

பூமியில் இயற்கை வளங்கள் வேகமாக குறைந்து வருவதுடன் பருவநிலையும் வியக்கத்தக்க வகையில் மாறி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்பது மிகப்பெரிய கவலைக்குரியதாகி உள்ளது. வரும் காலத்தில் மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு உணவுப்பொருட்கள் 75 சதவீதம் காரணமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்துக்கு உணவுத் துறை நிபுணர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில்தான் அதிக புரோட்டீன் சத்துகளைக் கொண்ட தாவர உணவுகளை (ஸ்மார்ட் புரோட்டீன்)உருவாக்கி உள்ளனர். அதாவது, தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கும் இந்த உணவுப்பொருட்கள் தோற்றத்திலும் சுவையிலும் விலங்கு இறைச்சி போலவே இருக்கும். தாவர புரோட்டீன் வளர்ந்த நாடுகளில்தான் முதலில் உருவானது. ஆனால் இப்போது இந்தியாவிலும் இது கால் பதித்துள்ளது.
இந்நிலையில், இந்திய நல் உணவு நிறுவனம் (ஜிஎப்ஐ), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி), வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஆகியவை இணைந்து சமீபத்தில் ஸ்மார்ட் புரோட்டீன் உச்சி மாநாட்டை நடத்தின.
இதுகுறித்து ஜிஎப்ஐ தலைவர் வருண் தேஷ்பாண்டே கூறும்போது, “உணவுப் பாதுகாப்பு தொடர்பாக நாம் சந்திக்கும் சவால்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தாவரங்கள், செல்கள் மற்றும் மைக்ரோ ஆர்கனிசம்களில் இருந்து தயாரிக்கப்படும் இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள் மிகவும் பாதுகாப்பானவையாக உள்ளன. இந்தியாவில் இப்போது 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக நீளமானது” என்றார்.
பிக்கி ஆலோசகரும் மத்திய அரசின்முன்னாள் வேளாண் துறை செயலாளருமான சிராஜ் ஹுசைன் கூறும்போது, “ஸ்மார்ட் புரோட்டீன் என்பது புதிதாக இருக்கலாம். ஆனால், இந்தத் துறைக்கு சர்வதேச அளவில் நல்ல எதிர்காலம் உள்ளது. உணவுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஜிஎப்ஐ உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்மார்ட் புரோட்டீன் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இந்தத் துறை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருகிறது. புதிய தொழில்நுட்பம், ஸ்டார்ட்-அப்களின் முதலீடு ஆகியவை இத்துறையை ஊக்கப்படுத்தி வருகின்றன.
தாவர அடிப்படையிலான இறைச்சி விலங்கு இறைச்சியை பின்னுக்குத் தள்ளுமா? காலம்தான் பதில் சொல்லும்.
இந்தியாவில் தாவர புரோட்டீன் சந்தை வாய்ப்பு குறித்த ஜிஎப்ஐ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
# ரூ.1,803 கோடியாக உள்ள தாவர இறைச்சி சந்தை 2030-ல் ரூ.5,884 கோடியாக உயரும்.
# ரூ.527 கோடியாக உள்ள தாவர முட்டை சந்தை 2030-ல் ரூ.1,416 கோடியாக உயரும்.
# இப்போது ரூ.4,827 கோடியாக உள்ள தாவர அடிப்படையிலான பால்பொருள் சந்தை ரூ.10,625 கோடியாக உயரும்.