நிரந்தர வைப்புக்கு வரி விலக்கு... வங்கிகளின் விருப்பம் நிறைவேறுமா?

நிரந்தர வைப்புக்கு வரி விலக்கு... வங்கிகளின் விருப்பம் நிறைவேறுமா?
Updated on
2 min read

முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் வங்கிகளுக்கு, பரஸ்பர நிதியங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. இதை உணர்ந்த வங்கிகள், ரூ.5 லட்சம் வரையிலான நிரந்தர வைப்பு (Fixed Deposit) திட்டங்களுக்கு 2023-24 பட்ஜெட்டில் வரி விலக்கு அளிக்கக் கோரி மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளன. பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது சிறிய அளவிலான முதலீடுகளுக்கு வங்கியின் நிரந்தர வைப்புத் (எப்.டி.) திட்டங்களே மாற்றாக அமைந்துள்ளன. இவை நிரந்தர வருமானத்தை வழங்குவதால் மிகவும் பாதுகாப்பானதும்கூட.

இருப்பினும், எப்.டி. மீதான வரி விதிப்பு என்பது பாதகமான அம்சமாகவே இருக்கிறது. வருமான வரிச் சட்டத்தின்படி, எப்.டி.மீதான வட்டி ‘பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம்’ என்று குறிப்பிடப்பட்டு முழுமையாக வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது. உதாரணமாக, எப்.டி.க்கான வட்டி 6% ஆக இருந்தால், முதலீட்டாளர்கள் 30% வரி அடுக்கில் வரும்பட்சத்தில், வரிக்குப் பிந்தைய வட்டியானது 4.2% ஆகக் குறைந்து விடுகிறது.

இதுதவிர, நிரந்தர வைப்பு மூலம் தனிநபர் ஒருவர் ரூ.40,000-க்கு மேல் வட்டி வருமானம் ஈட்டும்பட்சத்தில் (மூத்த குடிமக்கள் தவிர்த்து) அவருக்கு 10 சதவீதத்தை வங்கிகள் மூல வரிப் பிடித்தமாக செய்து விடுகின்றன. இந்த விவகாரத்தில் மூத்த குடிமக்களுக்கான தளர்வு ரூ.50,000 ஆக உள்ளது.

இந்த வரி விதிப்பு பரஸ்பர நிதி திட்டங்களில் வேறு விதமாக உள்ளது. கடன் நிதியங்களுக்கு நீண்டகால திட்டங்களுக்கு 20% வரி விதிக்கப்படுகிறது. குறிப்பாக, பணவீக்கத்தை சரி செய்த பிறகே வரி செலுத்துதல் தொடர்பாக முடிவெடுக்கப்படுகிறது. இவை அவற்றுக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. அதிக வரி இல்லாத வருமானத்தை வழங்குவதால் பரஸ்பர நிதி மற்றும் காப்பீட்டு திட்டங்கள் முதலீட்டாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கின்றன.

இந்த யதார்த்தத்தை உணர்ந்த இந்திய வங்கிகள் சங்கம், ரூ.5 லட்சம் வரையிலான நிரந்தர வைப்புத் திட்டங்களுக்கு வரி விலக்கு அளிக்குமாறு மத்திய நிதி அமைச்சகத்தை நாடியுள்ளது. இதற்கான அறிவிப்பை வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வங்கிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளன.

பங்குச் சந்தை முதலீடு குறையுமா? - நிரந்தர வைப்புத் திட்டங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டால், பங்குச் சந்தையில் மக்கள் முதலீடு செய்வது குறையுமா என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், “ரூ.5 லட்சம் வரையிலான நிரந்தர வைப்புத் திட்டங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்பட்சத்தில், மக்கள் அதிக எண்ணிக்கையில் அதை நோக்கி நகர்வார்கள். ஏனென்றால், வங்கி முதலீடு என்பது ஆபத்தில்லாத ஒன்றாகும்.

ஆனால், அதற்காக மக்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறையும் என்று சொல்ல முடியாது. நிரந்தர வைப்புத் திட்டமும் பங்குச் சந்தை முதலீடும் அடிப்படையில் வெவ்வேறானவை. பிரதானமாக, வருவாயை பெருக்கிக் கொள்ளும் நோக்கிலேயே மக்கள் பங்குச் சந்தையை நோக்கி வருகிறார்கள்” என்கின்றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in