

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு 2022 கடினமான ஆண்டாகவே இருந்தது. உருமாறிய புதிய வகை கரோனா பாதிப்பு, இலங்கை பொருளாதார நெருக்கடி, ரஷ்ய-உக்ரைன் போர் ஆகிய நிகழ்வுகளால் கடந்த ஆண்டில் பங்குச் சந்தைஅதிக ஏற்ற – இறக்கம் நிறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் ஒருவித அச்ச உணர்விலேயே இருக்க நேர்ந்தது. இருப்பினும், இதர உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தேசிய பங்குச் சந்தை நிஃப்டியின் செயல்பாடு சிறப்பானதாகவே அமைந்திருந்தது. கடந்த ஆண்டில் நிஃப்டி குறியீட்டெண் 4.5%அதிகரித்தது.
துறைகளின் செயல்பாடு: நிஃப்டியில் சில துறைகளின் செயல்பாடு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை கடந்த ஆண்டில் பூர்த்தி செய்துள்ளன. குறிப்பாக, ஆண்டின் இரண்டாவது பாதியில் பொதுத்துறை வங்கிகளின் குறியீடு 68%முன்னேற்றம் கண்டது. நிஃப்டி பேங்க் 22%, உலோகம் 21%, எஃப்எம்சிஜி 18%, ஆட்டோ 15%, எனர்ஜி 14% ஏற்றம் கண்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கரோனா காலத்தில் அதிக ஆதாயத்தை அள்ளித்தந்த மருந்துத் துறை, ஐடி துறைகளுக்கு 2022 கசப்பான அனுபவத்தைத் தந்தது. மருந்துத் துறை மற்றும் மீடியா தலா 11%, ரியல் எஸ்டேட் 26%, ஐடி 26% குறைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தன.
ஐடி நிறுவனங்களுக்கு வந்த சோதனை: நிஃப்டி தொழில்நுட்ப தொகுப்பில் 2022-ல் விப்ரோ 45.4%, டெக் மஹிந்திரா 41.5%, ஹெச்சிஎல் டெக் 21% சரிந்து முதலீட்டாளர்களை நிலைகுலையச் செய்தன. மேலும், திவிஸ் லேப் 27%, டாடா மோட்டார்ஸ் 20% இழப்பைக் கண்டன. அதேசமயம் ஐடிசி 54%, கோல் இந்தியா 52%, மஹிந்திரா 51%, இன்டஸ்இண்ட் வங்கி39% ஆதாயத்தை பதிவு செய்தன.
ஐபிஓ செயல்பாடு: 2022-ல் மொத்தம் 88 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்கின. ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை, பட்டியலிடப்பட்ட நாளன்றே இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்தன. முதலீட்டாளர்கள் போட்ட பணத்துக்கு சராசரியாக 32% வருவாயை வழங்கின.
அதானி வில்மர் 140%, ஹரிஓம் பைப் 126%உயர்ந்தன. அதேபோல், வீனஸ் பைப்ஸ், வீராந்தா லேர்னிங், வேதந்த் பேஷன் பங்குகளின் விலையும் 50%-120%வரை உயர்ந்தன.
உச்சம் தொட்ட அதானி குழுமம்: 2022-ல் நிஃப்டி தொகுப்பில் அதானி எண்டர்பிரைசஸ் 123% ஆதாயத்தை பதிவு செய்து நட்சத்திர நிறுவனமாக திகழ்ந்தது. மேலும், அதானி குழும நிறுவனங்களான, அதானி போர்ட்ஸ், அதானி வில்மர், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்டவையும் முதலீட்டாளர்களை ஏமாற்றாமல் சிறப்பான லாபத்தை அள்ளித்தந்தன. பங்குச் சந்தையில் ஏற்பட்ட மின்னல் வேக முன்னேற்றத்தையடுத்து இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.
அந்நிய முதலீடு வரவும், வெளியேற்றமும்: அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியதன் விளைவாக, அந்நிய நிதி நிறுவனங்கள் கடந்த ஆண்டில் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்று சந்தையிலிருந்து வெளியேறின. இதனால் ஏற்பட்ட தாக்கத்தை உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகள்தான் ஈடு செய்தன. மருந்து, நுகர்வுப் பொருள், பொறியியல் பொருள் துறைகளில் அந்நிய முதலீடு, உள்நாட்டு முதலீடு குவிந்த நிலையில் மென்பொருள், நிதி, எரிசக்தி துறைகளில் இருந்து கணிசமான முதலீடு வெளியேறியுள்ளது.
ஆசிய கரன்சிகளில் இந்திய ரூபாய் செயல்பாடு படுமோசம்
2022-ல் ஆசிய கரன்சிகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு மிக மோசமான அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. 2021 இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.33-ஆக இருந்த நிலையில், 2022-ல் 82.72-ஆக சரிந்துள்ளது. 2013-க்கு பிறகு ரூபாய் மதிப்பு 10.14% என்ற அளவில் படுமோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஏற்றம் கண்ட தங்கம்
கடந்த 2021-ல் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.48,720-ஆகஇருந்த நிலையில் 2022-ல் ரூ.52,670-ஆக உயர்ந்துள்ளது. 2023-ல் தங்கத்தின் விலை ரூ.60,000-ஐ தொடும் என்பது நிபுணர்களின் கணிப்பு.