

வாகனப் பிரியர்கள் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘ஆட்டோ- எக்ஸ்போ கண்காட்சி 2023’ நொய்டாவில் வரும் 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
2022-ம் ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போ நடத்த தயாரான நிலையில் கரோனா பரவல் அதிகரிப்பால் அது ஒத்திப்போடப்பட்டது. இறுதியாக 2020 பிப்ரவரியில்தான் ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட்டது. இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இவ்வாண்டு கண்காட்சி தொடங்கவுள்ளது.
மாருதி சுஸுகி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, கியா, எம்ஜி உட்பட 45 முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளன. இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், கான்செப்ட் வாகனம், வர்த்தக வாகனம் (டிரக் மற்றும் பஸ்), வின்டேஜ் கார், டயர், டியூப், லூப்ரிகன்ட் ஆயில் உள்ளிட்டவை இந்த கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
தொழில்நுட்பம், பொறியியல் வடிவமைப்பு முறை சார்ந்து தங்களது தயாரிப்புகளின் முக்கிய அம்சங்களை இந்தக் கண்காட்சியில் நிறுவனங்கள் விரிவான முறையில் விளக்கம் அளிக்கவுள்ளன. நிதி நிறுவனங்கள், மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இந்த எக்ஸ்போவில் பங்கேற்கின்றன.
ஆட்டோ எக்ஸ்போ தொடக்க தினமான ஜனவரி 11-ம்தேதி மீடியாக்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஜனவரி 12 மற்றும் 13 தேதிகளில் பிஸினஸ் பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். பொதுமக்களுக்கான அனுமதி ஜனவரி 14-ம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.