

1980-கள் வரை இந்திய சந்தையில் அம்பாசிடருக்கு அடுத்தபடியாக பிரபலமாக இருந்த ஒரே கார் ஃபியட்தான். சிறிய ஸ்லிம் மான கார் என்ற வரிசையில் ஃபியட்டுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.
கால ஓட்டத்தில் பழைய கார்கள் காணாமல் போனதைப் போல ஃபியட்டின் ஆரம்ப மாடல்கள் இந்தியச் சந்தையில் முற்றிலுமாக இல்லாமலே போனது. இத்தாலியைச் சேர்ந்த ஃபியட் நிறுவனம் தனது தாய் நிறுவனமான கிரைஸ்லருடன் இணைந்து மீண்டும் இந்தியச் சந்தையில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது..
இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப புதுப்புது மாடல்களில் கார்களை அறிமுகப்படுத்துவதோடு புதிய தொழில் நுட்பங்களையும் இந்நிறுவனம் புகுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் புன்டோ, லீனியா, புன்டோ எவோ, அபார்த் ஆகிய மாடல்கள் இப்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்குகின்றன.
இந்தியாவின் அனைத்துப் பகுதி களிலும் தங்களது தயாரிப்பைக் கொண்டு செல்ல ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம் புதிய உத்தியை வகுத்துள்ளது. இதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோ மொபைல் நிறுவனமான ஜீப் தயாரிப்பு களை இந்தியச் சந்தையில் விற்க ஃபியட் கிரைஸ்லர் திட்டமிட்டுள்ளது.
ஜீப் நிறுவனம் 1941-ம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஒஹையோ மாகாணம் டொலோடோவில் உள்ளது. இந்தியச் சந்தையில் தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்த இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் தங்களது தயாரிப்புகளை ஜீப் காட்சிக்கு வைத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜீப் ராங்லர் மற்றும் ஜீப் கிராண்ட் செரோகி ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஜீப்களை தங்களது விற்பனையகங்களில் விற்பனை செய்ய ஃபியட் முடிவு செய்துள்ளது. இதற்கென பிரத்யேக விற்பனையகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த விற்பனையகங்கள் ஆன் ஸ்டோர் என்றழைக்கப்படுகின்றன. மிகப் பெரிய இட வசதியுடன் விற்பனைக்குப் பிந்தைய சேவை அளிக்கக் கூடிய சர்வீஸ் மையங்களையும் உள்ளடக்கிய விற்பனையகங்களைத் தொடங்க ஃபியட் திட்டமிட்டுள்ளது. ஒருங்கிணைந்த விற்பனையகங்கள் மகாராஷ்டிர மாநிலம் வொர்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு பியட், அபார்த் மற்றும் ஜீப் வாகனங்கள் கிடைக்கும். சென்னையில் ஜீப் ஸ்டோர் 3 எஸ் வசதியுடன் பழைய மகாபலிபுரம் சாலையிலும் புது டெல்லியில் மாத்தூர் சாலையில் முதலாவது விற்பனையகமும் தொடங்கப் பட்டுள்ளது. இதேபோல அகமதா பாத்திலும் பிரத்யேக விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஃபியட் கார்கள் மட்டுமின்றி ஜீப் பிராண்டுகளைப் பெற வசதியாக மிகப் பெரிய விற்பனையகங்களை அமைத்து வருகிறது எப்சிஏ.
வாடிக்கையாளர்கள் கார் வாங்க வசதியான சூழல், விற்பனைக்குப் பிந்தைய சேவையை அதே மையத்தில் அளிக்கக் கூடிய ஒருங்கிணைந்த விற்பனையகங்கள் மூலம் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது எப்சிஏ.
எந்த ஒரு தயாரிப்பின் வெற்றியும் விற்பனைக்குப் பிந்தைய சேவையைப் பொறுத்தே உள்ளது என்பதை ஃபியட் நன்கு உணர்ந்ததன் வெளிப்பாடு தான் புதிய ஒருங்கிணைந்த விற்பனையகங்களாகும்.