புதிய கார் விற்பனையை முந்திய பழையகார்கள்: மாருதி பலேனோ, ஹோண்டா சிட்டி, ஹுண்டாய் க்ரெட்டா முன்னிலை

புதிய கார் விற்பனையை முந்திய பழையகார்கள்: மாருதி பலேனோ, ஹோண்டா சிட்டி, ஹுண்டாய் க்ரெட்டா முன்னிலை
Updated on
2 min read

முதல் முறையாக கார் வாங்க விரும்புகிறவர்களின் மனநிலையில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. கார் ஓட்டி பழகும்போது அங்கே, இங்கே இடிக்க வேண்டியிருக்கும் என்பதால், முதலில் பழைய காரை வாங்கி பழகிக் கொள்ளலாம் என்று பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். நன்கு பழகிய பிறகு புதிய காரை வாங்கலாம் என்பது அவர்களின் எண்ணமாக உள்ளது.

பழைய கார்களுக்கு மவுசு அதிகரிக்க மற்றொரு சுவாரஸ்யமான காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. நடுத்தர மக்களை மனதில் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு டாடாமோட்டார்ஸ் நிறுவனம் ‘நானோ’ என்ற பெயரில் ரூ.1 லட்சம் விலையில் சிறிய காரை அறிமுகம் செய்தது.

உலகிலேயே விலை குறைவான கார் என்றுடாடா நிறுவனம் மார்தட்டிக் கொண்டது. ஆனால்,இதுவே நானோ காருக்கு வில்லனாக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. நானோ மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. காரணம், நானோ காரின் வடிவமைப்புதான். 1 லட்ச ரூபாய்க்கு இட நெருக்கடியான நானோ காரை வாங்குவதற்கு பதில், இதே விலைக்கு கொஞ்சம் பெரிய, பழையகாரை வாங்கினால் என்ன என்ற எண்ணம் மக்களுக்கு தோன்றியது.

இவர்களின் இந்த எண்ணத்துக்கு ஏற்றார்போல பழைய மாருதி வேகன் ஆர், ஆல்டோ கார்கள் கிட்டத்தட்ட அதே விலைக்கு கிடைத்தன. இன்னும் சொல்லப்போனால் ரூ.40 ஆயிரம் முதலே ஆல்டோ கார்கள் கிடைக்கின்றன. இதையடுத்து, பழைய கார்களுக்கு மவுசு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யும் நவீன வசதிகளுடன் கூடிய கார்களை வாங்குவதற்காக, புதிதாக வாங்கிய கார்களை குறுகிய காலத்தில் விற்கும் போக்கு அதிகரித்துள்ளது.

இதுதவிர, கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட வேலையிழப்பு, வருமான இழப்பு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதுவும் புதிய கார்களை வாங்குவதற்கான மோகத்தை குறைத்து பழைய கார்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய வாகனங்களைப் பொருத்தவரை 3 ஆண்டுகளில் அதன் மதிப்பு சுமார் 60% வரை குறைந்து விடுகிறது. இதனால், புதிய காரை வாங்குவதற்கு பதில் பாதி விலையில் கிடைக்கும் பழைய காரை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஒரு வழியாக பழைய காரை வாங்க முடிவு செய்தவர்களுக்கு எந்த பிராண்டை வாங்குவது என்ற கேள்வி முன்வந்து நிற்கும். அங்கும் புதிய கார்களைப் போலவே, மாருதி சுசூகி பிராண்டுக்குதான் முதலிடம்.

அதிகம் விற்கும் மாடல்கள்: சிறிய கார்களைப் பொருத்தவரை மாருதி சுசூகி பலேனோ, ரெனால்ட் க்விட், ஹுண்டாய் கிராண்ட் ஐ10 ஆகியவை முன்னிலையில் உள்ளன. செடான் வகைகளில், ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹுண்டாய் வெர்னாவும், எஸ்யுவி வகைகளில், ஹுண்டாய் க்ரெட்டா, மாருதிபிரஸ்ஸா, மாருதி எர்டிகாவும் முன்னிலை வகிக்கின்றன. சொகுசு கார்களில்,மெர்சிடஸ் பென்ஸ் இ-க்ளாஸ், பிஎம்டபிள்யு எக்ஸ்1, ஆடி ஏ4 ஆகியவற்றுக்கு பழைய கார் சந்தையில் அதிக மவுசு உள்ளது.

சமீபத்திய நிலவரப்படி இந்தியாவில் 1,000-ல் 25 பேர் மட்டுமே கார் வைத்திருக்கின்றனர். பிரேசிலில் 1,000-ல் 250 பேரிடம் கார் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. எனவே, இந்தியாவில் கார் வாங்குவோர் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரிக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

40 லட்சம் கார்கள்: கடந்த 2021-ல் சுமார் 31 லட்சம் புதிய கார்கள் விற்பனையாகி உள்ளன. ஆனால் இதேஆண்டில் 44 லட்சம் பழைய கார்கள் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் ரூ.2.6 லட்சம் கோடிசந்தையில் புழங்கியது. இது 2027-ல் ரூ.6.15லட்சம் கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பழைய கார்கள் விற்பனை சுமார் 40 லட்சத்தைத் தாண்டும் என ஓஎல்எக்ஸ் ஆட்டோஸ் தலைமைச் செயல் அதிகாரி அமித் குமார் தெரிவித்துள்ளார். இது 2027-ல் 80 லட்சத்தைத் தாண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்பெல்லாம் பெரும்பாலும் பழைய கார்கள் மெக்கானிக் அல்லது உள்ளூர் கடைகள் மூலம் விற்பனையாகின. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மாருதி, ஹுண்டாய், மகிந்திரா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும் பழைய கார் விற்பனையில் கால் பதிக்கத் தொடங்கி விட்டன. இது வாடிக்கையாளர் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி உள்ளது. இப்போதைய நிலவரப்படி பழைய கார் விற்பனையில் அமைப்புசார் நிறுவனங்களின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. இது2026-ல் 45% ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

பழைய கார்களை வாங்கும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் உதவியுடன் பழைய கார்களை வாங்கினால் பெருமளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும். புதிய வாகனங்களைப் பொருத்தவரை 3 ஆண்டுகளில் அதன் மதிப்பு சுமார் 60% வரை குறைந்து விடுகிறது. இதனால், புதிய காரை வாங்குவதற்கு பதில் பாதி விலையில் கிடைக்கும் பழைய காரை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. - க.ஆனந்தன், anandhan.k@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in