

தற்போது சின்னச் சின்ன நிறுவனங்கள்கூட மக்களுக்காக சேமிப்புத் திட்டங்களை அறிமுகம் செய்வது ஒரு டிரண்டாக மாறி உள்ளது. இலவசசுற்றுலா போன்ற பரிசு திட்ட அறிவிப்புகளை நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். பரிசு பெறச் செல்லும் இடத்தில்தான் அந்தத் திட்டத்தைப் பற்றி விளக்குவார்கள்.
ரூ.75,000 செலுத்தினால், 5 வருடங்களுக்கு, இந்தியா முழுக்க சுற்றுலாசெல்ல ஹோட்டலில் இருந்து விமானடிக்கெட் வரை அனைத்தையும் நிறுவனமே பார்த்துக் கொள்ளும் என்பர்.அத்திட்டத்தில் இணைந்து பணம் செலுத்திவிட்டு, ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட பிறகு அந்நிறுவனத்தைதொடர்புகொள்ள முயன்றால் அனைத்துதொலைபேசி எண்களும் அணைக்கப்பட்டிருக்கும். இப்படி சுற்றுலா சேமிப்புத் திட்ட மோசடியில் ஏமாந்தோர் பலர்.
இப்போது உங்களுக்குள் சில கேள்விகள் எழலாம். சீட்டு நிறுவனங்களில் பணம்போடலாமா, கூடாதா? நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் அனைத்து சேமிப்புத் திட்டங்களும் மோசடியா? இக்கேள்விகளுக்கு விடைகாண, வைப்புநிதி பற்றி, நிறுவனங்கள் சட்டம் கூறுவதை அறிவது அவசியமாகும்.
வைப்புநிதி பெற உரிமையில்லை: இந்தியாவிலுள்ள பொது மற்றும் தனியார் உட்பட அனைத்து நிறுவனங்களும், நிறுவனங்கள் சட்டம், 2013-ன்படி மத்தியபெருநிறுவனங்கள் துறையின் கீழ் பதிவுசெய்யப்படுகின்றன. அவற்றுக்கு நிறுவுச்சான்றிதழ் மற்றும் நிறுவன அடையாள எண் ஆகியவை வழங்கப்படும். இந்த நிறுவுச்சான்றிதழை வைத்திருப்பதால் மட்டுமே நிறுவனங்கள் வைப்புநிதியை பெற்றுவிடமுடியாது. ஒரு நிறுவனம் வைப்புநிதி பெற்று வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்பட, ரிசர்வ் வங்கியின் உரிமம் பெறுவது அவசியம்.
தங்கள் நிறுவனம் வைப்புநிதி பெறுவதற்கான அரசு அனுமதி பெற்றது என்றுஎவரேனும் சொன்னால், நீங்கள் அந்நிறுவனத்தின் நிறுவுச் சான்றிதழை விட அந்நிறுவனத்திடம் ரிசர்வ் வங்கியின் உரிமம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
நீங்கள் நினைவில்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நிறுவனங்கள் சட்டம் 2013-ன்படி எந்த ஒரு தனியார் நிறுவனமும், பொதுமக்களிடம் கடன் அல்லது வைப்புநிதி வாங்க அனுமதியில்லை.
நகைக்கடை சேமிப்பு: நகைக்கடைகள் 11 மாத தங்க சேமிப்புத் திட்டத்தின் முடிவில் தங்கத்தை மட்டுமே திருப்பித்தர முடியும். பணத்தைத் திருப்பித்தருவதாக அதன் திட்டத்தில் விளம்பரப்படுத்தினால் அது சட்ட விதிகளை மீறுவதாகவே அமையும்.
பொதுவாக, எந்தவொரு நிறுவனமும் 15%க்கு மேல் வட்டி தருவதாக விளம்பரம் செய்தால், அது பெரும்பாலும் மோசடியில்தான் போய் முடியும்.
இயக்குநர் பதவி: உங்களிடம் அசையா சொத்து அதிகமாக உள்ளதென்றால், நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கு உங்களுக்கு அழைப்பு வரலாம். வசீகர சலுகைகளில் மயங்கி இயக்குநராகி விட்டால் உங்கள் சொத்துகளை பாதுகாப்பு அல்லது உத்தரவாதம் எனக் காட்டி, அந்த நிறுவனம் தனக்கான வங்கிக் கடனை சுலபமாக பெற்றுவிடும்.
அதன்பின்னர், கடனைக் கட்டாமல் போய்விட்டால் உங்கள் சொத்து அநியாயமாக பறிபோய்விடும். எனவே, எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குநர் பதவிக்கு அழைப்பு வந்தாலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். சட்டப்படி, நிறுவனத்தின் அனைத்துவகை மோசடிக்கும் அதன் இயக்குநர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
கடன் செயலி மோசடி: ஆன்லைனில் கடன் வழங்குவதற்கென்றே பல போலியான செயலிகள் உள்ளன. இத்தகைய செயலிகளில் பெரும்பாலானவை சீனாவைச் சேர்ந்தவை. எந்தவிதமான ஆவணங்களுமின்றி ரூ.1,000 முதல் லட்சம் வரை தருவதாகக் கூறி பொதுமக்களை கடன்வலையில் விழவைக்கின்றன. குறிப்பாக,பணப்பலன்களுடன் ஓய்வுபெறும் மூத்தகுடிமகன்களை குறிவைத்து வீடுகள் கட்டித்தருவதாக பணம் மோசடி செய்கிறார்கள்.
வட்டியை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தவில்லை எனில், இந்த செயலிகள் நம் கைப்பேசியிலுள்ள அந்தரங்க புகைப்படங்களை திருடி அதிலுள்ள இதர நண்பர்களின் எண்களுக்கு தன்னிச்சையாக அனுப்பிவிடுகிறது. இதனால் பல குடும்பங்கள், அவமானத்தில் தற்கொலை செய்த சம்பவங்களும் உண்டு.
என்ன தீர்வு?: இதுபோன்ற திட்டங்களில் ஏமாந்து பணத்தை பறிகொடுத்தவர்கள் சென்னையின் சாஸ்திரி பவன்கட்டிடத்திலுள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் பதிவுத்துறை அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன், புகார் செய்ய வேண்டும். இப்புகார்களை கடிதம், இணையம் மூலமாக அனுப்பலாம். தவிர mca.gov.in மற்றும் pgportal.gov.in ஆகியஇணையதளங்களில் புகாரைப் பதிவு செய்யலாம். மோசடிப் பட்டியலில் இடம் பெற்றநிறுவனமாக இருந்தால் அதன் மீது செபி அமைப்பிடமும் புகார் செய்யலாம்.
தனிநபர் உட்பட எந்தவொரு மோசடியாக இருந்தாலும் இழந்த பணத்தை மீட்க காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவிடம் புகார் செய்ய வேண்டும். அப்போதுதான் பணத்தை அவர்களால் மீட்டுக்கொடுக்க முடியும்.
இணைய மோசடிக்கு ‘1930’: போலி கடன் செயலி உட்பட இணையதள (சைபர்)மோசடிகள் மூலம் இழந்த பணத்தை மீட்க, ‘1930’என்ற எண்ணில் சைபர் க்ரைம்அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். இந்திய ரிசர்வ் வங்கி இப்புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கும்.
நிறுவனங்கள் நடத்தும் சட்டவிரோதமான டெபாசிட் திட்டங்கள் குறித்து உங்களிடம் தகவல் இருந்தால் நிறுவனங்கள் பதிவுத்துறை அலுவலகங்களில் புகார் செய்யலாம். நீங்கள் அளிக்கும் புகார், இத்தகைய மோசடியிலிருந்து பலரை பாதுகாக்க உதவும்.
பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினமோ, அதைவிடக் கடினம் சம்பாதித்த பணத்தை தகுந்த முறையில் முதலீடு செய்வது. விழிப்புணர்வோடு இருந்தால் செல்வத்தைப் பெருக்கலாம்.
கட்டுரையாளர் மத்திய அரசின் நிறுவனங்கள் பதிவுத்துறையின் சென்னை அலுவலகத்தின்துணைப் பதிவாளர்.
சீட்டு நிறுவனங்களில்பணம் போடலாமா, கூடாதா? நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் அனைத்து சேமிப்புத் திட்டங்களும் மோசடியா? இக்கேள்விகளுக்கு விடைகாண, வைப்புநிதி பற்றி, சட்டம் கூறுவதைஅறிவது அவசியமாகும்.
- உமா மேகஸ்வரி, uma.mahe1@gmail.com