

ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) எனப்படும் தொடர் வைப்பு திட்டங்களைக் காட்டிலும், சிஸ்டமேட்டிங் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) எனப்படும் முறையான இடைவெளியில் சேமிக்கப்படும் மியூச்சுவல் பண்ட் (பரஸ்பர நிதி) திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இதைப் பிரதிபலிக்கும் விதத்தில், கடந்த அக்டோபரில் பரஸ்பர நிதி எஸ்ஐபி திட்டங்கள் இதுவரை இல்லாத வகையில் ரூ.13,041 கோடி முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்துள்ளன.
பணவீக்கம் மற்றும் சந்தை ஏற்ற - இறக்க காலகட்டத்தில் வெவ்வேறு சொத்துகளில் முதலீடு செய்வது நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான புத்திசாலித்தனமான வழிமுறையாகும். குறைந்த ரிஸ்கை விரும்பும் முதலீட்டாளர்கள் ஆர்டி திட்டத்தையே தேர்வு செய்வதாகவும்,பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை அறிந்தவர்கள் பரஸ்பர நிதியில் எஸ்ஐபி திட்டத்தையே தேர்வு செய்வதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆர்டி vs எஸ்ஐபி: ஆர்டி திட்டங்களில் முதலீடு செய்த பணத்திற்கு மூலதன உத்தரவாதத்தை வங்கிகள் வழங்கும். ஆனால், எஸ்ஐபிதிட்டங்களில் பங்குச் சந்தை அடிப்படையில் பரஸ்பர நிதி திட்டங்களின் செயல்பாட்டைப் பொறுத்தே வருவாய் கிடைக்கும். இதில், முதலீட்டாளர்கள் மொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதிலாக குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறுகசிறுக சேமிக்கலாம். பொதுவாக எஸ்ஐபி திட்டங்களை நீண்ட காலம் வைத்திருந்தால் அதிக வருமானத்தை பெறலாம் என்பது பரவலான கருத்து.
அபராதம்: ஆர்டி திட்டங்களில் உள்ள தொகையை முன்கூட்டியே திரும்பப் பெற்றால் வங்கிகளைப் பொருத்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், எஸ்ஐபி திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து அபராதம் இல்லாமல் பணத்தை திரும்பப் பெறலாம். பங்குகளுடன் உடன் இணைக்கப்பட்ட சேமிப்பு திட்ட எஸ்ஐபிகளுக்கு மட்டுமே மூன்று வருடம்கட்டாய காத்திருப்புக் காலம் உள்ளது.
வட்டி வருமானம்: ஆர்டி திட்டங்களில் வட்டி விகிதம் முன்னரே நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்களுக்கு முதிர்வுகாலத்தில் எவ்வளவு தொகையை பெறப்போகிறோம் என்பது தெளிவாக தெரியும். ஆனால் எஸ்ஐபி திட்டங்களில் வருமானம் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சந்தை உயரும்போது பரஸ்பர நிதித் திட்டம் அதிகபணம் சம்பாதிக்கிறது; குறையும்போது நேர்மாறாக இழப்பு ஏற்படுகிறது.
ஒரு முதலீட்டாளர் ஐந்து ஆண்டுகளுக்கு ஆர்டி திட்டங்களில் 5.8 சதவீதம்முதல் 7 சதவீதம் வரை சம்பாதிக்கலாம். அதேசமயம், பரஸ்பர நிதிகளில் எஸ்ஐபிவகையைப் பொருத்து சராசரியாக 12சதவீத வருவாயை பெற முடியும். சந்தைநிலவரங்கள் சாதகமாக இருக்கும்பட்சத்தில் 15-18 சதவீத வருவாயை கூடப்பெற முடியும். முதலீட்டாளர்கள் கூட்டுவட்டியைப் பெறுவதன் மூலம் நீண்டகால திட்டங்களில் அதிக நன்மைகளைப் பெறலாம். - அ. ராஜன் பழனிக்குமார், rajanpalanikumar.a@hindutamil.co.in