

சுவிட்சர்லாந்தை சேர்ந்த வங்கி கிரெடிட் சூயிஸ். உலகின் மிகப் பெரிய வங்கிகளில் இதுவும் ஒன்று. தற்போதுஇந்த வங்கி ஊடகங்களில் மிகவும் பரபரப்பான பேசு பொருளாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகசூயிஸ் வங்கி பங்குகளில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டு வருகிறது. 2008-ல் லேமன் பிரதர்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவாக உலகமே பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. கிரெடிட் சூயிஸ் விவகாரத்திலும் அதைப் போலவே பின்விளைவுகள் ஏற்படலாம் என்பது பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
கிரெடிட் சூயிஸ் தற்போது 50-க்கும் மேற்பட்டநாடுகளில் செயல்பட்டு வருகிறது. 22.5 பில்லியன் டாலர் ஆண்டு வருவாயை கொண்டிருக்கும், இந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு இதன் நிர்வாகத்தின் கீழ் 1.1 ட்ரில்லியன் டாலர். இந்த வங்கி கடந்த 7 காலாண்டுகளில் 5 காலாண்டுகளுக்கு நஷ்ட கணக்கை காட்டியுள்ளது. 50,000 ஊழியர்கள் பணிபுரிந்த இந்த வங்கியில் சமீபத்தில் 5,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு மேலும் பல திறமையான ஊழியர்கள் வங்கியிலிருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உலக அளவில் மிகவும் செல்வாக்கான வங்கியாக அறியப்பட்டு வந்த கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு மதிப்பு நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதன் பங்கு விலை சுமார் 60 சதவீத சரிவை சந்தித்துள்ளது. கிரெடிட் சூயிஸின் இந்த சரிவுக்கு அந்த வங்கியின் சிடிஎஸ் (CDS -Credit Default Swaps) என சொல்லப்படும் கடன் கொடாநிலை பரிமாற்றங்கள்தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தவங்கியின் சிடிஎஸ் அதிகரித்திருக்கிறது. இது, 2008-ல் நடந்த உலகளாவிய நிதி நெருக்கடிக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது.
அது என்ன சிடிஎஸ்? - அரசு எப்படி கடன் பத்திரங்களை வெளியிடுகிறதோ அதேபோல தனியார் நிறுவனங்களும் கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. உதாரணமாக ஒரு நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்வோம். தனி ஒருவரிடமிருந்து இவ்வளவு பெரிய தொகையை வசூலிக்க முடியாது. எனவே, இந்த100 கோடி ரூபாயை பொதுமக்கள் 10,000 பேரிடம்தலா 1 லட்சம் என்கிற வகையில் கடன் பத்திரங்களாக கொடுத்து விட்டு அவர்களிடமிருந்து நிறுவனம் 1 லட்ச ரூபாயை பெறும். இந்த 1 லட்சரூபாய்க்கு அந்நிறுவனம் 6 சதவீதம்வட்டி தருவதாகவும், முதலீட்டைஐந்து வருட காலத்தில் திருப்பித் தருவதாகவும் வைத்துக் கொள்வோம். இப்போது நிறுவனத்திடமிருந்து 1 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரத்தை வாங்கிய நபருக்கு, பொருளாதார வீழ்ச்சி அல்லது அது போன்ற வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக திடீரென நிறுவனம் பணத்தை திரும்ப தராது என்கிற கவலை வரும்போது இன்சூரன்ஸ் நிறுவனத்தை பற்றிய கவனம் வருகிறது. அவர் தன் வசமுள்ள கடன் பத்திரத்துக்கு காப்பீடு செய்கிறார்.
இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தக் கடன் பத்திரத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதாக உறுதி செய்து அதற்கு இன்சூரன்ஸ் கட்டணமாக 2% வசூலிக்கிறது என வைத்துக் கொள்வோம். நிறுவனம் பணத்தை திருப்பித் தராதபட்சத்தில், கடன் பத்திரத்துக்கு காப்பீடு பெற்றவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் 1 லட்ச ரூபாயை வழங்கிவிடும். இவ்வாறாக நிறுவனம் கடனை திருப்பி செலுத்த முடியாவிட்டால், கடன் பத்திரத்துக்கு காப்பீடு செய்தவருக்குஇன்சூரன்ஸ் நிறுவனம் அந்த தொகையை வழங்கும் என்பதை உறுதி செய்வதுதான் சிடிஎஸ் எனப்படுகிறது. இதில் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழலாம்.இந்த கேள்விக்கான விடை சுலபமானதுதான். 15 ஆயிரம் பேர் தங்களது 1லட்ச ரூபாய் கடன் பத்திரத்துக்கு இன்சூரன்ஸ் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவர்கள் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனம் பெறக்கூடிய தொகை ரூ.3 கோடி. காப்பீடு செய்தவர்களில்100 பேர் நிகழ்தகவின் அடிப்படையில் பணத்தை இழப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கக்கூடிய இழப்பீட்டுத் தொகையின் மதிப்பு 1 கோடி ரூபாய்தான். இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.2 கோடி.
லேமன் பிரதர்ஸ் திவாலான கதை: 2008-ல் அமெரிக்காவில் பெரும்பாலானோருக்கு வீட்டுக்கடன் தேவைப்பட்டது. அதேபோல பல்வேறு வங்கிகளும் வீட்டுக் கடன் வழங்குவதற்கு தயாராகஇருந்தன. உதாரணமாக, 5 பேருக்கு வீட்டுக்கடன் தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம். தலா 20 லட்சம் என 1கோடி ரூபாய் தேவை. இதற்கு வட்டி 6%. இப்போது வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது சொந்தப் பணத்தைக் கொடுக்காமல் வேறு ஒருவரிடம் இருந்து இந்த பணத்தை கடனாகப் பெற்றுக்கொண்டு அதற்கு 3% வட்டி தருவதாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். குறைந்த வட்டியில் கடனாகக் கிடைத்த இந்த ஒரு கோடி ரூபாயை ஐந்து பேருக்கு பிரித்துக் கொடுத்து விடுவார்கள். இப்போது வங்கிக்கு நிகர லாபம் என்பது 3% வட்டி. முதலீட்டாளரை பொறுத்தவரை கடனுக்கானஉத்தரவாதத்தை வங்கி தருவதால் பணம் திரும்பி வந்துவிடும் என்று நம்புகிறார். கடன் வாங்குவோர்களுக்கும் சுலபமாக பணம் கிடைத்து விடுகிறது. வங்கியைப் பொறுத்தவரை ஒரு பைசாகூட சொந்த முதலீடு செய்யாமல் லாபம் ஈட்டுகிறது.
இவ்வாறு வங்கிகள் அளவுக்கு அதிகமாக வீட்டுக் கடனை வாரி இறைத்தன. ஒரு கட்டத்தில் வங்கி அதிகாரிகளுக்கு பயம் வந்துவிட்டது. உடனே அவர்கள் தங்கள் வங்கிகள் வழங்கிய கடனுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களை நாடினார்கள். ஒரு கோடி ரூபாய் கடனுக்கு, ஒரு கோடி ரூபாய்மதிப்புள்ள சொத்தை வைத்து (Mortgage Backed Security) பிணைய அடிப்படையில் 2 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையை கட்டி விட்டார்கள். ஒரு வேளை வீட்டுக் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி செலுத்த முடியாவிட்டால் இன்சூரன்ஸ் நிறுவனம் வங்கிக்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக தந்துவிடும். இப்படி வங்கிகளுக்கு காப்பீடு வழங்கிய நிறுவனங்களில் ஒன்றுதான் லேமன் பிரதர்ஸ். இதுதான் 2008ம் ஆண்டில் நடந்தது. இந்தஇன்சூரன்ஸ் காப்பீட்டை வழங்கிய நிறுவனங்கள் ஏஐஜி, பியர் ஸ்டெர்ன், லேமன் பிரதர்ஸ் வங்கி ஒரு கோடி ரூபாய் கடனை வழங்கினாலும் எந்த ரிஸ்க்கும் எடுக்கவில்லை. ஏனென்றால் அந்தக் கடனுக்கு அவர்கள் காப்பீட்டை எடுத்திருக்கிறார்கள். வெறும் ஒரு சதவீதத்தில் காப்பீடு எடுத்துவிட்டு, யார் வந்தாலும் வங்கிகள் வீட்டுக் கடன்களை வாரி வாரி வழங்க ஆரம்பித்தன. பலரும் கோடிக்கணக்கான ரூபாய்களை வீட்டுக் கடன்களாக பெற்றனர்.
வீடுகள் அதிக அளவில் கட்டப்பட்டதால், வீடுகளுக்கான தேவையும் வாடகையும்குறைய ஆரம்பித்தது. கடனாளிகள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தடுமாற ஆரம்பித்தார்கள். பணம் கொடுத்த வங்கிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. வங்கிகள் தங்களது காப்பீட்டை பெறுவதற்காக இன்சூரன்ஸ் கம்பெனிகளை நெருக்கத்தொடங்கினார்கள். அப்போது அதைவிட மிகப்பெரிய பிரச்சனை உருவானது. காப்பீடு வழங்க வேண்டிய தொகைக்கும், காப்பீட்டு கட்டணமாக வாங்கிய தொகைக்கும் மிகப்பெரிய இடைவெளி காணப்பட்டது. இதனால், இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்களால் கொடுக்க முடியவில்லை. இந்த இடத்தில், இன்சூரன்ஸ் கம்பெனிகளின் அடிப்படை இயக்க தத்துவமான நிகழ்தகவு தவிடுபொடியானது. இந்தத் தருணத்தில் வங்கிகளுக்கு இழப்பீடு வழங்க தன் சொத்துக்களை விற்கும் நிலைக்குஆளானது லேமன் பிரதர்ஸ். சொத்துகளை விற்றும் வங்கிகளுக்கான காப்பீட்டை லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தால் வழங்க முடியவில்லை. இறுதியில் அந்நிறுவனம் திவால் ஆனாது.
லேமன் பிரதர்ஸ் நிறுவனம் தனது பங்கு மதிப்பைப் போல கிட்டத்தட்ட நான்கு மடங்கிற்கும் அதிகமான அளவில் காப்பீட்டை மேற்கொண்டதுதான் இப்பிரச்சனைக்கு மூல காரணம். விஷயம் இதோடு முடியவில்லை. இதன் சங்கிலித் தொடராக கடன் கொடுத்த மற்ற வங்கிகளும், முதலீட்டாளர்களும் திவால் நிலைக்கு ஆளாகினர். இந்த நிகழ்வால் பல லட்சம் பேர் வேலைஇழந்ததுடன், இந்த நூற்றாண்டின் மிகப்பெரும்பொருளாதார சரிவுக்கும் வழி வகுத்தது. சிடிஎஸ்பரவல் எண் விகிதாச்சாரம் திவாலுக்கு ஆளானலேமன் பிரதர்ஸை போலவே கிரெடிட் சூயிஸுக்கும் இருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.கிரெடிட் சூயிஸ் நிதிநிலை மோசமானதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. கடந்த ஓராண்டில் சிலதவறான சில நிர்வாக முடிவுகளை அந்த வங்கிஎடுத்தது. கிரீன்ஸில், ஆர்க்கிகோஸ் ஆகிய இரு நிறுவனங்களில் மேற்கொண்ட தவறான முதலீடுகள் மூலம் சுமார்14 பில்லியன் டாலர்களுக்கு மேல்கிரெடிட் சூயிஸ் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.
“வங்கியின் பங்குச் சந்தை மதிப்பையும், வங்கியின் ஸ்திரத் தன்மையையும் இணைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம். நிறுவனத்தின் நிதிநிலைமை நன்றாகவே இருக்கிறது. வங்கியில்சீர்திருத்தங்கள் மேற்கொண்டு மீண்டும் லாபப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான திட்டங்கள்இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்’’ என்கிறார் சூயிஸ் வங்கியின் சிஇஓ உல்ரிக் கோர்னர். எனினும், ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகப் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கும் நிலையில், இது போன்ற நிகழ்வுகள் கூடுதல் அச்சுறுத்தலாகவே உள்ளது. - somasmen@gmail.com