

கடந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இன்று வரை உலக நாடுகள், பெருந்தொற்று, பணவீக்கம், புவிசார் அரசியலின் உறுதியற்ற தன்மை என பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. உலக அளவில் பல சவால்கள் இருந்தாலும் நிலையற்ற தன்மை கொண்ட இந்த காலகட்டத்தில் அதை எதிர் கொள்ளக்கூடிய விதத்தில் பல மாறுதல்களை பெருநிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இது, கேபிஎம்ஜி என்கிற ஆடிட் மற்றும் ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலம் வந்திருக்கிறது.
இவ்வாண்டு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் 11 முக்கிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,325 தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் (சிஇஓ) இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 125. இவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 500 மில்லியன் டாலருக்கும் அதிகம். இந்த நிறுவனங்கள், சொத்து மேலாண்மை, வாகன உற்பத்தி, வங்கி, நுகர்வோர் சில்லரை வணிகம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, காப்பீடு, லைப் சயின்ஸ், உற்பத்தித் துறை, தொழில்நுட்பம், தகவல் தொடர்பு என முக்கியமான தொழில் துறைகளைச் சார்ந்ததாகும்.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட இந்திய சிஇஓ-க்களில் 66 சதவீதத்தினர் அடுத்த ஓராண்டில் இந்தியப் பொருளாதாரம் மந்த நிலைக்கு உள்ளாகும் எனத் தங்களது அச்சம் கலந்த கணிப்பைத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் 58 சதவீதம் பேர் அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், குறுகிய காலம் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், அந்த பொருளாதார மந்த நிலையால் நிறுவனங்களின் வருமானம் 10 சதவீதம் வரை பாதிப்புக்குள்ளாகும் என சிஇஓ-க்களில் 86 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்திய சிஇஓ-க்களோடு ஒப்பிடுகையில் மற்ற நாடுகளைச் சேர்ந்த சிஇஓ-க்களில் 86 சதவீதம் பேர் பொருளாதார நிலையில் கண்டிப்பாக மந்தநிலை ஏற்படும் என அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்கள்.
ஏற்படவிருக்கும் மந்தநிலை எதிர்பார்த்த அளவுக்கான வளர்ச்சியைப் பாதிக்கும் என 63 சதவீத இந்திய சிஇஓ-க்களும், மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களில் 73 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஆய்வு குறித்து கேபிஎம்ஜி-யின் இந்திய தலைமை அதிகாரி கூறும்போது, ``அது வணிகச் சூழல் அமைப்பாக இருந்தாலும், அல்லது விநியோகச் சங்கிலியாக இருந்தாலும் அல்லது திறமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அவற்றின் அளவு வியக்கத்தக்க அளவில் மாறி இருக்கிறது. இதற்கு வணிகங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எவ்வளவு விரைவாக எதிர்வினை ஆற்றப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது’’ என்றார்.
தொழில்நுட்பம், திறமை, இஎஸ்ஜி: இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இந்திய சிஇஓ-க்கள் அவர்களது நிறுவனத்தின் மீண்டெழும் திறன் மீது மிகவும் நம்பிக்கை கொண்டிருப்பதோடு தொழில்நுட்பம், திறமையான பணியாளார்கள், இஎஸ்ஜி என அறியப்படும் சூழ்நிலை, சமூகம், ஆளுகை ஆகியவை ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் இந்த சவால்களை சமாளிக்க உதவும் என்று நினைக்கிறார்கள். ஆய்வின்படி, எதிர்பார்க்கப்படும் மந்தநிலையால் திறமையான பணியாளர்களைக் கண்டறிந்து தெரிவு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டாலும் நீண்டகால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிகரிக்கும் என 79 சதவீத இந்திய சிஇஓ-க்கள் கூறியிருக்கின்றனர். தற்சமயம் நிலவி வரும் உறுதியற்ற தன்மை பல நிறுவனங்களை டிஜிட்டல் மாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்திருக்கிறது. சுமார் 61 சதவீதம் பேர் டிஜிட்டல் துறையில் அதிக முதலீடு செய்ய இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
வளர்ச்சிக்கான ஆபத்துகள்
இந்திய சிஇஓ-க்களைப் பொறுத்தவரையில் அடுத்த மூன்றாண்டுகளில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சில இடர்கள் வருமாறு:
# வளர்ந்து வரும் தொழில்நுட்பம் / ஊறுவிளைவிக்கும் தொழில்நுட்பம்
# பிராந்தியவாதமும், விநியோகச் சங்கிலியும்
# ஒழுங்குமுறை இடர்
# சுற்றுச்சூழலும் காலநிலை மாற்றமும்
# வட்டிவீதம்
வேலைவாய்ப்பு: மற்ற நாடுகளின் சிஇஓ-க்களுடன் (46 சதவீதம்) ஒப்பிடும்போது இந்திய சிஇஓ-க்களில் 47 சதவீதம் பேர் அடுத்த ஆறு மாதங்களில் பணியாட்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியிருக்கிறார்கள். இந்த ஆய்வில் கலந்து கொண்ட சிஇஓ-க்களின் கருத்துப்படி ஏற்கனவே 35 சதவீத சிஇஓ-க்கள் புதிய பணியாட்கள் யாரையும் நியமிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். எதிர்பார்த்திருக்கும் மந்தநிலையை மனதில் கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் நீண்டகால நோக்கில் நிறுவனங்களில் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று மடங்கு அதிகரிக்கும் எனவும் பெரும்பாலான சிஇஓ-க்கள் கூறியிருக்கின்றனர். வெளிநாட்டு சிஇஓ-க்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிஇஓ-க்கள் எதிர்கால மந்தநிலை குறித்துஅதிக கவலை கொண்டவர்களாகத் தெரியவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம். - sidvigh@gmail.com