

கேரள மாநிலம் கோழிக்கோடில் 1921-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வர்கீஸ் குரியன் பிறந்தார். அவருடைய தந்தை கோயம்புத்தூரில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்ததால், குரியனின் பள்ளிப் படிப்பும் கல்லூரிப் படிப்பும் தமிழ்நாட்டிலேயே அமைந்தது. கல்லூரி படிப்பு முடித்துவிட்டு பால் உற்பத்தித் துறையில் நுழைந்தார்.
மிகுந்த புத்திக்கூர்மை உடைய வர்கீஸ் குரியனுக்கு இளம்வயதிலேயே ஒரு நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு அமைந்தது. 1950-ல் அமுலின் பொது மேலாளராக வர்கீஸ் குரியன் நியமிக்கப்பட்டபோது அவருக்கு வயது 29. தன்னுடைய வணிக உத்திகள் மூலம் அமுலை முன்னுதாரண நிறுவனமாக மாற்றிக் காட்டினார்.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் 1926-ல் பால் வியாபாரம் முழுவதும் பெஸ்டோன்ஜி எடுல்ஜி என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. பால்சன் என்கிற பெயரில் வெண்ணெய் விற்பனை செய்துபுகழ் பெற்றார் எடுல்ஜி. அவர்நிர்ணயம் செய்யும் விலையில்தான் பால் கொள்முதல் செய்யப்பட்டது.
இதனால் நொந்துபோன பால் உற்பத்தியாளர்கள், ஆனந்த்மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த வல்லபபாய் படேலிடம் புகார் கூறினர். இதைக் கேட்ட படேல் பால் உற்பத்தியாளர்களை கூட்டுறவு சங்கங்களை நிறுவுமாறு அறிவுறுத்தினார். அவற்றை ஒருங்கிணைத்து வழிநடத்துமாறு மொரார்ஜி தேசாயிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
கூட்டுறவு சங்கங்கள்: பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கபட்டபோதும், பால்சன் நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யும் பால் தரமில்லை என்று கூறி விலையைக் குறைத்ததால் பால் உற்பத்தியாளர்கள் கொதித்துப் போனார்கள். கூட்டுறவு சங்கத் தலைவரான திரிபுவன்தாஸ் உடன் சேர்ந்து படேலை மீண்டும் அணுக, அவர் ‘பால்சனை தூக்கி எறியுங்கள்’ என்று கட்டளையிடுகிறார். மேலும் கூட்டுறவு சங்கங்களை எழுச்சியுடன் போராடச் சொல்கிறார்.
இந்தப் போராட்டத்தில், பால்சன் நிறுவனத்திற்கு ஒரு சொட்டுப் பால் கூட விற்கக் கூடாது என்றும், கைரா மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டுறவு சங்கங்களை உருவாக்க வேண்டும்என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதாவது 15 நாள் பாலை யாருக்கும் வழங்காமல் வீதிகளில் கொட்டி உற்பத்தியாளர்கள் பால்சனை பணிய வைக்கின்றனர்.
குரியனின் வருகை: இந்த சமயத்தில்தான் (1949-ம்ஆண்டு) வர்கீஸ் குரியன் ஆனந்தில் இருக்கும் வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி ஆராய்ச்சி நிலையத்தில் இணைகிறார். பிடிக்காத வேலையில் சேர்ந்து விட்டோம் என்று கூறி வேலையை ராஜினாமா செய்கிறார். இதற்கிடையில் திரிபுவன் தாஸ் அவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரின் வேண்டுகோளை ஏற்று கைரா கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக இணைந்துவளர்ச்சிக்கான ஆலோசனைகளை கூறுகிறார் குரியன்.
பிடித்துப்போகவே தனி நபர் வெற்றியைவிட கூட்டாக பணியாற்றி கிடைக்கும் வெற்றி மகத்தானது என்பதை உணர்ந்து, 1950-ம் ஆண்டு கைரா மாவட்ட கூட்டுறவு பால் சங்கத்தின் பொது மேலாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்தக் கைரா கூட்டுறவுச் சங்கம்தான் பின்னர் அமுல் என்று பெயர்மாற்றம் அடைந்தது.
வெண்மைப் புரட்சி: பசுவைவிட எருமை மாடுகள்தான் அதிகம் என்பதை உணர்ந்துஎருமைப்பாலில் இருந்து பால்பவுடர் தயாரிக்க சக பணியாளர்களோடு சேர்ந்து முயற்சி செய்கிறார். ஆனால் இது சாத்தியமில்லை என்று பால் பண்ணை தொழில் நிபுணர் வில்லியம் கூறிவிடுகிறார். ஆனால் அவரின் கூற்றை பொய்யாக்கி எருமைப்பாலில் இருந்து பால் பவுடரை தயாரிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார் குரியன்.
1954-ம் ஆண்டு கைரா கூட்டுறவு சங்கத்தின் முதல் அடிக்கல் நாட்டப்படுகிறது. தேசத்தின், நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டபால் பண்ணைக்கு விவசாயிகள் உரிமையாளர்களாக உருவானார்கள். “இந்த தேசத்தின் பால் பொருள்கள் களத்தில் அந்நிய முதலீட்டை நுழையவிடாமல் கட்டுப்படுத்தி விட்டது நமது விவசாயிகள் மற்றும்அவர்களுடைய கூட்டுறவு சங்கங்கள்” என்றார் இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை குரியன்.
அமுல் நிறுவனம் சமூக ரீதியாகவும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. பால் வியாபாரம் மூலம் பால் பண்ணை தொழிலில் ஈடுபட்ட பெண்களின் வருமானம் உயர்ந்தது. இது பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரத்தை வழங்கியது. அனைத்து பால் சேகரிப்பு மையங்களிலும் ஆண், பெண் பேதமில்லாமல், சாதி, மத வித்தியாசமில்லாமல் வரிசையில் நின்று பால் விற்பனையில் ஈடுபட்டதால், அம்மக்களிடயே சமத்துவம் உருவானது.
சுதந்திரம் பெற்ற சமயத்தில் இந்தியாவில் பால் பற்றாக்குறை நிலவியது. இன்று பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதல்இடத்தில் உள்ளது. இதற்கு அமுல்போட்ட விதைதான் முக்கிய காரணம். இதைப் பின்பற்றித்தான் தமிழ்நாட்டின் ஆவின், கேரளாவின் மில்மா போன்ற மாநில அரசாங்கங்களின் பால் கூட்டுறவு நிறுவனங்கள் உருவாயின. அந்த வெற்றிப் பாதையில் பால் பண்ணை விவசாயிகள் தங்கு தடையின்றி பயணிக்க, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும். - செ.சரத் வேளாண் ஆராய்ச்சியாளர், saraths1995@gmail.com
(26.11.2022 வர்கீஸ் குரியனின் 101-வது பிறந்த தினம்)