

நவீன யுகத்தில் தள்ளுபடி, வெகுமதி, இலவசங்களை அசட்டை செய்யும் மனிதர்கள் யாரேனும் இருக்கக்கூடுமா எனக் கேட்டால் இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் வெகுசிலராக இருப்பார்கள். எந்த விதிக்குமே விதிவிலக்கு இருப்பது போல இதற்கும் விதிவிலக்கு உண்டு. ஆனால் பொதுவாக, ஒருவர் சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் தள்ளுபடியை அல்லது பணத்தை மீளப் பெறுவதை (cashback) விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
`பொருள்/சேவையை இப்போது வாங்கிக் கொண்டு பிறகு பணம் செலுத்தலாம்’ என்கிற `பை நவ் பே லேட்டர் (பிஎன்பிஎல்)’ என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டு சமீப காலத்தில் பல `ஸ்டார்ட்-அப்’கள் காளான்கள் போல முளைத்திருக்கின்றன. ஆனால்அது ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்துசந்தையில் நிலைபெறுவதற்கு முன்பே `இப்போது சேமியுங்கள் பிறகு வாங்குங்கள்’ என்கிற கருத்தியலைக் கொண்ட `சேவ் நவ் பை லேட்டர் (எஸ்என்பிஎல்)’ என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் சில `ஸ்டார்ட்-அப்’ கள் சந்தையை வலம் வர ஆரம்பித்திருக்கின்றன.
உதாரணமாக, ஒருவருக்கு ஐ-போன் 13 வாங்க வேண்டுமென்று ஆசை.இந்த பொருளின் மீது ஏதாவது நல்ல`ஆஃபர்’ இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள கூகுளின் உதவியை நாடியபோது கண்ணில்பட்டது `10 சதவீத ரொக்க வெகுமதி’ என்கிற ஓர் அறிவிப்பு. ஆனால் அதைப் பெற வேண்டுமானல் ஒரு நிபந்தனைக்கு உட்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது என்ன நிபந்தனை? இந்தப் பொருளை வாங்க விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை சில மாதங்கள் சேமிக்கவேண்டும் என்பதுதான்.
இது ஓரிருஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட `பை நவ் பே லேட்டர்’ திட்டத்துக்கு முற்றிலும் மாறானதாகும். இந்த பிஎன்பிஎல் திட்டத்தின் கீழ் ஒருவர் பொருளை உடனே வாங்கிக் கொண்டு அதற்கான தொகையை குறிப்பிட்ட சிலமாதங்களுக்குள் வட்டியுடன் சேர்த்துகட்ட வேண்டும். இதனால் பொருளை அல்லது சேவையை வாங்க நினைப்பவர்களுக்கு அந்த நேரத்தில் பணச்சுமை தெரியாது. ஆனால் அதைத் திரும்பக் கட்ட ஆரம்பிக்கும்போது அதன் சுமையை ஓரளவுக்கு உணர ஆரம்பிப்பார்கள்.
ஆனால், இப்போது புதிதாக அறிமுகமாகி வரும் எஸ்என்பிஎல் என்பது வாடிக்கையாளர்களிடையே சேமிப்புப் பழக்கத்துக்கான எண்ணத்தை விதைப்பதோடு, நிதானமாக யோசித்து செலவு செய்யும் ஓர் அணுகுமுறையையும் அவர்கள் மனதில் உருவாக்குகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் இந்நிறுவனங்கள் தள்ளுபடி, செலவு செய்வதில்குறிப்பிட்ட தொகையை திரும்பப் பெறுதல், வெகுமதி புள்ளிகள் என பலசலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
எஸ்என்பிஎல் செயல்பாடு: குறிப்பிட்ட நிறுவனத்தின் செயலியில் தங்களைப் பதிவு செய்து கொண்டபின் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆப்பிள், மேக் மை ட்ரிப், நைக்கா போன்ற பயனாளர் வாங்க நினைக்கும் பொருள்/சேவை நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், பயனாளர் அவருக்கான இலக்கு தொகையையும், மாதந்தோறும் டெபாசிட் செய்வதற்கான தொகையையும், கால அளவையும் தேர்வு செய்ய வேண்டும். ஒருவர் மாதம்ரூ.500 லிருந்து கூட ஆரம்பிக்கலாம். உதாரணத்துக்கு, ஒருவர் ரூ.50,000 மதிப்பு கொண்ட பொருளை வாங்கவேண்டுமென நினைத்தால் மாதம் ரூ.5,000 வீதம் 10 மாதங்கள் சேமிக்கவேண்டும். இதற்காக இந்த நிறுவனங்கள் சில சலுகைகளை வழங்குகின்றன.
`ஹபிள்’ நிறுவனம் டெபாசிட் செய்ததொகையோடு கூடுதலாக சலுகைத்தொகைக்கும் சேர்த்து பரிசுக் கூப்பன் வழங்குகிறது. `டார்டாயிஸ்’ நிறுவனமானது சேமிக்கப்பட்ட தொகைக்கு பொருள் வாங்கியவுடன் அதற்கான ரசீதை சமர்ப்பிக்கும்பட்சத்தில் ரசீது விலையில் 10 சதவீதம் வரையிலான தொகையை பயனாளரின் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது. இந்த சேவைக்கு மறைமுகமான கட்டணமோ, வட்டியோ, ப்ராசஸிங் கட்டணமோ இல்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், வாங்க நினைக்கும் ஒரு பொருளுக்காகவோ, சேவைக்காகவோ சேமிப்பதாகும். டார்டாயிஸ், ஹபிள், மல்டிபிள் போன்ற நிறுவனங்கள் எஸ்என்பிஎல் சேவையை தற்போது வழங்கி வருகின்றன.
ஹபிள் நிறுவனத்துக்கு சிகோயா கேப்பிட்டல் ஆதரவும், ஸ்நாப்டீல் துணைநிறுவனரான குனால் பெஹலின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டார்டாயிஸ் நிறுவனத்துக்கு வெர்டெக்ஸ் வெஞ்சர்ஸ், பெட்டர் கேப்பிட்டல் ஆதரவும், மல்ட்டிப்பிலுக்கு புளூம் வெஞ்சர்ஸ், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், குரோஎக்ஸ் வெஞ்சர் மேனேஜ்மெண்ட், கோடக் செக்யூரிட்டீஸ் ஆதரவும் கிடைத்திருக்கிறது.
"இந்தியர்களில் பெரும்பாலானோர் சேமிப்பு மனப்பான்மை கொண்டவர்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில்பாரம்பரியமான சேமிப்பு முறைகளிலிருந்து போதுமான வருமானம் கிடைப்பதில்லை என்பதோடு கடன் வழங்காமல்விற்பவர்களையும் வாங்குபவர்களையும் இணைக்கும் திறமையான ஒரு தளம் இதுவரை இல்லை" என்கிறார் ஹபிள் நிறுவனத்தின் துணை நிறுவனர்.
இந்நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குருகிராமில் ஆரம்பிக்கப்பட்டது. இதனுடன் நைக்கா, மிந்த்ரா, க்ரோமா, புளூஸ்டோன் போன்ற நிறுவனங்கள் கைகோர்த்திருக்கின்றன. இதோடு சுமார் 20 பிராண்டுகளை இணைப்பதற்கான நடவடிக்கை நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டார்டாயிஸ் நிறுவனம் தனது தளத்தை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு 10 சதவீத அளவுக்கு ஊக்கத் தொகை அளிக்கிறது.
"சேமித்த பிறகு பொருளை வாங்குவது என்பது நீண்டகாலமாகவே இருந்து வரும் பழக்கம், குறிப்பாக சீட்டு கட்டி நகைகள் வாங்குவது அன்றிலிருந்து இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது. இதன் நீட்சியாக மற்ற பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதற்கு எஸ்என்பிஎல் பயன்படும்" என்கிறார் டார்டாயிஸின் துணை நிறுவனர்.
சேவைக்கான வரவேற்பு: இந்த எஸ்என்பிஎல் தளங்கள் சந்தையில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டார்டாயிஸ் இதுவரை 1,50,000 வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பதாகக் கூறுவதோடு இதன் மூலம் அடுத்த நான்கு வருடங்களில் சுமார்500 கோடி டாலர் அளவுக்கு பொருள்களையும் சேவைகளையும் விற்பதற்குஇலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. ஹபிள் செயலியை சுமார் 4 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் வருமானம் ஒவ்வொரு மாதமும் 50 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.
எஸ்என்பிஎல்-க்கும் பிஎன்பிஎல்-க்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், `பிஎன்பிஎல்-ல் கடன் உடனடியாகக் கிடைக்கும், அதனால் வாங்க வேண்டியதை நினைத்தவுடன் வாங்குவதில் திருப்தி கிடைக்கும். ஆனால் கடனை அடைப்பதற்கு திட்டமெதுவும் இல்லாதபட்சத்தில் கடன் என்கிற வலையில் சிக்கிக் கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படும். இதனால் கிரெடிட் ஸ்கோர் பாதிப்புக்கு உள்ளாகும்.
அதோடு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது சம்பந்தமாக கடுமையான கட்டுப்பாடுகளும், வட்டியும், பரிசீலனை கட்டணமும் வசூலிக்கப்படும். ஆனால் எஸ்என்பிஎல்-ல் இந்த சிரமங்கள் எதுவும் இல்லை. ஆனால் நினைத்ததை உடனே வாங்க முடியாத ஓர் அதிருப்தி ஏற்படும். அதாவது விருப்பத்தை தாமதப்படுத்த வேண்டும். இதைத் தவிர பொருளாதார ரீதியில் பிஎன்பிஎல்-ல் இருப்பது போன்ற பாதிப்புகள் இல்லை.
எதிர்காலம் எப்படி: இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என அனைவரும் கூறிவந்தாலும் இதனால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராகி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் பிராண்டுகளை தங்கள் தளத்தில் இணைக்க முயன்றுவருகிறார்கள். இப்போதைய நிலவரப்படி, இந்த சேவையின் மூலம் அதை வழங்குபவர்களும் பயனாளர்களும் பலனடைவார்கள் என்றே தோன்றுகிறது.
பொருளை இப்போது வாங்கிக் கொண்டு பிறகு பணம் செலுத்தலாம் `பை நவ் பே லேட்டர் (பிஎன்பிஎல்) என்ற முறை சமீபத்தில் அறிமுகமானது. இதற்கு நேர் எதிராக, இப்போது சேமியுங்கள் பிறகு வாங்குங்கள் `சேவ் நவ் பை லேட்டர் (எஸ்என்பிஎல்)’ என்ற முறை அறிமுகமாகி உள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே சேமிப்புப் பழக்கத்துக்கான எண்ணத்தை விதைப்பதோடு, நிதானமாக யோசித்து செலவு செய்யும் ஓர் அணுகுமுறையைஅவர்கள் மனதில் உருவாக்குகிறது. - sidvigh@gmail.com