Published : 05 Dec 2016 11:58 AM
Last Updated : 05 Dec 2016 11:58 AM

புலி வாலை பிடித்துவிட்டதா மத்திய அரசு?

“எங்கெங்கு காணினும் சக்தியடா” என்று பாரதியார் முழங்கியது போல கடந்த ஒரு மாத காலமாக ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது “கறுப்புப்பண ஒழிப்புத்திட்டம்”. இந்திய பொருளாதார வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு முக்கியத்துவம் பெற்ற செய்தி இதுதான் என்றால் மிகையாகாது. இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பணத்தில் 86 சதவீதமான ரூ.500 மற்றும் ரூ.1,000 ஒரே இரவில் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் சர்வதேச அளவிலான பார்வையை இந்தியாவின் மீது திசை திருப்ப வைத்தவர் பிரதமர் மோடி.

கறுப்புப்பண ஒழிப்பு, கள்ளப்பண களை யெடுப்பு, தீவிரவாத பண முறியடிப்பு, ஊழல் வேரறுப்பு என்ற உன்னத நோக்கங்களோடு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை அறிவித்தவுடன் மக்களிடம் பெரும் வரவேற்புப் பெற்றது. எதிர்க்கட்சிகளை கடும் விமர்சனம் செய்ய வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபடச் செய்துள்ளது. பேசாத முன்னாள் பிரதமரைப் பேச வைத்துள்ளது. கறுப்புப்பணம், ஊழல் ஆகியவற்றை கணிசமாகக் குறைக்க உதவும் திட்டம் என்றாலும், பல சவால்களையும் கொண்டு வந்துள்ளது.

நடைமுறை சவால்கள்

ரியல் எஸ்டேட், தங்கம் வியாபாரம் சோர் வடைவது ஒரு பக்கம். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயம், சிறுகுறுந்தொழில்கள் போன்ற ரொக்கத்தில் நடைபெறும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்திற்கு சிரமப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிறு குறுந்தொழில்களில் வெளி மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ள னர். அவர்களில் ஆதார் அட்டை வங்கிக் கணக்கு இல்லாமல் ரொக்கத்தில் மட்டும் பரிவர்த்தனை செய்பவர்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் வங்கியில் கணக்கு மூலம் சம்பளம் பெறும் பட்சத்தில் இஎஸ்ஐ, பிஎப் போன்ற தொழிலாளர் நலத்திட்டங்களின் பயனைப் பெறுவார்கள்.

ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இணையவழி வங்கி பணப்பரிவர்த்தனை, ஆர்.டி.ஜி.எஸ், தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை (NEFT), ஐ.எம்.பி.ஸ் (Immediate Payment Service), மொபைல் பணப் பரிவர்த்தனை, காசோலை, வரைவோலை போன்ற முறைகளில்தான் இனிமேல் பரிவர்த்தனை பெருமளவு செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 6 லட்சம் கிராமங்களை கொண்ட இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு மேல் வங்கி பழக்கமோ, புழக்கமோ இல்லாதவர்கள். இவர்களுக்கு வங்கி பழக்கத்தை விரைவில் புகுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது.

இன்னும் ஏராளமான நடுத்தர மக்களுக்கு இணையவழி வங்கி (Internet Banking) உபயோகம் பாதுகாப்பானதா என்கிற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் வேளை யில் சிறுநகரங்களில் தடையற்ற மின்சாரம் விநி யோகத்தையும் கொடுக்க ஆவண செய்தால் பலன் பல மடங்காகும். கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் வர்த்தகத்திற்கு வியாபாரி களிடம் சுமார் 1% சேவைக் கட்டணம் வசூலிக் கப்படுகிறது. அனைத்து ரொக்கமில்லா பரிவர்த்த னைகளுக்கும் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணத்தைக் குறைக்க புதிய வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். சிறு குறுந்தொழில திபர்கள், சிறு வியாபாரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதும் பரவலான கேள்வி.

நாட்டின் உற்பத்தி வளர்ச்சியில் 1.5% முதல் 2% தொய்வு ஏற்படும் அபாயம் உள்ளது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வருமான வரி இலாகாவும், ரிசர்வ் வங்கியும் புதிய விதிகளையும் விதித் திருத்தங்களையும் கொண்டு வருவது நடுத்தர வர்க்க மக்களுக்கு கிலியையும் பீதியையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் உண்மை.

மீண்டும் தாமாக அறிவிக்கும் திட்டம்

நவம்பர் 8-க்கு பிறகு கறுப்புப்பணத்தை மாற்ற மற்றவர்கள் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்து எடுப்பது, பழைய ரூபாய்க்கு புதிய நோட்டுகளாக மாற்றுவது, போன்ற முயற்சியில் பலர் ஈடுபட்டு இருந்த நிலையில் வரியாக செலுத்தி கணக்கை நேர்படுத்திக் கொள்ள அரசாங்கம் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.

கணக்கில் 50% வரி செலுத்தி மேலும் 25% பணத்தை நான்கு ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் பிஎம்ஜிகேவொய் ( PMGKY) என்கிற பிரதம மந்திரி திட்டத்தில் முதலீடு செய்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தாமாக முன்வந்து வரி செலுத்தும் திட்டமாகும். ஆனால் வருமான வரி இலாகாவால் கணக்கில் காட்டாத பணம் கண்டுபிடிக்கப்பட்டால் 85% வரியும் அபராதமும் விதிக்கப்படும் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் கறுப்புப் பணத்தை ஒழிக்க இரும்புக்கர நடவடிக்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கும் வியூகங்களைப் பார்த்து, பலர் புதிய வருமான அறிவிப்புத் திட்டத்தை பயன்படுத்தி 30.12.2016 க்கும் முன்பாக சரி செய்யும் முயற்சியில் ஈடுபட நிறைய வாய்ப்புள்ளது. கணக்கில் உள்ள பணத்தை 8 நவம்பருக்குப் பின் டெபாசிட் செய்தவர்கள் அதற்கு சரியான விளக்கம் கொடுத்தால் வரி ஏதும் செலுத்த தேவையில்லை ஆனால் தற் போதைய வரித்திருத்த நடைமுறையில் வரி அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் விளக்கம் எந்த அளவுக்கு எடுபடும் என்பதையும் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் அதிகபட்சமாக 30% வரி கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சரியான படி வரியை செலுத்தாமல் இருந்தவர்கள்தான் இப்போது சிரமப்படுகின்றனர். அமெரிக்காவில் 39% வரியுடன் மாநில மற்றும் நகர வருமான வரியை சேர்த்தால் சுமார் 49% வரை வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. இப்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் ரொக்க ரத்துத் திட்டப்படி சுமார் 14.5 லட்சம் கோடி அளவில் உள்ள ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகளில் கள்ளப்பணம், கறுப்புப் பணம் போன்றவை சுமார் 4 அல்லது 5 லட்சம் கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வராது என்று எடுத்துக்கொண்டால் அரசிற்கு அது வருமானம் என்று கருதலாம். இந்தப் பணத்தை அரசு மக்கள் நலனுக்கு எப்படி செலவிட போகிறது என்பதைக் காண பொது ஜனம் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

என்ன எதிர்பார்க்கலாம்

தொழில் முனைவோருக்கு வரி விகிதங்கள் குறைக்கப்படலாம், அரசு நிர்வாகத்தில் ஊழலை குறைக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம், வறுமைக் கோட்டுக்கு அருகே உள்ள மக்களுக்கு நலத்திட்டங்கள் அதிக அளவு செய்யப்படலாம் இவற்றை செய்தால் தான் உன்னத நோக்கத்திற்கும், மக்களின் ஒத்துழைப்பிற்கான முழுப்பலனும் கிடைக்கும். ஏடிஎம் இயங்காதது, வங்கிகளில் பணம் இல்லை என்று வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பியது போன்ற வங்கியின் குறைபாடுகள் பொதுமக்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

குறுகியகால விளைவுகள்

86% பணப்புழக்கத்தில் சுமார் முக்கால் பகுதி இப்போது புழக்கத்தில் இல்லாததால் பொருட்களுக்கான தேவைகள் குறைந்து காணப்படுகிறது.

மக்கள் குறைத்து செலவு செய்வதால் புதிய நோட்டுகள் படிப்படியாக புழக்கத்தில் சகஜமாக வரும்போது மீண்டும் தேவைகள் அதிகரிக்கும். அரசு 86%-ல் பாதி அளவு ரொக்கம் புழக்கத்தில் இருந்தால் போதுமானது என்று நம்புகிறது. குறுகிய காலத்தில் உற்பத்தி சற்று குறையும், அன்றாட சம்பளம் பெறுபவர்கள் ரொக்கமாக கிடைக்காமல் வருமானம் குறைந்து காணப்படுவார்கள்.

வங்கிகள் மற்றும் மொபைல் பயன்பாட்டின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் மக்கள் அதிகளவு உபயோகப்படுத்த ஆரம்பிப்பார்கள்.

நீண்ட கால விளைவுகள்

வட்டி குறைந்தாலும் மக்கள் வங்கிகளில் அதிக டெபாசிட் செய்வார்கள். இந்தப் பணத்தை தேவையான துறைகளுக்கு வங்கிகள் கடனாக வழங்கி, உற்பத்தியை அதிகரித்து பொரு ளாதார வளர்ச்சி பெருக்க வாய்ப்பாக அமையும். ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட வேண்டிய ஜிஎஸ்டி தள்ளிப் போகும் நிலை ஏற்படலாம்.

கறுப்புப் பொருளாதாரம் என்பதில் ஊழல், கள்ளப்பணம் என்பதும் அடங்கும். கறுப்புப்பணம் என்பது ரொக்கமாக மட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச்சந்தை போன்றவற்றிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய “ரொக்க ரத்து” கையில் வைத்திருக்கக் கூடிய கறுப்புப் பணத்தை மட்டும் தாக்கும். இனிவரும் மாதங்களில் ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட கறுப்புப்பணத்திற்கு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

வரும் ஆண்டுகளில் தனிநபர் வருமான வரி ரத்து செய்யப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் ரத்து செய்வது சிரமமான ஒன்று. சர்வதேச அளவில் 94% நாடுகளில் வருமான வரி இருந்து வருகிறது. பெட்ரோலிய நாடுகள் மற்றும் வரி சொர்க்க நாடுகள் என்று கூறப்படும் மிகச்சிறிய நாடுகளில் தான் வருமான வரி இல்லை. வருமான வரிச்சட்டத்தின் மூலம்தான் பல கிரிமினல் நடவடிக்கைகள் மறைமுகமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது பலர் அறியாத உண்மை. பினாமி சொத்துகளை செப்டம்பர் 30 வரை சரி செய்து கொள்ள வாய்ப்பு அளித்த அரசாங்கம் பினாமி சட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

எதிர்ப்பு, சிரமங்களைத் தாண்டித்தான் “சாதனை மைல் கல்”கள் கடக்கப்படுகின்றன. தற்போதைய சில சிரமங்களும், தியாகங்களும் இந்தியாவைப் பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் என்கிற நம்பிக்கையில் இருப்போம்.

தொழில் முனைவோருக்கு வரி விகிதங்கள் குறைக்கப்படலாம், அரசு நிர்வாகத்தில் ஊழலை குறைக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம், வறுமைக் கோட்டுக்கு அருகே உள்ள மக்களுக்கு நலத்திட்டங்கள் அதிக அளவு செய்யப்படலாம் இவற்றை செய்தால் தான் உன்னத நோக்கத்திற்கும், மக்களின் ஒத்துழைப்பிற்கான முழுப்பலனும் கிடைக்கும்.

- karthikeyanauditor@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x