

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா
2022-ல் பொருளாதார பலத்தில் பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளியது. பொருளாதார வலிமை கொண்ட முதல் 5 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக 5-வது இடத்தை இந்தியா பிடித்தது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 22.3 லட்சம் கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனா இந்தப் பட்டியலில் 19.9 லட்சம் கோடி டாலருடன் 2-வது இடத்தில் உள்ளது. 3.53 லட்சம் கோடி டாலருடன் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.ஆசியாவைச் சேர்ந்த மூன்று நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஆசிய பிராந்தியத்துக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
ஜி20: தலைமை ஏற்ற இந்தியா
சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள கடந்த 1999-ம் ஆண்டு ஜி20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா உள்ளிட்ட 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலக வணிகத்தில் 80 சதவீதத்தையும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் இந்த கூட்டமைப்பு கொண்டுள்ளது. உலக நிலப்பரப்பில் 60 சதவீதம் இந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சொந்தமானவை. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாட்டுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படும். அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான ஜி20 தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஜி20-க்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
உலகை தடுமாறச் செய்த ரஷ்ய - உக்ரைன் போர்
கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. பத்து மாதங்களைக் கடந்து நீளும் இந்தப் போரால், உக்ரைனில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மேம்பாலங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என உக்ரைனின் அடிப்படைக் கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் போரால், ரஷ்யாவும் உக்ரைனும் மட்டுமல்ல, உலகமே பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது; உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது; பணவீக்கம் உச்சம் தொட்டது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. அமெரிக்கா ஒருபடி மேலே சென்று ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு தடைவிதித்தது. எனினும், ரஷ்யா தன் தாக்குதலை நிறுத்திக் கொள்ளவில்லை.
கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து உலகம் மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் உலகை மீண்டும் ஒரு புதைகுழியில் தள்ளியது.
5ஜி: இணையத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல்
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுவந்த 5ஜி இணைய சேவையை அக்டோபர் 1-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் இந்த சேவையை பயனாளர்களுக்கு படிப்படியாக அறிமுகப்படுவத்துவதாக அறிவித்தன. கடந்த ஜூலை மாதம் 5ஜி ஏலம் தொடங்கியது. 72 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் ஏலம் போனது. மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ரூ.88,000 கோடிக்கும், ஏர்டெல் ரூ.43,000 கோடிக்கும், வோடஃபோன் ஐடியா ரூ.18,800 கோடிக்கும் ஏலம் எடுத்தன. அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் தனிப் பயன்பாட்டுக்காக ரூ.212 கோடிக்கு 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்தது. இந்தியாவில் இ-காமர்ஸ், கல்வி, மருத்துவம், போக்குவரத்து என பல்வேறு தளங்களில் மிகப் பெரும் மாற்றத்தை 5ஜி கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்ந்துகொண்டே சென்ற ரெப்போ
கரோனா பெருந்தொற்று, ரஷ்ய-உக்ரைன் போர் ஆகிய 2 நிகழ்வுகளும் 2022-ல் உலக பொருளாதாரத்தை புரட்டிப் போட்டன. சர்வதேச நாடுகள் பணவீக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் பணவீக்கம் உச்சம் தொட்டது. இதன் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கி தொடர்ச்சியாக வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் பணவீக்க அதிகரிப்பை காரணம் காட்டி ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 5 முறை ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மொத்தமாக 2.25 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உயர்ந்தது.
வங்கியின் முக்கியத்துவத்தை உணர்த்திய நோபல்
அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னன்கி (68), டக்ளஸ் டபிள்யூ டயமண்ட் (68), பிலிப் எச். டிப்விக் (67) ஆகிய மூவருக்கு 2022-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. வங்கிகள் ஏன் நமக்கு அவசியம்,பொருளாதார இயக்கத்தில் வங்கிகள் எப்படி பங்கு வகிக்கின்றன, வங்கிகள் செயலிழக்கும்போது பொருளாதாரத்தில் என்ன நிகழும் என்பன குறித்த இவர்களது கோட்பாடுகளுக்காக பரிசு வழங்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கிகள் வீழவில்லை. வங்கிகள் வீழ்ந்ததன் காரணமாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்று பொருளாதார பேரழிவு காலகட்டம் குறித்த தனது ஆய்வுக் கட்டுரையில் பெர்னன்கி தர்க்க ரீதியாக நிரூபித்தார். வங்கிகள் குறித்து அதுவரையிலான பார்வையில் இது மிகப் பெரும் திருப்புமுனையாக இருந்தது.
டக்ளஸ் மற்றும் டிப்விக் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் வங்கிகள் வழியே எப்படி பொருளாதாரம் இயங்குகிறது என்பதை நிரூபித்தனர். மேலும், வங்கிகள் திவாலாவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் முன்வைத்தனர். இம்மூவரின் ஆய்வுகள் உலக நாடுகள் தங்கள் வங்கிகள் சார்ந்து மேம்பட்ட கொள்கைகளை உருவாக்குவதற்கும், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கும் உதவியாக அமைந்தன என்று நோபல் தேர்வுக்குழு குறிப்பிட்டது.
திவால் நிலைக்கு உள்ளான இலங்கை
இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை 2022-ல் எதிர்கொண்டது. இலங்கை அரசு, உள்நாட்டில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல், அந்நிய கடன்கள் மூலம் நாட்டை நிர்வகித்து வந்தது. அதன் அடிப்படைத் தேவைகளுக்குக்கூட வெளிநாட்டு இறக்குமதியையே நம்பியிருந்தது. இதனால், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்தது. வெளிநாடுகளிலிருந்து வாங்கிய கடன் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு அதிகரித்ததால், இலங்கை திவால் நிலைக்கு ஆளானது. அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்ததால், அத்தியாவசியப் பொருள்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் உருவானது. பெட்ரோ, டீசல், சமையல் எரிவாயு, மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்களுக்குக் கடும் தட்டுபாடு ஏற்பட்டது. விலைவாசி வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டது. பல குடும்பங்கள் மூன்று வேளை உணவை இரண்டு வேளையாக குறைத்தன. இனியும், இலங்கையில் இருந்தால், உயிர் பிழைக்க முடியாத என்ற நிலையில், பல குடும்பங்கள் அகதிகளாக அங்கிருந்து வெளியேறத் தொடங்கின. இலங்கையின் இந்தப் பொருளாதார நெருக்கடி ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தது.
கைமாறிய ட்விட்டர்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், எந்தத் தயக்கமும் இல்லாமல் பொதுவெளியில் கருத்துகள் தெரிவிப்பவர். ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டுவந்த எலான் மஸ்க், 2022 ஏப்ரல் மாதத்தில் 44 பில்லியன் (ரூ.3.6 லட்சம் கோடி) டாலருக்கு ட்விட்டரை வாங்க விரும்புவதாக அறிவித்தார். பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை என்றும் அதை முழுமையான கருத்துச் சுதந்திரத்துக்கான தளமாக மாற்றுவதே தன் நோக்கம் என்றும் அவர் கூறினார். பல்வேறுகட்ட தடங்கலுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் எலான் மஸ்க் வசமானது..
ட்விட்டரை வாங்கியதையடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். சிஇஓ-வாக பொறுப்பில் இருந்த பராக் அகர்வால் உட்பட முக்கிய அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினார். வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதியில்லை, தினமும் 12 மணி நேரம் என வாரத்துக்கு 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்தார். விருப்பம் இருப்பவர்கள் மட்டும் மேற்கொண்டு பணியில் தொடரலாம்; மற்றவர்கள் ராஜினாமா செய்துகொள்ளலாம் என்று அறிவித்தார். மொத்தமாக 3,700 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார்.
அச்சுறுத்திய வேலை நீக்கங்கள்
சென்ற ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச அளவில் தீவிர வேலை நீக்கங்கள் நிகழ்ந்தன. ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் முதலாவதாக செய்த காரியம்
50 சதவீத பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. ட்விட்டரைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் அதன் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்தியாவில் பைஜுஸ் (2,500), அன்அகாடமி (1,500),வொயிட்ஹாட் ஜூனியர் (1,300), வேதாந்து (1,100) ஆகிய கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் கணிசமான பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கின.
எப்டிஎக்ஸ்: கிரிப்டோ உலகை ஆட்டம் காண வைத்த முறைகேடு
அமெரிக்காவைச் சேர்ந்த சாம் பேங்க்மேன் 2019-ம் ஆண்டு எப்டிஎக்எஸ் என்ற கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவனத்தை தொடங்கினார். கரோனா காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகரித்த நிலையில் இந்நிறுவனம் மிகப் பெரும் லாபம் ஈட்டியது. உலக பில்லியனர்களில் ஒருவராக சாம் பேங்க்மேன் வலம் வந்தார்.
இந்நிலையில் சாம் பேங்க்மேனின் மற்றொரு நிறுவனமான அலமேதா ரிசர்ச் மறைமுகமாக எப்டிஎக்ஸ் நிறுவனத்தின் எப்டிடி கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி லாபம் ஈட்டிவருவதாக கடந்த நவம்பர் மாதம் செய்தி வெளியானது. இதையெடுத்து எப்டிஎக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு மளமளவென சரியத் தொடங்கியது. இதனால் 30 வயதான சாம் பேங்க்மேனின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் 16 பில்லியன் டாலரிலிருந்து (ரூ.1.30 லட்சம் கோடி) பூஜ்யத்துக்கு சரிந்தது. எப்டிஎக்ஸ் நிறுவனத்தின் இந்த முறைகேடால் சர்வதேச அளவில் கிரிப்டோகரன்ஸி மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.