ட்ரோன் துறையில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள்

 காந்த்
 காந்த்
Updated on
3 min read

ட்ரோன் எனப்படும் சிறிய அளவிலான பறக்கும் இயந்திரம் இந்தியாவில் முன்பு ராணுவத்தில் கண்காணிப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது வேளாண்மை, கட்டுமானம், மருத்துவம், இ-காமர்ஸ் என பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வேளான் துறையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க, பயிர்களின் நிலையை அறிந்துகொள்ள, கட்டுமானத் துறையில் நிலம் அளவிட, கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய, இ-காமர்ஸ் துறையில் பொருள்களை விரைவாக விநியோகம் செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவை ட்ரோன் செயல்பாடுகளின் மையமாக மாற்றும் இலக்கில் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. ட்ரோன் தயாரிப்பையும் அது தொடர்பான சேவைகளையும் ஊக்குவிக்க திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதனால், ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பாக இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக, ட்ரோன் உருவாக்கம், ட்ரோன் மென்பொருள் பொறியாளர், ட்ரோன் பைலட், ட்ரோன் டேட்டா நிபுணர் உள்ளிட்ட பிரிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

ட்ரோன் உருவாக்கம்: இந்தியாவில் பல புதிய நிறுவனங்கள் ட்ரோன் தயாரிப்பில் களமிறங்குகின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல வெளிநாட்டு நிறுவனங்களும் ட்ரோன் தயாரிப்பு சார்ந்து இந்தியாவில் முதலீடு செய்கின்றன. அந்த வகையில் ட்ரோன் வடிமைப்பு, தயாரிப்பு மற்றும் அசெம்பிள் ஆகிய பிரிவுகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. குறிப்பாக, ஏரோநாட்டிகல், மெக்கானிக்கல், ரோபாடிக்ஸ், மின்சாரம் மற்றும் மின்னணு உள்ளிட்ட பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

மென்பொருள் பொறியாளர்: ட்ரோன் முதன்மையாக தரவு சேகரிப்புப் பணிகளுக்குப் பயன்படுவதால், ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற வகையில் அதற்கான மென்பொருளை உருவாக்க வேண்டியது அவசியம். இதனால் ட்ரோன் இயக்கம் தொடர்பான மென்பொருள் பொறியாளர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.

ட்ரோன் பைலட்: ட்ரோன்களை இயக்குபவர்கள் ட்ரோன் பைலட் என்று அழைக்கப்படுகின்றனர். தற்போது பல்வேறு துறைகளில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ட்ரோன் பைலட்டுகளுக்கு மிகப் பெரும் அளவில் வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது.

டேட்டா நிபுணர்: ட்ரோன் மூலம் பெறப்படும் தரவுகளை பகுப்பாய்வு செய்து அவற்றை பயன்பாட்டுக்கானதாக மாற்ற வேண்டும். இதற்கு தரவு ஆய்வில் நிபுணத்துவம் கொண்டவர்களின் பங்களிப்பு மிக அவசியம். அந்த வகையில் தரவு பகுப்பாய்வு நிபுணர்களுக்கு ட்ரோன் துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

1 லட்சம் ட்ரோன் பைலட்கள் தேவை

பட்டப்படிப்பு இல்லாதவர்களுக்கு நல்ல வருமானம் தரக்கூடியதாக ட்ரோன் பைலட் வேலைவாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 1 லட்சம் ட்ரோன் பைலட்கள் தேவைப்படுவார்கள் என்று சமீபத்தில் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. இந்தச் சூழலில் அதிக எண்ணிக்கையில் ட்ரோன் பைலட்டுகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய ஊரான் அகாடமி, அமெரிக்காவின் டி ட்ரோன் வேர்ல்டு ஆகியவை இணைந்து சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன்படி ட்ரோன் பயிற்சி மையம் அமைக்கப்படும். இதில் ஆண்டுக்கு 2,500 பேருக்கு ட்ரோன் பைலட் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுபோல நாடு முழுவதும் ட்ரோன் பைலட் பயிற்சி நிலையங்கள் உருவாகி வருகின்றன. இந்தப் பயிற்சி நிலையங்களுக்கு விமானப் போக்குவரத்துக் கழகம் (டிஜிசிஏ) அங்கீகாரம் வழங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் டிஜிசிஏ அங்கீகாரம் பெற்ற 35 பயிற்சி நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் அங்கமான எம்ஐடி, டிஜிசிஏ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் ஒன்று.

இந்திய ராணுவத்தில் விங் கமாண்டராக இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீகாந்த், எம்ஐடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ரிமோட் பைலட் பயிற்சி அமைப்பின் (CASR RPTO) தலைமை செயல்பாட்டு அலுவலராக (சிஓஓ) உள்ளார். ட்ரோன் பைலட் சான்றிதழின் முக்கியத்துவம் என்ன, ட்ரோன் பைலட் பயிற்சி மூலம் என்னென்ன துறைகளில் இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெற முடியும் என்பன குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.

ட்ரோன் பைலட் சான்றிதழ் ஏன் அவசியம்: எப்படி, சாலையில் வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் கட்டாயமோ, அதுபோலவே ட்ரோனை இயக்கவும் உரிமம் அவசியம். இன்னும் சில ஆண்டுகளில் வானில் ட்ரோன்கள் அதிக எண்ணிக்கையில் பறந்துகொண்டிருக்கும். எனவே, அதை இயக்குவதற்கு முறையான தகுதி அவசியம். அதற்காகவே தற்போது ட்ரோன் பைலட் பயிற்சி வழங்கப்படுகிறது. 2 கிலோவுக்கு மேல் எடையுள்ள ட்ரோன்களை இயக்க ட்ரோன் பைலட் உரிமம் பெறுவது கட்டாயம். இந்த உரிமம் இருந்தால் மட்டுமே வணிகரீதியான பயன்பாட்டுக்கு ஒருவர் ட்ரோனை இயக்க முடியும். எனவே ட்ரோன் பைலட்டாக ஆக விரும்புபவர்கள் அதற்கான பயிற்சி நிலையத்தில் சேர்ந்து முறையாக பயிற்சி பெற்று சான்றிதழ் பெற வேண்டும்.

அடிப்படைத் தகுதி என்ன: 18 முதல் 65 வயது வரையில் உள்ள எவரும் இந்தப் பயிற்சியைப் பெறலாம். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். பயிற்சி பெறுபவருக்கு குற்ற வழக்குகளில் தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்யவே பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ட்ரோன் பயிற்சியைப் பெறுபவர்கள் அதை சட்ட விரோதப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசு மிகுந்த கவனமாக உள்ளது.

தமிழ்நாட்டில் எங்கெங்கு ட்ரோன் பைலட் பயிற்சி வழங்கப்படுகிறது: தமிழ்நாட்டில் பல நிறுவனங்கள் ட்ரோன் பைலட் பயிற்சி வழங்குகின்றன. டிஜிசிஏ அனுமதி பெற்றிருக்கும் நிறுவனங்களில் பயில்வதுதான் சிறந்தது. தமிழ்நாட்டில் எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை https://digitalsky.dgca.gov.in/training-organizations என்ற இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

எத்தனை நாட்கள் பயிற்சி வழங்கப்படும்: 7 முதல் 10 நாட்கள்தான் மொத்த பயிற்சி காலம். பயிற்சியில் தேர்ச்சி அடைபவர்களுக்கு டிஜிசிஏ சான்றிதழ் வழங்கப்படும்.

எவ்வளவு கட்டணம்: பொதுவாக இந்திய அளவில் ட்ரோன் பைலட் பயிற்சிக்கு ரூ.1 லட்சம் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே அண்ணா பல்கலைக்கழகம் ஒப்பிட்டளவில் குறைந்த கட்டணத்தில் ட்ரோன் பைலட் பயிற்சி வழங்குகிறது. மாணவர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.45,000 வரையிலும், மாணவர்கள் அல்லாது பொதுப் பிரிவின் கீழ் வருபவர்களுக்கு ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

என்ன துறைகளில் வேலைவாய்ப்பு பெற முடியும்: ஊடகத் துறையில் ஆரம்பித்து வேளாண், சர்வே, மேப்பிங், வன மேலாண்மை, நீர் மேலாண்மை, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என பல் வேறு பணிகளில் ட்ரோன் பைலட்களுக்கு நிறைய தேவை இருக்கிறது. ரூ.30 ஆயிரம் முதல் சம்பளம் பெற முடியும். வெளிநாடுகளில் இன்னும் அதிகமான ஊதியத்தில் வேலை பெற முடியும். வரும் ஆண்டுகளில், ட்ரோன் பைலட் என்பது மிக முக்கியமான வேலைவாய்ப்பாக இருக்கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in