

சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் புதுடெல்லிக்கு பயணப்பட்டார். விமானம் டெல்லியில் தரையிறங்குவதற்கான அறிவிப்பில், ‘வெல்கம் டு ஸ்மோக்கி டெல்லி’ என விமானி அறிவித்திருக்கிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்த்த நகைச்சுவையாக விமானி இதைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அவ்வளவு தீவிரமாக டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. சற்றேறக்குறைய இந்த நாட்களில் சூழலியல் ஆய்வாளர் ஒருவர் தனது டெல்லி பயணத்தையே ரத்து செய்து விட்டதாக சமீபத்தில் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதற்கு அவர் குறிப்பிட்ட காரணம் மனிதர்கள் இந்த மாசுக்காற்றை சுவாசித்தால் பல விதமான சுவாச நோய்கள் வரும் என்றும் பட்டியலிட்டிருந்தார். மனிதர்களுக்கு மட்டுமல்ல காற்று மாசு தொழில்துறைக்கும் பலவிதமான பாதிப்புகளை உருவாக்கித்தான் உள்ளது. ஆனால் முரண் என்னவென்றால் இந்த காற்று மாசுக்கான முக்கிய காரணமாக தொழில்துறை இருந்து வருவதுதான். ஆகவே தொழில்துறையினரும் மாற்று வழிகளில் தொழில் வளர்ச்சியை கொண்டு செல்வது அவசியமாக உருவெடுத்துள்ளதை மறுக்க முடியாது.
புதுடெல்லியில் காற்று மாசுக்கு தேசிய தலைநகர் பிரந்தியம் (என்சிஆர்) முக்கியக் காரணமாக உள்ளதை மறுப்பதற்கில்லை. அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், தனிநபர் போக்குவரத்தின் வாகனப்புகை, கட்டுமான பணிகள் என பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதனால் உடனடியாக இவற்றின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச் சூழலியலாளர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றனர். இந்த அறிவிப்பு உடனடியாக பலன் தந்தாலும் நீண்ட கால நோக்கில் இப்படி தொழில்துறையை முடக்கிவிட முடியாது. இது சரியான தீர்வாக இருக்காது என தொழில்துறையினர் குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் தொழில்துறையை முடக்கிவிட்டு நாட்டின் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது என்பது அவர்களின் வாதம்.
சுவாசிக்க முடியாத அளவுக்கு புதுடெல்லியின் காற்று மாசுக்கு தீபாவளி பண்டிகையின் பட்டாசு புகையும் காரணமாகும். இந்திய பெருநகரங்களான சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற நகரங்களில் உருவாகும் தூசு மண்டலம் பொதுவாக நகரத்திற்குள்ளேயே சுற்றுவதில்லை. இந்த நகரங்கள் கடலோரங்களில் அமைந்துள்ளதால் இயற்கையாகவே வளிமண்டல மாற்றங்கள் தூசு மண்டலத்தை மாற்றி விடுகின்றன. ஆனால் புதுடெல்லியில் அப்படியான சூழல் இல்லை.
இந்த நிலையில் உடல்நல ஆரோக்கியத்தில் சுற்றுச் சுழல் மாசு ஏற்படுத்தும் பாதிப்புகளை நேரடி யாக உணர்ந்து கொண்டதுபோல, தொழில்துறையும் உணர்ந்து கொண்டுள்ளது. புதுடெல்லியில் 2000 சிசிக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கான தடை, பதினைந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களுக்கான தடை போன்றவை அதற்கான தொடக்கமாக அமைந்தன. வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இதை உணர்ந்து கொண்டு தங்களது தயாரிப்பு தொழில்நுட்பங்களை மாற்றி வருகின்றன. பேட்டரியில் இயங்கும் வாகன தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
புதுடெல்லியில் மட்டுமல்ல, உலக அளவிலான தகவல்கள்படி பார்த்தால், நைஜீரியாவின் ஒனிட்ஸா நகரம்தான் காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் உள்ளது. அந்த நகரத்தில் ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் 594 மைக்ரோகிராம் தூசு கலந்துள்ளன. அதற்கடுத்து பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் 540 மைக்ரோ கிராம் தூசு கலந்துள்ளன. மாசு புகை நகரங்கள் பட்டியலில் டெல்லி 25 வது இடத்தில்தான் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மனித உழைப்பு குறையும்
இது போன்ற காற்று மாசுக்களால் ஆலை மூடல், உற்பத்தி முடக்கம் என்பதை தொழில்துறை யினர் சந்தித்தாலும், மறைமுகமாக மனித உழைப் பின் நாட்கள் குறைகிறது என சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு எச்சரிக்கிறது. காற்று மாசு காரணமாக முன்கூட்டியே இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 37 லட்சமாக இருக்கிறது என்று 2015ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை மையமாக வைத்து ஆய்வை நடத்திய சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், சுற்றுச் சூழல் மாறுபாட்டால் உருவாகும் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளால் மனிதர்களின் உடல் உழைப்பு திறன் குறைவதாக கூறியுள்ளது.
உடல் நலப் பிரச்சினைகள் இல்லையென்றால் பணியாளர்களின் நடவடிக்கைகள் சிறப்பாகவும், தொடர்ச்சியாக தங்களது திறன்களையும் வெளிப்படுத்துகிறார்கள் என குறிப்பிட்டுள்ளது. இது பொருளாதாரத்திலும் நேரடியாக பாதிப்பை உருவாக்குகிறது என்று கூறியுள்ள அந்த ஆய்வு, மத்திய சீனாவின் வூஹன் நகரத்தை இதற்கு உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளது. உலக அளவில் அபாயகரமான காற்று மாசு உள்ள நகரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நகர்ப்புற காற்று மாசுபாட்டில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மிகவும் கட்டுப்பாடாக இருக்கின்றன. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா, மேற்கு பசிபிக் நாடுகளில் காற்று மாசு குறைவாக உள்ளன. வளரும் நாடுகள் மற்றும் குறைவான வருவாய் கொண்ட நாடுகளில்தான் காற்று மாசு அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மாசின் அளவு ஆண்டுக்காண்டு இது 5 முதல் 10 மடங்கு அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக காற்று மாசுபாட்டுக்கு சீனாவே முக்கியக் காரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
இதற்கு அங்கு அதிகரித்துள்ள தொழிற்சாலைகள் எந்த விதமான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை என்றும் கூறுகிறது. வளரும் நாடுகளில்தான் உற்பத்தி நிறுவனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் அளவுக்கு அதிகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி காரணமாகத் தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாகியுள்ளன. அதுபோல கடந்த இருபது ஆண்டுகளில் புதுடெல்லியின் நொய்டா, சென்னை, புணே, பெங்களூர், விசாகப்பட்டினம் போன்ற நகரங்கள் மிகப்பெரிய தொழில் மண்டலங்களாக உருவாகியுள்ளன. உலக அளவில் மிக மோசமாக காற்று மாசு கொண்ட நாடாக சீனாவும், இந்தியா அதை நோக்கி வளர்ந்து வருவதாகவும் ஒரு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில்துறை இழப்புகள்
காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக தொழில்துறை இருந்தாலும் இதனால் தொழில்துறையினரும் மிகப் பெரிய பொருளாதார இழப்புகளை சந்திக்கத்தான் செய்கின்றனர். 2005 ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை சீனா 11,200 கோடி டாலர் இழப்பை சந்தித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் சுற்றுச்சூழல் ஏஜென்ஸி யின் புள்ளிவிவரங்கள்படி மின்சார உற்பத்தியின் மூலம் உருவாகும் காற்று மாசுபாட்டின் மதிப்பு 6,63,479 மில்லியன் யூரோ. விவசாயத் துறையும் 20,931 மில்லியன் யூரோ மதிப்புக்கு காற்று மாசை உருவாக்கியுள்ளது என கூறுகிறது. தொழில்துறை யினரின் இது போன்ற கட்டுப்பாடற்ற போக்குகளை யும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
உலக அளவிலான பொருளாதார சங்கிலியில் இணைந்துவிட்ட பிறகு ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் இழப்பு உள்நாட்டு பொருளாதார சூழலுக்கு ஆரோக்கியமானதல்ல. இதை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டியது அவசர அவசியமாகும்.
- maheswaran.p@thehindutamil.co.in