பொருளாதார பார்வையில் காலநிலை மாற்றம்!

பொருளாதார பார்வையில் காலநிலை மாற்றம்!
Updated on
3 min read

மனிதகுலத்துக்கு காலநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது உயிர்,உடமைகளுக்கு மட்டுமின்றி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண செய்யும் வல்லமைமிக்கதாக உருவெடுத்து வருகிறது. பயிர் விளைச்சல் குறைதல், நோய் பரவுதல் மற்றும் கடல் மட்டம் உயர்தல், கடலோர நகரங்கள் அழிதல், உயரும் வெப்பநிலை ஆகியவை 2050-ம் ஆண்டு வாக்கில் உலகளாவிய செல்வத்தை கணிசமாகக் குறைக்கும் என்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிஸ் ரீ இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் 2050-ம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தை 23 லட்சம் கோடி டாலர் அளவுக்கு குறைக்கலாம் என்பது அதன் மதிப்பீடாக உள்ளது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து போதிய நடவடிக்கை எடுக்காததால் அடுத்த 50 ஆண்டுகளில் அமெரிக்கா 14.5 லட்சம்கோடி டாலர் பொருளாதார இழப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக டெலாய்ட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவாக அடுத்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 9 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்பிருப்பதாக டெலாய்ட் எச்சரித்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் 2050-ம் ஆண்டில் உலகப் பொருளாதார உற்பத்தியில் 11 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகளுக்கு அதிக பொறுப்பு: இதன் தீவிரத்தை உணர்ந்தே ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) அமைப்பு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாகவே தேர்வு செய்யப்பட்ட ஒரு நாட்டில் ஆண்டுதோறும் காலநிலை மாநாடு (காப்) நடத்தப்பட்டு வருகிறது.ஜெர்மனியின் பெர்லின் நகரில் முதல் காலநிலை மாநாடு 1995-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக காப் 27 மாநாடு அண்மையில் எகிப்தில் நடைபெற்றது.

உலக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதிலும், காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தாக்கங்களுக்கு ஏற்ப கொள்கைகளை வரையறுப்பதிலும் உலக நாடுகள் இணைந்து செயல்திட்டத்தை வகுக்க இந்த மாநாடு உதவுகிறது. ஏனெனில், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது என்பது ஒரு நாட்டின் முயற்சியால் ஏற்படக்கூடியதல்ல. ஊர்கூடி தேரை இழுப்பதைப்போல் உலகமே ஒன்றுகூடி இதற்குரிய தீர்வை காண வேண்டும்.

வரலாற்று ரீதியில் தொழில்புரட்சிக்கு காரணமான வளர்ச்சியடைந்த நாடுகள்தான் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வருகின்றன. இதனால், ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து தீவு நாடுகள் பாதிக்கப்படுவதுடன், திடீர் வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை வளரும், ஏழை நாடுகள் சந்தித்து வருகின்றன.

இந்தபாதிப்பினை கருத்தில் கொண்டுதான் காலநிலை மாநாட்டு முடிவில் இழப்பீட்டு நிதியத்தை உருவாக்குவதற்கு உறுப்புநாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால், இதற்கு முன்பான மாநாட்டில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் வழங்குவதாக கூறிய ரூ.8 லட்சம் கோடியை இன்னும் அவை வழங்கவில்லை என்பது தனிக்கதை.

இந்தச் சூழலில் இம்மாநாட்டில் கரீபியன் நாடுகளில் ஒன்றான பார்படாஸ் அதிபர் மியா மோட்லி பேசுகையில், “பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் வழங்கும் நிதியுதவி கடன் அடிப்படையிலானதாக இருக்ககூடாது. மாறாக அந்த அணுகுமுறை மானிய அடிப்படையிலானதாக இருக்க வேண்டும்" என்ற தனது எண்ணத்தை வெளிப்படையாக தெரிவித்தார்.

அண்டை நாடான பாகிஸ்தான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் தனது உரையில், “பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாகிஸ்தானுக்கு3,000 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. எங்களைப்போல வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த இழப்பின் அளவு என்பது தாங்க இயலாத ஒன்று.

இந்த நிலையில், காலநிலை மாற்றத்தின் பல்வேறு தாக்கங்களை சமாளிக்க பணக்கார நாடுகள் 2020-ல் 2,900 கோடி டாலரை மட்டுமே ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் இழப்பீடாக அளிக்க முன்வந்தது. அதிகமான தொழிற்சாலையால் அதிக வருமானம் ஈட்டும் நாடுகள் பருவநிலை மாற்ற பாதிப்புகளால் ஏற்படும் சேதத்தை கணிசமாக ஈடு செய்ய வேண்டும்" என்றார். இவ்வாறு ஒவ்வொரு நாடும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால், புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டை குறைத்தாக வேண்டும். முந்தைய காலநிலை மாநாடுகளில் பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டை குறைக்கஅமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஒப்புக்கொண்டபோதும் அதனை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வளர்ந்த நாடுகள் மீது இன்றளவும் உள்ளது.

தவிர, சர்வதேச பொருளாதாரத்தில் கணிசமாக ஆதிக்கம் செலுத்தும் சீனா மற்றும் ரஷ்யநாடுகளின் அதிபர்கள் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்காதது காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக நாடுகளிடையிலான ஒருமித்த கருத்துக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

உலக வெப்பமயமாதல் என்பது வளரும் நாடுகளுக்கும், ஏழ்மையான நாடுகளுக்கும் பொது எதிரியாக மாறியுள்ளது. இதனால், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளை மாற்றியமைக்கும் திறன்சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இல்லையெனில் அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.

புதிய வாய்ப்புகள்:

பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டை குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், அதுசார்ந்த துறை நிறுவனங்களில் சர்வதேச முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகள் உருவாவதற்கும் நல்லவாய்ப்பாக அமையும் என்பது வல்லுநர்களின் கருத்து.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நன்மை கருதி பெட்ரோல், டீசலில் இயங்கும் 15 ஆண்டுகால பழைய வாகனங்களுக்கு முடிவுகட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்கு மாற்றாக, எத்தனால், சிஎன்ஜி, எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வாகனத் துறை உத்வேகம் பெறும் என்பதுடன் இந்த துறையில் புதிய வேலைவாய்ப்புகளும், முதலீடுகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணத்தால் சரி செய்ய இயலாது: இயற்கையில் ஏற்படும் பாதிப்புகளை எத்தனை கோடி டாலர் கொட்டிக் கொடுத்தாலும் சரி செய்ய இயலாது. எனவே, ஒவ்வொரு நாடும் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து அப்பிரச்சினைக்கு அடிப்படையான காரணிகளை ஆராய்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதே சரியான தீர்வாக அமையும்.

முன்னோர்கள் நமது கைகளில் ஒப்படைத்த பசுமை உலகத்தை நாளைய தலைமுறையின் கைகளில் எந்தவித சேதாரமும் இல்லாமல் ஒப்படைப்பதை நாம் அனைவரும் கடமையாக உணர வேண்டிய கடைசி தருணம் இது.

பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டை குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், அதுசார்ந்த துறை நிறுவனங்களில் சர்வதேச முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - அ.ராஜன் பழனிக்குமார் rajanpalanikumar.a@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in