண்டா வெளியிடவில்லை. முதலீட்டைப் பெற்ற கிராப் நிறுவனமும் இந்த விவரத்தை வெளியிட மறுத்துள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனங்களான ஃபோக்ஸ்வேகன், டொயோடா மோட்டார் கார்ப்பரேஷன், ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உபெர், ஓலா போன்ற வாடகைக் கார் செயலியை நிர்வகிக்கும் நிறுவனங் களுடன் கூட்டு சேர்ந்துள்ளன.

இந்நிலையில் வாடகை மோட்டார் சைக்கிள் செயலியை செயல்படுத்தும் கிராப் நிறுவனத்தில் ஹோண்டா முதலீடு செய்துள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உபெர் நிறுவனத்துக்குக் கடும் போட்டியாக கிராப் விளங்குகிறது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 75 கோடி டாலர் முதலீட்டை பெற்றது. கிராப் நிறுவனத்தின் மதிப்பு 300 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிராப் நிறுவனம் மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி வாடகைக் கார், செல்போன் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தில் ஜப்பானின் நிதிச் சேவை நிறுவனமான டோக்கியோ சென்சுரி கார்ப்பரேஷன் முதலீடு செய்துள்ளது.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு 2012-ம் ஆண்டு முதல் செயல்படும் கிராப் நிறுவனம் 6 நாடுகளில் 34 நகரங்களில் செயல்படுகிறது.

ஹோண்டா நிறுவனம் தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வலுவான சந்தையை வைத்துள்ளது.

சமீபகாலமாக சொந்தமாக மோட்டார் சைக்கிள் வாங்கும் போக்கு இப்பகுதி மக்களிடையே குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் வாடகை மோட்டார் சைக்கிளை பயன்படுத்துவதை தேர்ந்தெடுத்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கான இடத்தைத் தேடுவது, அதை பராமரிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை விட வாடகை மோட்டார் சைக்கிள் மிக வும் எளிதாகவும் செலவு குறைந்ததாகவும் இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

இந்த நாடுகளில் தனி நபர் மோட்டார் சைக்கிள் வாங்குவது குறைந்துள்ள நிலையில் வாடகைக்கு செயல்படுத்தும் நிறுவனங்கள் மூலம் மோட்டார் சைக்கிள் விற்பனையை தக்க வைத்துக் கொள்ள ஹோண்டா முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக வாடகை மோட்டார் சைக்கிள் செயலி நிறுவனமான கிராப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது ஹோண்டா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in