

‘மனிதர்களே, நீங்கள் இன்னும் பயப்படுகிறீர்களா?’ (Are you scared yet, human?) என்ற தலைப்பில் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘தி கார்டியன்’ இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்தக் கட்டுரையை எழுதியது மனிதர் அல்ல. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் ‘ஜிடிபி 3’ என்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மென்பொருள். ‘செயற்கை தொழில்நுட்பத்தைக் கண்டு மனிதர்கள் பயப்படத் தேவையில்லை’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு அந்த மென்பொருளில் உள்ளீடு செய்யப்பட்டது. அந்தத் தலைப்பின் கீழ் அந்த மென்பொருள் தானாக எழுதிய கட்டுரைதான் அது.
தற்போது ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் 'சேட் ஜிபிடி' (chatGPT) மென்பொருள் உலகை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கிட்டத்தட்ட எந்திரன் படத்தின் சிட்டி ரோபோ போல கேட்ட கேள்விகளுக்கு பதிலை எவ்வித தாமதமும் இன்றித் தருகிறது. ஷேக்ஸ்பியர் வசனத்தில் தன் காதலிக்கு காதல் கவிதை எழுதித் தரச்சொல்லி காதலன் வைக்கும் கோரிக்கையை கூட நிறைவேற்றித் தருகிறது அந்த மென்பொருள்.
இன்னும் 40 ஆண்டுகளில் ஓட்டுநர்கள், கதிரியக்க மற்றும் காப்பீடு செய்து கொடுக்கும் பணியாளர்களை ஏஐ பதிலீடு செய்யும் என்று அந்தந்த துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.மேலும் நீதிமன்றத்தில் வழக்காட செயற்கை நுண்ணறிவின் ஆல்பா-4 வழக்கறிஞர்கள் துணைபுரிவார்கள், நமக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்ய செயற்கை நுண்ணறிவு உதவிபுரியும், நமக்கு பிடித்த எழுத்தாளர் பற்றி நம்முடன் கலந்துரையாடும், அரசாங்கத்தில் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும், காவலர்களுக்கு திருடர்களை பிடித்துத் தருவதில் பெரும் உதவி புரியும், அவ்வளவு ஏன் நம் நோய்களை கண்டறிந்து அதற்கான தீர்வைக் கொடுத்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி பல ரூபங்களிலும் சுழன்று வரும் செயற்கை நுண்ணறிவை மருத்துவம், விவசாயம், கல்வி, உற்பத்தித் துறை, ஸ்மார்ட் நகரங்கள், சில்லறை வணிகம் மற்றும் போக்குவரத்து போன்ற குறிப்பிட்ட துறைகளில் மட்டும் முழுமனதாக பயன்படுத்திக்கொள்ள இந்தியா முயன்று வருகிறது.
மருத்துவத்தில்... மருத்துவத் துறையில் பல சாதனைகளையும் செவ்வனே ஆற்றி வருகிறது செயற்கை நுண்ணறிவு. ஆம், மிக விரைவில் திறன்பேசி வைத்திருக்கும் ஒரு நபர் தனக்கான மருத்துவராக மாற முடியும். ஒரு சிறந்த மருத்துவரை விட, ஒரு நபரின் திறன்பேசி அவர் உடல்நிலை பற்றிய தகவல்களைத் துல்லியமாக வழங்கும். இதை நெறிமுறைப்படுத்தினால், தற்போது 66 வருடங்களாக உள்ள இந்தியர்களின் ஆயுட்காலம் மேலும் பல ஆண்டுகள் அதிகரிக்கும்.
மேலும் புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கவிருக்கிறது. நம்மை ஆட்டிப்படைத்த கரோனாவுக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் அறிந்த தொழில்நுட்ப நிபுணர்களுடன் இணைந்து விஞ்ஞானிகள் மருந்துகளின் மூலக்கூறுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயத்தில்... விவசாயத் துறையை எடுத்துக்கொண்டால் விதைப்பு முதல் அறுவடை வரை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது வானிலை, நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கண்டறிவது, தகுந்த நேரத்தில் நீர்ப் பாசனம் செய்வது, தேவையான அளவு மட்டும் உரமிடுவது என்று அதன் பணியை அடுக்கிக்கொண்டே போகலாம். டிஜிட்டல் முறையிலான விவசாயம், வரும் ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி அளவில் விவசாயிகளுக்கு வருமானத்தை உண்டாக்கித் தரும் என்கிறது ஒரு ஆய்வு.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இக்ரிசாட் என்ற பன்னாட்டு நிறுவனம் செயற்கை நுண்ணறிவு விதைக்கும் செயலியை உருவாக்கி உள்ளது. இதை விவசாயிகள் தரவிறக்கம் செய்துகொண்டாலே போதும். குறிப்பிட்ட பயிர்களை பயிர்செய்வது முதல் பாதுகாப்பது வரை அனைத்தையும் நேரத்துக்கு தகுந்தவாறு தெரிவித்துவிடும். இதன்மூலம் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 3,000 விவசாயிகள் பயனடைந்தது மட்டுமில்லாமல் அவர்களின் பயிர் மகசூல் 10 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
நீதித் துறையில்... உண்மையை அலசி ஆராய்ந்து தீர்ப்பு கொடுக்கும் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கறிஞராகவும் செயற்கை நுண்ணறிவு தனது முத்திரையை பதித்து வருகிறது. ஆம்,சீனாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ‘வழக்கறிஞர்’ இயந்திரம் துல்லியமாக வாதாடி உள்ளது. மேலும் இந்த இயந்திரம் ஐந்து வருடம் சிறப்பாக பயிற்சி பெற்றதுடன், சுமார் பதினேழாயிரம் வழக்குகள் சார்ந்த முழுத் தகவல்களையும் கரைத்துக் குடித்துள்ளது. முக்கியமாக கடன் அட்டை மோசடி வழக்கு, சூதாட்டம்,திருட்டு, தவறாக வண்டி ஒட்டியவர்கள்,கடமை செய்யத் தவறிய அதிகாரிகள் போன்ற வழக்குகளில் பிரமாதமாக வாதாடி உள்ளது.
கல்வித் துறையில்… பள்ளிகளில் இடைநிற்றலின் காரணத்தை அறிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து ஆந்திர மாநில அரசு 2018-19 கல்வியாண்டில் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை, செயல்திறன், பாலினம், சமூக பொருளாதார காரணிகள், பள்ளியின்உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் திறன் போன்ற தரவுகளைச் சேகரித்தது.
இந்தத் தரவுகளை அலசிய செயற்கை நுண்ணறிவு, விசாகபட்டினம் மாவட்டத்தில் 19,500 மாணவர்கள் பள்ளிப்படிப்பை நிறுத்த இருப் பதை முன்கூட்டியே கண்டறிந்தது. மேலும் விசாகபட்டினம் மாவட்டத்தில் இடைநிற்றல் ஏற்படுவதற்கான காரணங்களாக பள்ளிகளில் அமர போதிய இருக்கை வசதி இல்லை, கழிப்பறை வசதி இல்லை என்பதுடன் மாணவர்களின் செயல்திறன், உள்கட்டமைப்பில் தேவையான மாற்றம் மேற்கொள்ள அரசுக்கு அறிவுறுத்தியது.
மனிதனுக்கு எதிரி அல்ல: செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலைகளை பறித்துவிடும் என்று பலரும் அச்சம் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், அப்படி தீவிர அச்சம் கொள்ளத் தேவையில்லை. மிகக் குறைந்த தகவல்களுடன் விரைவாகக் கற்றுக்கொள்வதில் மனிதர்கள் மிகவும் திறமையானவர்கள். செயற்கை நுண்ணறிவுக்கு நிறைய தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டும். அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு என்பது நிறுவனங்களிலிருந்து மனிதர்களை அகற்றுவதற்காக அல்ல, மனிதர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப்படுகிறது.
கவனமும் பொறுப்பும் அவசியம்: மனிதகுல முன்னேற்றத்தின் வளர்ச்சிக்கும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அமைந்து இருந்தாலும், ஆபத்தை உண்டாக்கவும் செயற்கை நுண்ணறிவு தவறவில்லை. அமேசான் அலெக்சாவிடம் விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமியிடம் ஒரு சவாலை அலெக்ஸா முன்வைத்தது. மின்சாரம் பாயும் சுவிட்ச் பெட்டியில் சார்ஜருடன் காசை வைத்து செருகச் சொல்லியது. அப்போது அச்சிறுமியின் தாயாரும் அருகில் இருந்தமையால் எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை. அலெக்சாவில் உள்ள இந்த பிரச்சினையை உடனடியாக சரிசெய்து விடுவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக்டாக்கில் சிலர் விளையாடியதை வைத்தே அலெக்ஸா இந்தச் சவாலைப் பரிந்துரைத்துள்ளது. எதுவாயினும் தொழில்நுட்பத்தை ஒருவர் பயன்படுத்தும் நோக்கில்தான் அதன் வெற்றி அமைந்துள்ளது. இறுதியாக ஒன்று. “இதுவரை நாம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மிகவும் பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருந்தது. ஆனால் நாம் அதிகம் கற்பித்தால், அது மனிதர்களை விட புத்திசாலியாகி சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்” என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்!
- செ.சரத், saraths1995@gmail.com