

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி பல விஷயங்களில் முக்கியத்துவம் பெற்றதாக மாறப்போகிறது. 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரு முனை வரி விதிப்பான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வருகிறது. அதைப் போல ஏப்ரல் 1, 2017 முதல் தயாராகும் லாரிகள் அனைத்தும் ஏசி வசதி கொண்டதாக இருக்கவேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதிக பணிச்சுமை கொண்ட, அதேசமயம் சிறிதும் அங்கீகாரம் இல்லாத ஒரு வேலை உள்ளது என்றால் அது லாரி டிரைவர் வேலைதான். லாரி டிரைவர் என்றாலே ஒரு அலட்சியமும், சமுதாயத்தில் உரிய அங்கீகாரமும இல்லாத ஒரு வேலையாகத்தான் கருதப்படுகிறது.
கால நேரமின்றி, குடும்பத்தைப் பிரிந்து பல வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரை பிரிந்திருக்கும் பணிதான் லாரி டிரைவர் வேலை. கிடைத்த இடத்தில் சாப்பிட்டு, மரத்தடியில் தூங்கி தொடர்ந்து பணிபுரியும் டிரைவர் வேலையை யாரும் ஒரு பொருட்டாகக் கருதுவ தில்லை. ஆனால் ஒரு நாள் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் பாதிப்பு புரியும்.
இவையெல்லாம் ஒருபுறம் இருந் தாலும், வடிவமைக்கப்படும் லாரிகள் ஓட்டுநர்களுக்கு உரிய வசதியை ஏற்படுத்தித் தராதவையாகத்தான் இருக்கின்றன. குறைந்தபட்ச சவுகரியம் மட்டுமே போதும் என்ற கருத்தே இதற்குக் காரணம்.
இதை மாற்றும் முயற்சியாக லாரி டிரைவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் சவுகர்யங்கள் தேவை என்பதை உணர்ந்து வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று லாரிகளில் ஏசி வசதி செய்து தர வேண்டியதைக் கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.
இதன்படி ஏப்ரல் 1, 2017-ல் விற் பனைக்கு வரும் அனைத்து லாரிகளிலும் ஏசி வசதி இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மோட்டார் வாகன தொழிலாளர் சட்டம் 1961-ல் குறிப்பிட்டபடி டிரைவர்களின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 14,500, பிஎப் வசதி, மருத்துவ வசதி மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட வசதிகள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்கெனவே சில லாரி போக்குவரத்து நிறுவனங்கள் அமல்படுத்தி வருகின்றன.
இது தவிர லாரி வடிவமைப் பாளர்கள், உற்பத்தியாளர்கள் குறிப் பிட்ட வரையறையுடன் லாரிகளைத் தயாரிக்க வேண்டும் என்பதற்காக மோட்டார் வாகன சட்டம் 1988-ல் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி அனைத்து லாரிகளில் டிரைவர் அமரும் பகுதி ஏசி வசதி கொண்டதாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
லாரி டிரைவர்களின் வேலை கடுமையான வேலை என்ற கருத்தை மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் எத்தகைய சூழலிலும் லாரி டிரைவர்கள் சவுகர்யமாக வாகனத்தைச் செலுத்துவதற்கான சூழலை இது உருவாக்கும் என அரசு நம்புகிறது.
ஏற்கெனவே தங்களது கனரக லாரிகளில் (ஹெச்சிவி) ஏசி வசதி செய்துள்ளதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது. தங்களது புதிய தயாரிப்புகளில் குறிப்பாக இலகு ரக வர்த்தக வாகனங்களில் (எல்சிவி) இத்தகைய வசதியை இனி செய்து தருவோம். அதில் பிரச்சினை இருக்காது என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தெரிவித்துள்ளது.
இலகு ரக வாகனங்கள் அதாவது இப்போது உள்ள லாரிகளின் இன்ஜின் மற்றும் சேசிஸ்தான் உற்பத்தி நிறு வனங்கள் தயாரிக்கின்றன. மேற்பகுதி அனைத்தும் பிற நிறுவனங்கள்தான் செய்கின்றன.
லாரிகளை வாங்கும் உரிமை யாளர்கள் தங்களது தேவைக்கேற்ப அதில் மாற்றம் செய்து வடிவமைத்துக் கொள்கின்றனர். லாரி ஓட்டுநர்களின் கேபினில் ஏசி வசதி செய்து தர வேண்டுமெனில் உற்பத்தி செய்து தரும் நிறுவனங்கள்தான் இவற்றை வடிவமைக்க வேண்டும். மேலும் கேபின் குறித்த வரையறையை அரசு வெளியிட்டால் அது மேலும் வசதியாக இருக்கும் என்று இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லாரிகளில் ஏசி வசதி செய்து தருவதோடு மட்டுமல்லாமல் அவர் களின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் ஊதியம் கிடைக்கச் செய்தால் மட்டுமே இந்தத் தொழிலை பலரும் விரும்பி ஏற்பர் என்று போக்குவரத்து ஆய்வு மற்றும் பயிற்சிக்கான இந்திய அறக்கட்டளை (ஐஎப்டிஆர்டி) மூத்த உறுப்பினர் எஸ்.பி. சிங் தெரிவித்துள்ளார்.
இப்போது கூட பயணிகளுக்கான ஏசி பஸ்களில், டிரைவருக்கு ஏசி செல்லாதபடிதான் வடிவமைக்கப்பட் டிருக்கின்றன.
ஏசி வசதி பயணிகளுக்குத்தான், டிரைவருக்கல்ல என்ற மனோபாவம் முதலில் வாகன வடிவமைப்பாளர் களிடம் மாற வேண்டும். அப்போதுதான் டிரைவர் தொழில் மீதான மதிப்பு உயரும்.