சாமானியர்களின் கார்: மாருதி உருவான கதை

சாமானியர்களின் கார்: மாருதி உருவான கதை
Updated on
3 min read

மாருதி கார்களின் வருகை இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையை புரட்டிப்போட்டது என்றால் அது மிகையாகாது. மாருதி நிறுவனம் உருவான கதை சுவாரசியமானது. இந்த கதையை ‘The Maruti Story’ என்ற பெயரில் நூலாக எழுதி உள்ளார் ஆர்.சி.பார்கவா. மாருதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த இவர், தொடக்க காலத்தில் இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

முதலில் இந்திய சாலைக்கேற்பவும் சாமானியர்களுக்கு கட்டுப்படியாகும் விலையிலும் ஒரு காரை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சரியான கூட்டாளியை தேடும் பணி தொடங்கியது. இறுதியில் ஜப்பானைச் சேர்ந்த சுசூகி நிறுவனம் அடையாளம் காணப்பட்டது.அதன் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய சூழலுக்கேற்ப சில மாற்றங்களை செய்து உற்பத்தி தொடங்கப்பட்டது. அவ்வாறு நம் நாட்டின் ஆட்டோமொபைல் துறையில் புரட்சியை ஏற்படுத்திய மாருதி கதையைப் பார்ப்போம்...

இந்திய கார்களுக்கான சந்தையில் 1980 வரை, இந்துஸ்தான் மோட்டார்ஸ் தயாரித்த அம்பாசிடர், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ் தயாரித்த பியட், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் தயாரித்த ஹெரால்ட் ஆகிய கார்கள் மட்டுமே இருந்து வந்தன. தனிப்பட்ட கார் உரிமையாளர்கள் என்று இருந்தவர்கள் மிகச் சிலரே. இந்த காலகட்டத்தில் தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே நிலவிய மிகப்பெரும் இடைவெளி மற்றும் போட்டியின்மை காரணமாக வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் போக்குவரத்து முறையை மேம்படுத்தும் வகையில் மலிவான, நம்பகமான பயணிகள் கார்களை தயாரிப்பதற்கான தீர்வை மாருதி நிறுவனம் வழங்கியது.

லைசென்ஸ் கட்டுப்பாடுகள், அந்நியச் செலாவணி பிரச்சினைகள் போன்றவற்றால் கார் தயாரிப்பில் இறங்குவதற்கு பெருமளவில் ஆர்வம் இல்லாத நேரத்தில் விலை குறைந்த கார்களை தயாரிக்கலாம் என்ற யோசனை அரசுக்கு உதித்தது. 1970-களில் நடுத்தர வர்க்கத்தினர் பயன் பெறும் வகையில் சிறிய கார்களை பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக தயாரிக்கலாம் என மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இது தொடர்பாக ரெனால்ட், ஃபோர்டு மற்றும் நிசான் உள்ளிட்ட வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

வெளிநாட்டு ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு உள்ளடக்கிய திட்டத்திற்கு 57 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படலாம் என அரசு மதிப்பீடு செய்தது. அந்த நேரத்தில், கார் தயாரிப்புக்கு அரசாங்கத்துக்கு முன்னுரிமை அளிக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. வளப் பற்றாக்குறை (Shortage of Resources) இருப்பதை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் கார் தயாரிக்க விரும்பும் தனியார் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தலாம் என உத்தேச ஒப்புதல் கடிதங்கள்- (Letter of Intent LoI) வெளியிடப்பட்டன. அந்த விருப்ப கடிதங்கள் பெற்றவர்களில் ஒருவர்தான் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி.

அந்த நேரத்தில் சஞ்சய் காந்தி, மாருதி மோட்டார்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்கள் தயாரிக்கும் திட்டம் மாருதி மோட்டார்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஹரியாணாவில் உள்ள குர்கானில் 297 ஏக்கர் நிலம் 35 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இருப்பினும் வர்த்தக ரீதியாக மாருதி மோட்டார்ஸ் நிறுவனம் கார்களை தயாரிக்க இயலவில்லை. இதையடுத்து அந்த நிறுவனம் 1977-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. 1980 ஜூன் மாதம் ஒரு விமான விபத்தில் சஞ்சய் காந்தி மரணமடைந்தார்.

இந்திரா காந்தி, தனது மகனின் கனவை நனவாக்க, தனது உறவினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேருவை அழைத்து மாருதியை உயிர்ப்பிக்க வழி இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார். அரசியலுக்கு வருவதற்கு முன் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அருண் நேருவுக்கு, மாருதி நிறுவனத்தைப் பற்றி ஓரளவுக்கு விஷயம் தெரிந்திருந்தது. இதனால், "மாருதி கார் தயாரிப்புக்கு புத்துயிர்கொடுக்கலாம். ஆனால், தொழில்நுட்பத்தை வழங்க சரியானஒரு வெளிநாட்டு கார் நிறுவனத்தின் ஒத்துழைப்பு தேவை, ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்கள் தயாரித்தால் வர்த்தக ரீதியாகவெற்றி பெற முடியும்" என ஆலோசனை கூறினார்.இதன் அடிப்படையில், 1981 பிப்ரவரி 24-ம் தேதி'மாருதி உத்யோக் லிமிடெட்' என்ற நிறுவனம் (பொதுத் துறை) தொடங்கப்பட்டது.

மாருதி நிறுவனத்தை திறம்பட நிர்வகிக்க சரியான நபர்களை பணியமர்த்தினால்தான் வெற்றி கிட்டும் என்பதை இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். இதனால்,பொதுத்துறையிலும் தனியார் துறையிலும் திறமையாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்து மாருதி நிறுவன உயர் பதவியில் அமர்த்தினார்.அன்றைய டெல்கோ, இன்றைய டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேர்மனாக இருந்த சுமந்த் மூல்கோகரை தலைமை பொறுப்பில் அமர்த்தினார். BHEL நிறுவனத்தில் பணிபுரிந்த V கிருஷ்ணமூர்த்தியை நிர்வாக இயக்குநராக பணியமர்த்தினார்.

IIM அகமதாபாத்தில் MBA பட்டம் பெற்ற D.S. குப்தா மற்றும் இந்நூலாசிரியரும்ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று BHEL நிறுவனத்தில் இயக்குநராக பணிபுரிந்த ஆர் சி பார்கவா உள்ளிட்டோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதியில் ஜப்பானைச் சேர்ந்த சுசூகி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் மாருதி இடையே1982-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்துமாருதி உத்யோக் நிறுவனம், மாருதி சுசூகி இந்தியா என பெயர் மாறியது. 1983-ம் ஆண்டில் முதல் மாருதி 800cc கார் தயாரானது. இந்த முதல் காரை யாருக்கு வழங்குவது என்பதற்காக குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர் ஹர்பால் சிங்கிடம், முதல் காரின் சாவியை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வழங்கினார். அப்போது முதல் மாருதியின் வெற்றிப் பயணம் தொடங்கியது.

ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருந்த மாருதி, வெளிநாட்டு கூட்டாண்மை மேற்கொள்ளும்போது உருவாகக் கூடிய சிக்கல்கள், அரசியல் லாபி, நாடாளுமன்றக் கூட்டங்களில் மாருதி பற்றிய விவாதங்கள் என சந்திக்காத பிரச்சினையே இல்லை. நிறுவனம் மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளில் தொழிற் சங்கத்தையும் முதன்முதலாக இணைத்தது மாருதிதான்.

ஒரே சீருடை.. ஒரே உணவு..

இயக்குநர் முதல் தொழிலாளி வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை, ஒரே மாதிரியான மதிய உணவு வழங்கப்பட்டன.மேலும்மேலாளர்கள் அமரும் அறைகள் ஓபன் குபீகிள் முறையில் வடிவமைத்தது, போனஸ் வழங்குவதற்கான உற்பத்தித்திறன் அளவீடுகள், நாடு முழுவதும் சர்வீஸ் ஸ்டேஷன், வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ள டோல்ஃப்ரீ தொலைபேசி எண், கார் இன்சூரன்ஸ், கார் வாங்க கடன், கார் ஓட்டக் கற்றுக்கொள்ள டிரைவிங் ஸ்கூல் என பல்வேறு 'முதல்' அம்சங்களை மாருதி அறிமுகப்படுத்தியது..

மலிவான விலையில் தரமான கார், குறைந்த விலையில் உதிரி பாகங்கள், குறைவான பராமரிப்பு செலவு, மக்கள் கார் (People’s Car)என மாருதி கார் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.இந்தியாவில் 4 தொழிற்சாலைகளில் 16 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு, 15-க்கும் மேற்பட்ட மாடல்களை தயாரித்து, இந்திய வாகன சந்தையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

1983 முதல் 2.5 கோடி கார்களுக்கு மேல் மாருதி தயாரித்திருப்பதாக சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வாகன தொழிற்சாலைகள் மூலம் எண்ணற்ற ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என்பதால் இந்தியாவில் வாகனத் தொழில் எவ்வாறு வளர்ந்தது என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த கையேடாக இருக்கும்.

- சுப மீனாட்சி சுந்தரம் somasmen@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in