

உலகின் ஏதாவது ஒரு பகுதியில், அரசுக்கு எதிராகவோ புதிய திட்டங்களுக்கு எதிராகவோ தினமும் போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதை மறுக்க முடியாது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி, பிறரின் தூண்டுதலால் நடத்தப்படும் போராட்டங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி நாடு முழுவதும் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 1,526 உள்கட்டமைப்பு திட்டங்களில்647 திட்டங்கள் போராட்டம், நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு காரணங்களால் தாமதமாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் சில திட்டங்கள் 23 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளன. இதனால் திட்ட மதிப்பீடு சராசரியாக 21% அதிகரித்துள்ளது.
நம் நாட்டில் உள்ள துறைமுகங்கள் குறைவான ஆழம் கொண்டவை. இதனால்இப்போது மிகப்பெரிய சரக்குக் கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் நுழைய முடியாத நிலை உள்ளது. இதனால், நம் நாட்டுக்கு வரும் சரக்குகள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டு அங்கிருந்த சிறிய கப்பல்கள் மூலம் இங்கு கொண்டுவரப்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில்தான் கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியில் துறைமுகம் அமைக்க அதானி குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.இதை எதிர்த்து அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
துறைமுகம் அமைப்பதால் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு, மீன் வளம் குறைந்துவிடும் என்பது மீனவர்களின் அச்சமாக உள்ளது. ஆனால், கடற்கரை அரிப்பு சாதாரணமான ஒன்றுதான் என்றும் துறைமுகம் அமைப்பதற்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதை அவர்கள் ஏற்க மறுத்து போராடி வருகின்றனர்.
இதுபோல மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் நானார் கிராமத்தில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு இடத்தை அடையாளம் காணும் பணி நடக்கிறது. மேலும் டெல்லியிலிருந்து மும்பை மற்றும் கொல்கத்தாவுக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையம்: தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் அணுமின் நிலையம் கட்டும் பணி கடந்த 2002-ல் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம், போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி வந்ததாக சில ஆதாரங்களை சுட்டிக்காட்டி போராட்டக் குரல் எழுப்பிய சில குழுவினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. நாளாவட்டத்தில் போராட்டம் தணிந்தது. இதையடுத்து, முதல் அணு உலை 2013-லும் 2-வது அணு உலை 2016-லும் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தத் தாமதத்தால் இவற்றுக்கான திட்ட செலவு ரூ.13 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.17 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.
ஸ்டெர்லைட் ஆலை மூடல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 1998-ல் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்தது. மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாகக் கூறி, தொடக்கம் முதலே அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினர். பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், தொழிற்சாலையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்தது. அத்துடன் அந்த ஆலையிலிருந்து விஷவாயு வெளியேறுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தெரிவித்தது.
இந்நிலையில், 2018-ல் இந்த ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த ஆலை மூடப்பட்டது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.
மேலும் இந்திய பொருளாதாரத்தில் ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பொருத்தவரையில், வேலை வாய்ப்புகளை விட மக்களின் உயிர் மிக முக்கியம் என்றும் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருந்த இந்த நிறுவனம் மூடப்பட்டது சரிதான் என்றும் பொருளாதார வளர்ச்சியை முதன்மைப்படுத்துபவர்களும் கூறுகின்றனர்.
சர்தார் சரோவர் அணை: குஜராத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என நாட்டின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல் விரும்பினார். இந்த திட்டத்துக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். ‘சர்தார் சரோவர் அணை’ என்ற இந்த திட்டத்துக்கான கட்டுமானப் பணி 1987-ல் தொடங்கியது. இந்த திட்டத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் மேதா பட்கர், ‘நர்மதா பச்சாவ் அந்தோலன்’ என்ற அமைப்பை தொடங்கி போராடினார்.
இதுமட்டுமல்லாமல் நீதிமன்ற வழக்கு காரணமாகவும் இந்த திட்டம் தாமதமானது. ஒரு வழியாக கட்டுமானப் பணி முடிந்து 2017-ல் தான் இந்த அணை திறக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆனது.
மதுரவாயல் விரைவுச்சாலை: ஒரு கட்சி ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டத்தை மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடுவது வாடிக்கையாக உள்ளது. உதாரணமாக மதுரவாயல் சென்னை துறைமுகம் இடையே விரைவுச் சாலை அமைக்க, 2009-ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு அடிக்கல் நாட்டியது. அதற்கு அடுத்து வந்த அதிமுக அரசு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதைச் செயல்படுத்த உள்ளது. ஆனால், காலதாமதம் காரணமாக இந்த திட்டத்துக்கான செலவு ரூ.1,800 கோடியில் இருந்து ரூ.5,800 கோடியாக (3 மடங்கு) அதிகரித்துள்ளது.
சேலம் 8 வழிச்சாலை: சென்னை, சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க கடந்த அதிமுக ஆட்சியின்போது திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. ஆனால், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் ஆதரவளித்தது. இதனால் தற்காலிகமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. இப்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.
போராட்டங்களுக்கு சுமுகத் தீர்வு வேண்டும்: ஜனநாயகத்தில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சீனா உள்ளிட்ட சர்வாதிகார நாடுகளில் போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றன. ஆனால் ஜனநாயக நாடுகளில் இது சாத்தியமில்லை. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், வளரும் நிலையில் இருந்தபோது அவ்வளவாக போராட்டங்களை எதிர்கொள்ளவில்லை. ஆனால், வளரும் நிலையில் உள்ள இந்தியா ஏராளமான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அரசியல் மற்றும் வெளிநாட்டு சக்திகள் சுயநலத்துக்காக போராட்டக்காரர்களை ஊக்குவிக்கின்றனர். இதற்காக பெருமளவு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இத்தகைய போராட்டங்களால் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் திட்டத்துக்கான செலவினமும் பல மடங்கு அதிகமாகி விடுகிறது.
சில நேரங்களில் திட்டத்தையே கைவிடும் நிலையும் ஏற்படுகிறது. எந்த ஒரு புதிய திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்கள் கூறும் முக்கிய காரணம், திட்டம் அமைய உள்ள பகுதி மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதுதான். இது உண்மைதான்.
அதேநேரம், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் போராட்டங்களுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. இதுபோல வளர்ச்சி திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதையும் கட்சிகள் தவிர்க்க வேண்டும். - க.ஆனந்தன் anandhan.k@hindutamil.co.in