

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக 3.17 லட்சம் கோடி டாலருடன் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்நிலையில் 5ஜியின் அறிமுகம் 2047-க்குள் முன்னேறிய நாடு என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை எளிதாக்கும்.
பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலக அரங்கில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக வங்கி உள்பட அனைத்து முன்னேறிய நாடுகளில் உள்ள முன்னணி ஆய்வு நிறுவனங்களும் இந்த கூற்றில் உறுதியாக உள்ளன. இந்த சூழ்நிலையில், இந்தியாவில்5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதானது. நாட்டின் வளர்ச்சியை மேலும் துரிதமாக்கும் என்பது பெரும்பாலான நிபுணர்களின் கருத்து.
புதிய இந்தியாவை உருவாக்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. கல்வி, மருத்துவம், நிதிப் பரிமாற்றம், இணைய வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்கு இதுவே அடிப்படை. தொழில் துறை நிறுவனங்கள் தங்களது செயல்முறைகளை டிஜிட்டல் யுகத்துக்கு நவீன மயமாக்க இதுவரை இல்லாத வகையில் முதலீடுகளை குவித்து வருகின்றன. இது, நம்பகமான இணைய இணைப்பின் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்தியாவின் வலுவான வளர்ச்சி மாற்றமடைந்து வரும் மொபைல் சேவை சந்தைக்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதனால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின்எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்ததுடன், பெரும்பான்மையானோர் 4ஜி சேவைக்கும் மாறியுள்ளனர். 2016-ல் வெறும் 9 சதவீதமாக மட்டுமே இருந்த 4ஜியின் பங்கு 2021-ல் 68 சதவீதமாக அசுரவளர்ச்சி கண்டுள்ளது. இது, இந்திய பொருளாதாரம், சமூகம், நுகர்வோர் இடையே குறிப்பிடத்தக்க அளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பிராட்பேண்ட் சேவை கிடைக்காத தொலைதூர பகுதிகளில் உள்ள மக்கள் கல்வி, சுகாதாரம், ஷாப்பிங் சேவைகளை தடையின்றி பெற மொபைல் வழியான 4ஜி சேவையே ஆதாரமாக அமைந்தது.
உலகின் முதல் செல்லுலார்: உலகின் முதல் செல்லுலார் போனைஉருவாக்கிய பெருமை மோட்டோரோலா நிறுவனத்தையே சாரும். இந்நிறுவனத்தின் மார்டின் கூப்பர் என்பவர் வடிவமைத்த "மோட்டோரோலா டைனடாக் 8000எக்ஸ்" என்ற மாடல் எங்கும்கொண்டுசெல்லக்கூடிய வகையில் இருந்தது.இந்த செல்போன் 1973-ம்ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, அந்த போனின்எடை சுமார் 2 கிலோவாகும். இதுதான், தற்போதைய எடை குறைந்த ஸ்மார்ட்போன்களுக்கு முன்னோடி.
முதல் தலைமுறை: முதல்செல்லிடப்பேசி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான நெட்வொர்க் தொழில்நுட்பமும் படிப்படியாக விரிவடையத் தொடங்கின. உலகின் முதல் செல்லுலார் நெட்வொர்க் ஜப்பானில் கடந்த 1979-ம்ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1ஜி எனப்படும் முதல் தலைமுறைக்கான சேவையை நிப்பான் டெலிகிராப் மற்றும் டெலிபோன் (என்டிடி) நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன் பின்பு உலகின் பிற நாடுகளும் அந்த சேவையை பின்பற்றத் தொடங்கின. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ஜி என்ற சொல் தலைமுறையை (GENERATION) குறிக்கிறது. இந்த தொழில்நுட்பம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு தலைமுறை தாண்டி வந்ததை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படுகிறது.
2-ம் தலைமுறை: மிக குறைவான வேகம், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் மேம்படுத்தப்பட்ட 2ஜி சேவை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் ராஜ்யம் 1990 முதல் 3ஜி அறிமுகம் செய்யப்படும் 2010 வரை நீடித்தது.
3-ம் தலைமுறை: 2 ஜியுடன் ஒப்பிடும்போது 3ஜியின் தரவு பரிமாற்ற வேகம் 4 மடங்கு அதிகமான திறனைக் கொண்டது. இதன் சராசரிவேகம் 2எம்பிபிஎஸ். இதன் காரணமாகத்தான் வீடியோ பார்ப்பது, வீடியோ கான்பரஸிங்கில் பேசுவது, லைவ் வீடியோ சாட் ஆகியவை சாத்தியமானது.
4-ம் தலைமுறை: 4ஜி சேவை 2009 இறுதியில் நார்வேயில்தான் முதல் முதலாக வணிக ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்பு அச்சேவையினை இந்தியாவில் 2012 ஏப்ரலில் ஏர்டெல்முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. அதன் குறைந்தபட்ச ஆரம்ப வேகம் 12.5 எம்பிபிஎஸ்-ஆக இருந்தது. இதனால், வீடியோ, ஆடியோ, கேமிங் உள்ளிட்ட சேவைகளை அதிக தரத்தில் பெற முடிந்தது. சிம் கார்டை மட்டும் மாற்றி 2ஜியிலிருந்து 3ஜிக்கு சுலபமாக மாற முடிந்த நிலையில், 4ஜி சேவையினை பெறுவதற்கு அதற்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்குவது அவசியமானது. 3ஜி சேவையின் அதிகபட்ச வேகம் 14 எம்பிபிஎஸ் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், 4ஜி 100 எம்பிபிஎஸ் வேகத்தில் சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நிலவரப்படி உலகமொபைல் தொலைத்தொடர்பு சேவையில் 58 சதவீத இடத்தை 4ஜிதொழில்நுட்பமே தக்கவைத்துள்ளது. ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் 4ஜி புரட்சியை ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையல்ல.
அதிவேக 5-ம் தலைமுறை: முதன் முதலில் தென் கொரியாதான் 2019-ம் ஆண்டில் 5ஜி சேவையை முழு அளவில் அறிமுகம் செய்தது. 2025-ம் ஆண்டுக்குள் உலகமக்கள் தொகையில் 65 சதவீதத்தை 5ஜி இண்டர்நெட் சேவை எட்டிப்பிடித்து விடும் என்பது ஸ்வீடனைச் சேர்ந்த எரிக்ஸன் நிறுவனத்தின் அசைக்கமுடியாத கணிப்பு.
இந்தியாவில் 5ஜி: பொருளாதார இலக்குகளை அடையும் வகையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் வியத்தகு மாற்றங்களை உருவாக்கும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத தொடக்கத்தில் 5ஜி சேவையை இந்தியாவில் முதன் முதலாக தொடங்கி வைத்தார். முதலில் களமிறங்குவதன் மூலம் இதற்கான சந்தை வாய்ப்புகளை தமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை போட்டி போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், 4ஜியைப் போலவே 5ஜி சேவையிலும் பார்திஏர்டெல் முந்திக் கொண்டு களமிறங்கியுள்ளது. அந்த நிறுவனம், பல்வேறு நகரங்களில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி 5ஜி சேவையினை பெறலாம் என்ற இனிப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோன்று, ரிலையன்ஸ் ஜியோவும் சோதனை அடிப்படையில் 5ஜி சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது.
“தற்போதுள்ள 4ஜி வேகத்தைக் காட்டிலும் 5ஜி வேகமானது 20 முதல்30 மடங்கு வரை அதிகம்" என்கிறார் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல். இதன் மூலம், இரண்டு மணி நேரதிரைப்படத்தை வெறும் 7 நொடிகளில் பதிவிறக்கம் செய்துவிடலாம். அதேநேரம், தற்போது 4ஜி சேவையில் இதனை பதிவிறக்கம் செய்வதற்கான நேரம் 7 நிமிடங்களாக உள்ளது. 4ஜியின் வேகம் 100 எம்பிபிஎஸ் என்ற நிலையில், 5ஜியின் அதிகபட்ச இண்டர்நெட் வேகம் 10 ஜிபிபிஎஸ்-ஆக இருக்கும்.
எதிர்பார்ப்பும்.. சவால்களும்..
5ஜி அறிமுகத்தைத் தொடர்ந்து 2027-ம்ஆண்டுக்குள் இந்தியாவில் மொபைல் சந்தாதாரர் பிரிவில் 5ஜியின் பங்கு ஏறத்தாழ 40 சதவீதம் அளவுக்கு இருக்கும். 50 கோடி பேர் 5ஜி சேவை வளையத்துக்குள் வருவர். அதேபோன்று அவர்கள் மாதத்துக்கு சராசரியாக தலா 50ஜிபி டேட்டாவை பயன்படுத்துவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் தொலைத் தொடர்புசேவை நிறுவனங்கள் சராசரியாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமிருந்தும் பெறும் வருவாய் (ஏஆர்பியு) இன்னும் குறைவாகவே உள்ளது. அண்மையில்தான் டேட்டாவுக்கான கட்டணங்களை நிறுவனங்கள் உயர்த்தின. அதேநேரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான கட்டணம் அதிகமாக உள்ளது தொலைத்தொடர்பு சேவைநிறுவனங்களின் உள் கட்டமைப்புக்கான முதலீட்டு செலவினத்தில் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், ‘சவாலே சமாளி' என்பதுதான் 5ஜி சேவையில் ஒவ்வொரு நிறுவனங்களின் தாரக மந்திரமாக இருக்கும்.
வேகமெடுக்கும் உள்ளூர் உற்பத்தி: வாடிக்கையாளர்கள் தற்போதுள்ள 4ஜி சிம்கார்டை மாற்றாமலேயே 5ஜி சேவையைப் பெறலாம் என செல்போன் சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால், நம்மிடம் 5ஜி தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட செல்போன் இருந்தால்தான் அந்த சேவையைப் பெற முடியும். பெரும்பாலானவர்களிடம் 4ஜி செல்போன்கள்தான் உள்ளன.எனவே, 5ஜி சேவையை பெறவிரும்புவோர் புதிய செல்போனை வாங்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரிக்க உள்ளது. இதற்கான சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உள்ளூர் தயாரிப்பை அதிகரிக்க எரிக்ஸன் மற்றும் நோக்கியா போன்றநிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக, அந்த நிறுவனங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இணையவழி செயல்பாடுகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்பட்சத்தில் 5ஜியின் வரவு சமூக முன்னேற்றத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. - அ.ராஜன் பழனிக்குமார் rajanpalanikumar.a@hindutamil.co.in