வெள்ளம் வடிந்தாலும் துயரம் தொடர்கிறது

வெள்ளம் வடிந்தாலும் துயரம் தொடர்கிறது
Updated on
3 min read

கடந்த ஆண்டின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்படுத்திய இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல, நம் நினைவிலிருந்து அந்த துயரங்கள் அகல இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். இந்த ஒரு ஆண்டு காலத்தில் தங்களது அனைத்து இழப்புகளிலிருந்தும் மீண்டு வர முயன்று கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஆனால் இழந்தவற்றை மீட்க முடியுமா என இப்போதும் மீளா வருத்தங்களில் உள்ளனர் சிறு தொழில் துறையினர்.

இந்த ஒரு ஆண்டு காலத்தில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் மீட்பு நடவடிக்கைகள் குறித்து இயற்கை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் என்கிற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு மிக மோசமான சித்திரத்தையே அளிக்கிறது. பெரும்பான்மையான சிறு குறு தொழில் நிறுவனங்கள் வெள்ளத்தின் பாதிப்புகளிலிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்கிறது அந்த ஆய்வறிக்கை.

சென்னையின் மட்டும் 12 தொழிற்பேட்டைகள் உள்ளன. இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து சிறுதொழில் நிறுவனங்களும் 2016 மார்ச் மாதம் வரையில் எந்த வேலைகளையும் தொடங்கவில்லை. ஏனென்றால் மின் பணிகள் சீரமைப்பு உள்ளிட்ட வேலைகள்கூட முடிக்கப்படாமல் இருந்துள்ளன.

நேரடி பாதிப்புகள்

சென்னை, கடலூரைப் பொறுத்தவரை உற்பத்தித் துறை பெரும் இழப்புகளை சந்தித்தன. சென்னையில் உள்ள மொத்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் சரிபாதிக்கு மேலான நிறுவனங்கள் ஆண்டுக்கு 10 கோடி வரை பரிவர்த்தனை செய்து வந்தவை. இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நேரடி மற்றும் மறைமுக இழப்புகள் சுமார் 5,000 கோடி ரூபாய் இருக்கும் என்கின்றன தொழில் துறை அமைப்புகள். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எந்த மாதிரியான இழப்பு, இழப்பின் மதிப்பு எவ்வளவு என்பதை சொல்ல முடியாது என்றாலும், சராசரியாக ஒவ்வொரு நிறுவனமும் ரூ.11 லட்ச ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளன.

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு வேலைகளை தொடங்கிய ஒரு சில நிறுவனங்களும் இந்த பொருளாதார இழப்புகளை சரிகட்ட மேற்கொண்ட முதல் நடவடிக்கை; வேலைகளைக் குறைத்துக் கொண்டன. அல்லது பணியாளர்களைக் குறைத்துக் கொண்டதுதான். இதனாலும் பல கோடிக்கு உற்பத்தி பாதிப்பு இருந்துள்ளது. தவிர இந்த நிறுவனங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவ வேண்டிய வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், அரசு அமைப்புகள் போன்றவற்றிலிருந்தும் குறிப்பிடும்படியான உதவிகளும் வந்து சேரவில்லை.

மறைமுக பாதிப்புகள்

ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட நேரடி பொருளாதார பாதிப்புகள் தவிர மறைமுக பாதிப்பு களின் மதிப்பும் பல கோடிகளைத் தொடுகிறது. தங்களது வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மையை இழந்தது, ஊழியர்களை இழந்தது, மார்க்கெட்டிங் இழப்பு என பிற இழப்புகளையும் பட்டியலிடுகின்றனர். நேரடி பாதிப்புகளை சரிசெய்ய செலவிடும் தொகைக்கு ஈடாக மறைமுக பாதிப்புகளை சரிசெய்யவும் செலவிட்டோம். ஆனால் நேரடி பாதிப்புகளுக்குக்கூட காப்பீடு மூலம் கிளைம் பெறலாம். மறைமுக பாதிப்பு செலவை எங்கு ஈடு கட்டுவது என கேள்வி எழுப்புகின்றனர். இந்த கண்ணுக்குத் தெரியாத இழப்புகளை சரிசெய்யாமல் விட்டால் பழைய நிலைமைக்கு வர பல ஆண்டுகள் பிடிக்கும்.

இப்போதுகூட கிண்டி, அம்பத்தூர் போன்ற தொழிற்பேட்டைகளில் மீண்டுவர எந்த பிடிமானமும் இல்லாத பல சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. ஒரு ஆண்டு ஆன பிறகும் பெரும்பாலான நிறுவனங்களின் தினசரி நடவடிக்கைகள் முன்பு போல இல்லை. கிட்டத்தட்ட 50 சதவீத அளவுக்குத்தான் பணிகளை மேற்கொள்கின்றன. பழைய கட்டமைப்பை இழந்துள்ளதுடன், மூல பொருள் தட்டுப்பாட்டிலும் உள்ளனர். ஏனென்றால் அந்த நிறுவனங்களும் அதே சுழலில் சிக்கியிருக்கின்றன.

வாடிக்கையாளர் இழப்பு

வாடிக்கையாளர்ளை இழந்ததுதான் மிகப் பெரிய இழப்பாக கருதுகின்றனர் அம்பத்தூர் தொழிற் பேட்டையில். இங்குள்ள கார் உதிரிபாக சிறு உற்பத்தி யாளர்கள் வட மாநிலங்களில் உள்ள கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியவில்லை என்பதால் மிகப் பெரிய இழப்பை சந்தித்தனர். சென்னைக்கு வெளியே ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆர்டர்களை கொடுக்கத் தொடங்கி விட்டன அந்த நிறுவனங்கள். இதனால் ஏற்பட்டுள்ள இழப்புக்கு அரசும் எந்த முன்முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை.

சேவை நிறுவனங்கள்

கடந்த ஆண்டின் பேரிடரில் குறிப்பிடத்தக்க அளவில் சென்னையில் தப்பித்தவை ஐடி நிறுவனங்கள்தான். உற்பத்தி இழப்பு பல கோடியாக இருந்தாலும், பேரிடர் மீட்புத் திட்டம், காப்பீடு போன்றவற்றை முறையாக பராமரித்து வந்துள்ளதால் உடனடியாக மீண்டு விட்டன. அப்போது இருந்த நேரடி மறைமுக பாதிப்புகள் தவிர, அடுத்தடுத்த நாள்களில் ஐடி துறையில் நிலைமை சீரடைந்துள்ளது. இது சென்னை நிலவரம் என்றால் கடலூரின் சேவைத் துறை சார்ந்த இழப்பு சுமார் 200 கோடி ரூபாய்க்கு இருந்தது என்கின்றனர். சிறு தொழில், சேவை நிறுவனங்கள் தொழில்முனைவோர்கள் தற்போது வரை மீள முடியாமல் தொழிலிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மீட்புப் பணிகள்

பாதிப்புகளுக்குப் பிறகான மீட்பு நடவடிக்கைகள் மிகப் பெரிய தொய்வாகத்தான் இருந்தது என்கின்றனர். அரசும், காப்பீடு நிறுவனங்களும், வங்கியும் கூட்டு சேர்ந்து எங்களை மீட்டிருக்க முடியும். ஆனால் நடக்கவில்லை. பணத் தேவைகளுக்காக தனியாரிடம் அதிக வட்டிக்கு வாங்கினோம். காப்பீடு க்ளைம் செய்த விகிதமும் சரிபாதியாகத்தான் உள்ளது. 48 சதவீத நிறுவனங்களுக்கு காப்பீடு கிடைக்கவில்லை. காப்பீடு விரைவாகக் கிடைக்க உதவுவதற்குக் கூட அரசிடம் எங்களுக்கான ஏற்பாடுகள் இல்லை. எங்களது தொழில் அமைப்புகள் மூலமே எல்லாவற்றையும் மேற்கொண்டோம் என்றனர்.

பேரிடர் சமயத்தில் அரசு பல உத்தரவாதங்களை அளித்தது. ஆனால் நடக்கவில்லை. தொழில் அமைப்புகள் மூலமாகவும் பல கோரிக்கைகளை வைத்தோம். குறிப்பாக வட்டியில்லா வங்கி கடன்கள், நீண்டகால வரிவிலக்கு, விரைவான காப்பீடு க்ளைம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால் இவையும் நடக்கவில்லை. ஒட்டுமொத்தமாக இப்போது வரையில் எங்களுக்கு நாங்கள் தான் உதவி என்கின்றனர் தமிழக சிறு தொழில் நிறுவனங்கள்.

தொழில் துறை வளர்ச்சியில் 2014ல் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது பத்து இடத்துக்குள் கூட இல்லை. தொழில் துறை வளர்ச்சியை அரசு புறக்கணித்தால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்படும் ஆபத்து உள்ளது.

- maheswaran.s@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in