

மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காசோலை பவுன்ஸ் தொடர்பான வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் உள்ளதால், ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றங்களை இந்த மாநிலங்களில் அமைக்க மே 22-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. யுபிஐ மூலம் கண நேரத்தில் பணப் பரிமாற்றம் நிகழும் காலத்தில் இன்னமும் காசோலை வழங்கப்படுவதும், அது தொடர்பாக நிகழும் பிரச்சினைகளுக்கு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதும் வியப்பைத்தான் தருகிறது.
1989-ல் நெகோஷியபில் இன்ஸ்ட்ருமென்ட் சட்டத்தில் பிரிவு 138 அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை, கணக்கில் நிதியின்றி காசோலை திரும்புவது ஒரு கிரிமினல் குற்றமாக இருக்கவில்லை. இது ஒரு சிவில் விவகாரமாக மட்டுமே கருதப்பட்டது. காசோலை பவுன்ஸை ‘ஏமாற்றுதல்’ என்று கருதுவதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 420-வது பிரிவை செயல்படுத்த வாய்ப்பு உண்டு எனினும், இதற்கு காசோலையின் பயனாளி காசோலை வழங்கியவரின் ஏமாற்று நோக்கத்தை நிரூபிக்க வேண்டும். ஆனால் நெகோஷியபில் இன்ஸ்ட்ருமென்ட் சட்டத்தில் பிரிவு 138 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, காசோலையானது ஒருவரிடம் உள்ள தீர்வுக்காக (லையபிலிட்டி) வழங்கப்பட்டு கணக்கில் போதிய இருப்பு இல்லாமல் காசோலை திரும்பினால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படலானது. இந்தச் சட்டத் திருத்தம் நாட்டில் காசோலைகளை மக்கள் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது. எனினும் காசோலை பவுன்ஸ் தொடர்ந்து நடந்தபடிதான் இருக்கிறது. இந்நிலையில், காசோலை பவுன்ஸ்சம்பவங்களைக் குறைக்க மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அந்தப் பரிந்துரைகள் என்னென்ன என்பதையும் அந்தப் பரிந்துரைகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் பார்க்கலாம்.
வாடிக்கையாளரின் வேறொரு கணக்கில் உள்ளபணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது: காசோலை வழங்குபவரின் கணக்கில் போதுமான இருப்பு இல்லாதபட்சத்தில் அவருடைய வேறுகணக்கில் உள்ள இருப்பைக்கொண்டு காசோலைக்குபணம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே இருப்பது ஒரு சட்டபூர்வ ஒப்பந்தம். அதன்படி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து அவரின் உத்தரவின்படியே பணம் வழங்க முடியும். அவரது வேறு ஒரு கணக்கிலிருந்து பணம் வழங்குவது வரம்பு மீறிய செயலாகவும் ஒப்பந்த மீறலாகவும்பார்க்கப்படும். வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான சட்டப்பூர்வ உறவைப் புரிந்து கொள்ளாமல் இந்த ஆலோசனை கூறப்பட்டுள்ளது விசித்திரமானது.
புதிய கணக்குகள் திறப்பதை தடை செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது: காசோலை பவுன்ஸ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு புதிய கணக்குகள் திறப்பதை தடை செய்யும் மற்றொரு ஆலோசனையை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இந்தியரிசர்வ் வங்கியின் நிர்வாக உத்தரவு மூலம் இந்தப்பரிந்துரையை செயல்படுத்த முடியும். ஆனால் ஒருகுற்றம் நிரூபிக்கப்பட்டு அந்த நபர் தண்டிக்கப்படும்வரை அவரை நிரபராதியாகவே பார்க்க வேண்டும். எனவே இது போன்ற தடைகள் தவறான நடவடிக்கைகளாக நீதிமன்றத்தால் கருதப்பட வாய்ப்புண்டு.
வங்கிக் கடனை செலுத்தாதவராக கருதலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது: காசோலை பணமின்றி திருப்பி அனுப்பப்பட்டால் அதையும் வங்கிக்கடனை திருப்பி செலுத்தாததுபோல் கருத வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு நிர்வாக உத்தரவை பிறப்பிப்பதன் மூலம் இதை எளிதாக செயல்படுத்த முடியும்: ஆனால், போதிய இருப்பு இன்றி காசோலை வழங்கும் நபர்களுக்கு இது அச்சுறுத்தலாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கணக்கிலிருந்து பணமெடுக்க தடை செய்யலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது: காசோலை பவுன்ஸ் வழக்குகளில் காசோலை வழங்குபவர்கள் தங்கள் கணக்கிலிருந்து சில நாட்களுக்கு பணம் எடுக்க தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அத்தகைய காரணத்துக்காக வங்கிக் கணக்குகளில் செயல்பாட்டை நிறுத்துவது சட்டவிரோதமானது. நீதிமன்றஉத்தரவு அல்லது வருமான வரித் துறையின் உத்தரவின்அடிப்படையில் மட்டுமே வங்கிக் கணக்குகளைநிறுத்த முடியும். மற்ற சந்தர்ப்பங்களில், கணக்கில் வரவு செலவு செய்வதை நிறுத்த முடியாது.
மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது: காசோலையை பணமின்றி திரும்பிய நாளிலிருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான தகராறை மத்தியஸ்தம் மூலம் 90 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தகையசட்டத்தை இயற்றுவது எளிதாக இருக்கலாம். ஆனால் காலக்கெடுவை எவ்வாறு செயல்படுத்துவது?மத்தியஸ்தத்தில் கூட வழக்கை முடிவில்லாமல் இழுத்தடிக்க வாய்ப்பு உள்ளது. - எஸ்.கல்யாணசுந்தரம் வங்கி அதிகாரி (ஓய்வு), 1952kalsu@gmail.com