இந்தியாவில் ஏர்பஸ் சி-295 தயாரிப்பு இனிதே தொடக்கம்..

இந்தியாவில் ஏர்பஸ் சி-295 தயாரிப்பு இனிதே தொடக்கம்..
Updated on
3 min read

இந்திய ராணுவத்துக்காக தனியார் நிறுவனமொன்று முதன் முறையாக விமானங்களை தயாரிக்கஉள்ளது. குஜராத் மாநிலம்வதோதராவில் சி-295 ரக விமானங்களை தயாரிக்கும் டாடா-ஏர்பஸ் கூட்டு தொழிற்சாலை அமையவுள்ளது. இதற்கான, அடிக்கல் நாட்டு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அக்டோபர் 30-ல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “வதோதராவில் அமையவுள்ள விமான தயாரிப்பு ஆலை, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் தன்னிறைவு பெறுவதற்கான மாபெரும் முன்னெடுப்பாகும்" என்றார். இந்த ஆலை முதலில் மகாராஷ்டிராவில் அமைக்க திட்டமிடப்பட்டு பின்னர்,விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த திட்டம் கைநழுவிப்போனது மகாராஷ்டிர அரசியலில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

முதல் தயாரிப்பாளர்: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சிஏஎஸ்ஏ நிறுவனம்தான் சி-295 ரக விமானங்களை முதன் முதலில் தயாரித்தது. தற்போது, அந்த நிறுவனம் ஏர்பஸ்ஸின் ஒரு அங்கமாக உள்ளது. தற்போது இந்த விமானத்தின் உற்பத்தி ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் ஆலையில் நடைபெற்று வருகிறது. இந்திய விமானப் படையில் 1960-களின் முற்பகுதியில் அவ்ரோ-748 ரக விமானம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த பழைய விமானங்களுக்கு மாற்றாகவே தற்போது சி-295 ரக விமானங்களை வாங்க ஏர்பஸ் டிபென்ஸ் & ஸ்பேஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.21,935 கோடி.

56 விமானங்கள்: இந்த ஒப்பந்தத்தின் கீழ் 56 சி-295 ரக விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதில் 16 விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் ஸ்பெயினின் செவில்லியில் உள்ள அதன் அசெம்பிளி ஆலையில் தயாரிக்கும். இந்த விமானங்கள் உடனடி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கும். ஸ்பெயினில் தயாரிக்கப்படும் இந்த விமானங்கள் செப்டம்பர் 2023 மற்றும் ஆகஸ்ட் 2025-க்கு இடையில் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், 40 சி-295 ரக விமானங்களை ஏர்பஸ்- டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இணைந்து இந்தியாவில் தயாரிக்க உள்ளது. இந்திய ஆலையில் தயாரிக்கப்படும் முதல் சி-295 ரக விமானம் 2026 செப்டம்பரில் இந்திய விமானப் படையில் (ஐஏஎப்) சேர்க்கப்படும். மீதமுள்ள 39 விமானங்களை ஆகஸ்ட் 2031-க்குள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விமானப் படைக்கு தேவையான 56 விமானங்களை முழுமையாக விநியோகம் செய்த பிறகு ஏர்பஸ் டிபன்ஸ் நிறுவனம் உள்நாட்டு நிறுவனங்
களின் விமான தேவைகளையும் பூர்த்தி செய்யவுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய ஆலையில் தயாரிக்கப்படும் விமானங்கள் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

நவீன வசதி: 5 முதல் 10 டன் திறன் கொண்ட சி-295 ரக விமானம் மணிக்கு 480 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. அனைத்து காலநிலைகளிலும் பன்முகத் திறனை வெளிப்படுத்தக்கூடியது. ராணுவ துருப்புகள் மற்றும் சரக்குகளை விரைவான முறையில் கையாளும் பிரத்யேக வசதிகளை இந்த விமானம் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக பாரா ட்ராப்பிங் செய்வதற்காக இதில் பின்புற சாய்வு கதவுகள் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குறுகிய நிலப்பரப்பில் புறப்பாட்டையும், தரையிறக்கத்தையும் இந்த விமானத்தால் மேற்கொள்ள முடியும். வெறும் 2,200 அடி நீளமுள்ள குறுகிய விமான ஓடுதளங்களில் இருந்துகூட இது இயங்கக்கூடிய திறன் படைத்தது.

விவரக்குறிப்பு: ஏர்பஸ் வெளியிட்டுள்ள தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி, விமானத்தின் கேபின் பரிமாணம் 12.7 மீட்டர் அல்லது 41 அடி எட்டு அங்குலங்கள். 71 இருக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில், இந்த விமானம் அதன் வகுப்புகளில் மிக நீளமான தடையற்ற அறையைக் கொண்டுள்ளது. C-295 ரக விமானம் அதன் பிறபோட்டி நிறுவனங்களின் விமானங்களை விட அதிகமான சரக்குகளை பின்பக்க சாய்வு தளம் வழியாக நேரடியாக ஏற்றிச் செல்ல முடியும் என்று ஏர்பஸ் தொழில்நுட்ப விவரக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ்: இந்திய விமானப்படையில் சேர்க்கப்படவுள்ள 56 சி-295 ரக விமானங்களிலும் பாரத் எலக்ட் ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகியவற்றால் உருவாக்கப்படும் உள்நாட்டு எலக்ட்ரானிக் வார்பேர் தொகுப்பு பொருத்தப்பட உள்ளது. இந்த விமானத்தின் உள்ளடக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கும். ஸ்பெயினில் ஏர்பஸ் விமானம் தயாரிப்பதற்கான 96 சதவீத வேலைகள் வதோதராவிலும் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புத் துறையின் செயலர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

நிலப்பரப்பு: ஏர்பஸ்ஸின் சி-295 ரக விமானங்கள் அனைத்து நிலப்பரப்புகளுக்கும் ஏற்ற விதத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வகை விமானங்கள் தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் காடுகள் கொலம்பிய மலைகள், மத்திய கிழக்கில் அல்ஜீரியா மற்றும் ஜோர்டான் பாலைவனங்கள், ஐரோப்பாவில் போலந்து மற்றும் பின்லாந்தின் குளிர் காலநிலை பிரதேச நிலப்பரப்புகளிலும் சிறப்பான வகையில் இயங்கி வரக் கூடியவை. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகளிலும் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்க் காலங்களில் ஆயத்தமில்லாத நிலப்பரப்புகளிலும் கூட இந்த வகை விமானங்கள் செயல்படும் திறனைக் கொண்டவை.

பயன்பாடு: சி-295 ரக விமானங்களின் தயாரிப்பு முதல்முறையாக ஐரோப்பாவை தாண்டி இந்தியாவை வந்தடைந்துள்ளது. இந்த விமானங்கள் பன்னோக்கு பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. அவசர காலங்களில் ராணுவ வீரர்கள் மற்றும் யுத்தத்துக்கு தேவையான தளவாடப் பொருள்களை முக்கிய விமான நிலையங்களிலிருந்து நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த விமானத்தால் ஒருசேர கொண்டு சேர்க்க முடியும். மேலும் இந்த வகை விமானத்தை விபத்து, மருத்துவ உதவி, சிறப்பு பணிகள், பேரிடர் மற்றும் கடல் ரோந்து கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும்: தற்போதைய சூழலில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. உலக நாடுகள் நமது எதிரிகளுக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்து வரும் இந்த சூழ்நிலையில், தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டில் தயாரிப்பது தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதனை முழுமையான அளவில் செயலாக்கத்துக்கு கொண்டு வராத நிலையே தற்போதும் நீடித்து வருகிறது. இதனால், போர்க் காலங்களில் ராணுவ தளவாடங்களுக்கு பெரும்பாலும் இறக்குமதியை நாடவேண்டிய சூழலே உள்ளது. போர் விமானங்கள், ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள், டாங்கிகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றின் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை, தயாரிப்பு உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராணுவ தேவைகளுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை வெகுவாக குறைப்பதன் மூலம், எந்தவொரு தொழில்நுட்ப பரிமாற்ற கட்டுப்பாடு அல்லது உரிம கட்டுப்பாடு இல்லாமல் இந்தியா பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலும். இதன் மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டவும் முடியும். உள்நாட்டு பொதுத் துறை நிறுவனங்களால் இந்தியாவின் பாதுகாப்பு தேவையை நிறைவு செய்ய இயலாத போது பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் கூட்டணியுடன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது, தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும். அத்துடன், உலக அளவில் ராணுவ பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவை முக்கிய முனையமாகவும் உருவெடுக்க வழிவகை செய்யும். அதற்கான நல்தொடக்கமாக சி-295 திட்டம் அமையட்டும். - அ.ராஜன் பழனிக்குமார் rajanpalanikumar.a@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in