

அமெரிக்க உளவியல் நிபுணரான மறைந்த ஆப்ரஹாம் மாஸ்லோ, மனிதர்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் 5 அம்சங்களை வரிசைப்படுத்தி உள்ளார். மாஸ்லோ கோட்பாடு என அழைக்கப்படும் இது உலக அளவில் பிரபலம். இதில், உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் முதல் இடத்தில் உள்ளன. வாழ்வியலுக்கான பாதுகாப்பு என்ற வகையில் வேலைக்கு 2-ம் இடம் கொடுத்துள்ளார். வேலை என்பது பொருளாதார ரீதியாக ஒருவருக்கு சமூகத்தில் பாதுகாப்பை வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக சமூக தொடர்பு, கவுரவம், தன்னிறைவு ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
என்னுடைய நட்பு வட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் சிலரை அண்மையில் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும்போது, வேலை தேடிக்கொண்டிருக்கும் நண்பர் தான் சமூகத்தில் சந்திக்கும் சில அன்றாட பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டார். ‘இன்னும் வேலைக்குப் போகவில்லையா’ என்ற கேள்வியை தினமும் எதிர்கொள்வதாக அவர் கூறியபோது நா.முத்துக்குமாரின் ‘வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை’ எனும் வரி ஞாபகத்திற்கு வந்தது.
மற்றொரு நண்பர், பிடிக்காத வேலையில் சேர்ந்து தினமும் வதைபடுவதாக கூறினார். மேற்கூறிய அந்த இரண்டு நண்பர்களை விட, திடீரென்று வேலையை இழந்த மற்றொரு நண்பரின் வேதனை சொல்லி மாளாது.அந்த வேலையை நம்பி வாங்கியிருந்த கடன், ஒவ்வொரு மாதத்துக்கும் கட்ட வேண்டிய தவணை மற்றும் வீட்டின்அன்றாட செலவினங்கள் போன்றவற்றை எப்படி சமாளிப்பேன் என்று அவர் புலம்பினார். இங்கு குறுகியநாட்களுக்கு அவரின் சேமிப்பு பணம் குடும்பத்தை நடத்த கைகொடுத்தாலும், வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்வரை அவரின் பாடு திண்டாட்டம்தான்.
கரோனா காலத்தில் வேலையை இழந்த பலருக்கு பல்வேறு துறையிலும் வேலை கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பு சூழல் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி நீக்கம் தீவிரமடைந்துள்ளது. பைஜூஸ், அன்அகாடமி உள்ளிட்ட கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவருகின்றன.அதேபோல், சர்வதேச அளவில் ட்விட்டர், மெட்டா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றன.
எதற்காக பணி நீக்கம்? - பொதுவாக,ஒரு நிறுவனம் அதிக எண்ணிக்கையில்பணியாளர்களை பணி நீக்கம் செய்கிறது என்றால், அந்த நிறுவனம் புதிதாக வேறு ஒருவருக்கு கைமாறி இருக்கும் அல்லது நிதிச்சுமை அதிகரித்து இருக்கும். இவை இரண்டும் இல்லையென்றால் தொழில்நுட்பம் சார்ந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த பணியாளர்களை சேர்க்கும் நோக்கில் பழைய பணியாளர்களை குறைக்கத் திட்டமிட்டிருக்கும். பைஜுஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கு காரணமாக அடுத்த மார்ச் மாதத்துக்குள் நிறுவனத்தின் வருவாயை பெருக்கவும், லாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கும் வேறு வழியின்றி பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக கூறியுள்ளது.
அதுவே ட்விட்டர் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால், வேறு ஒருவருக்கு கைமாறிய சூழ்நிலையில் பல அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. நிறுவனத்தை வாங்கியிருக்கும் எலான் மஸ்க், ட்விட்டரில் இருந்து ஐம்பது சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். அதாவது மொத்தம் 7,500 பேர் பணிபுரிந்த நிலையில் 3,700 ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ட்விட்டர் நிறுவனம் தினமும் 4 மில்லியன் டாலர் (ரூ.33 கோடி) இழப்பை சந்திக்கிறது என்றும்இதை சரிகட்ட ஆட்குறைப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
மெட்டா நிறுவனம் அதன் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் ஆகும். “தற்போது சமூகவலைதள நிறுவனங்களிடையே தீவிர போட்டிச் சூழல் நிலவுகிறது. விளம்பர வருவாய் குறைந்துள்ளது. இதுதவிர, சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. இதன் காரணமாக, எங்கள் வருவாய் எதிர்பார்த்தைவிடவும் மிகவும் குறைந்துள்ளது” என்று மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
நல்ல நிறுவனத்துக்கான இலக்கணம்: ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல பல காரணிகளும் துணைபுரியும். அதில் முக்கியமான காரணியாக இருப்பவர்கள் ஊழியர்கள். அப்படி நிறுவனத்தின் தூணாக பணிபுரியும் ஊழியர்களை காப்பது தலையாய கடமை ஆகும். அண்மையில் லிங்க்கிடுஇன் தளத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 65 சதவீத ஊழியர்கள் குறைவான ஊதியம் என்றாலும் கண்ணியமான நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புவதாகவும், அதிலும் 26 சதவீத ஊழியர்கள் மோசமான சூழல் நிலவும் நிறுவனத்தில் பெரும் பதவி கிடைத்தாலும் வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். இந்த ஆய்வு, ஊழியர்கள் நல்ல சூழல் நிலவும் நிறுவனத்தில் பணிபுரிய அதிக ஆர்வம் காட்டுவதை நன்கு வெளிபடுத்துகிறது.
ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிபுரியும் சூழல் என்பது வேறுபடும். எப்படியாயினும், ஊழியர்களின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து என்றும் நிறுவனத்தோடு அவர்கள் ஒன்றிவரும் வகையில் நிறுவனத்தின் அணுகுமுறை இருக்க வேண்டும். ஊழியர்களை பெரும் எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு மத்தியில்தான் ஊழியர்களை கொண்டாடும் நிறுவனங்களும் இருக்கின்றன. ‘அமுல்’ என்கிற பெயரை வைக்குமாறு ஆலோசனை கூறியவர் அந்த நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் ஆவார். அதை அப்படியே ஏற்றுக்கொண்டது அன்றைய நிர்வாகம்.வரும் லாபத்தில் ஊழியர்களுக்கு தவறாது பங்குதருவதுடன் வெவ்வேறு நிலையில் இருக்கும் ஊழியர்களிடத்தில் ஒரே மாதிரியான வெளிப்படைத்தன்மையைக் காட்டிய காரணத்தாலும்தான் நட்டம் வந்தபோது ஊழியர்களே முன்னின்று டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைக் காத்தனர்.
பேராசிரியர்கள் கோபீ மற்றும் ஜோன்ஸ் இணைந்துஒரு நல்ல தகுதியான சூழல் கொண்ட நிறுவனத்தில்நிர்வாகிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஆறு அம்சங்களை ஹார்வர்ட் இதழில் குறிப்பிட்டு உள்ளனர். ஊழியர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள், தகவல்களை ஒருபோதும் தடுக்காதீர்கள், ஊழியர்களின் பலத்தை பலப்படுத்துங்கள், பங்குதாரர்களை விட ஊழியர்களின் நலனுக்காக நில்லுங்கள், நாளும் செய்யப்படும் வேலையின் முக்கியத்துவத்தை ஊழியர்களிடத்தில் உணர்த்துங்கள் மற்றும் நிறுவனத்தின் உரிமைகள் ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இவற்றை கடைபிடிக்கும் நிறுவனமே ஊழியர்களின் கனவு நிறுவனம் என்கின்றனர்.
நிறுவனங்களின் செயல்பாடு என்பது ஊழியர்களின் நலன் சார்ந்து அமைய வேண்டும். அப்படி அமையும்போது ஊழியர்கள் நிறுவனத்துடன் ஒன்றிப்போய் வேலை செய்வார்கள். எனவே பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு எடுக்கும் முயற்சியைக்காட்டிலும் ஊழியர்களின் திறன் மேம்பாட்டை மேலோங்கச்செய்வதற்கு முயற்சி செய்வது சாலச்சிறந்தது. உதாரணத்துக்கு கரோனா காலகட்டத்தில் சில அமெரிக்க நிறுவனங்கள் நிர்வாகச் சூழ்நிலையை காரணம் காட்டி ஊழியர்களை பணிநீக்கம் செய்யமாட்டோம் என வெளிப்படையாகவே உறுதிமொழி எடுத்தன. அத்தகைய உறுதிமொழி ஊழியர்களின் நம்பிக்கையை பலமடங்கு அதிகரித்தது.
பணி நீக்கம் செய்வது ஒன்றே தீர்வு என்றால், ஊழியர்களுக்கான மாற்று வழியை கண்டறிந்து அவர்களுக்கு கைகாட்டுங்கள். ஏனென்றால் ஏதேனும் ஒரு வகையில் நிறுவனத்தின் கடந்தகால வளர்ச்சியில் அவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்திருக்கும். அமெரிக்க உளவியல் நிபுணரான மறைந்த ஆப்ரஹாம் மாஸ்லோ, மனிதர்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் 5 அம்சங்களை வரிசைப்படுத்தி உள்ளார். மாஸ்லோ கோட்பாடு என அழைக்கப்படும் இது உலக அளவில் பிரபலம். இதில், உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் முதல் இடத்தில் உள்ளன. வாழ்வியலுக்கான பாதுகாப்பு என்ற வகையில் வேலைக்கு 2-ம் இடம் கொடுத்துள்ளார். வேலை என்பது பொருளாதார ரீதியாக ஒருவருக்கு சமூகத்தில் பாதுகாப்பை வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக சமூக தொடர்பு, கவுரவம், தன்னிறைவு ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. - செ.சரத் வேளாண் ஆராய்ச்சியாளர், saraths1995@gmail.com