

வேட்டியைக் கண்டுபிடித்தது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதில் வித்தியாசம் காட்டி, வெற்றியை ஈட்டியவர் ‘ராம்ராஜ் காட்டன்' நிறுவனர் கே.ஆர். நாகராஜன். வேட்டிக்கு ஒரு பிராண்ட் உருவாக்கி விற்பனை செய்த முதல் நிறுவனம். இன்றைக்கு 40-ம் ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைத்துள்ளது.
ராம்ராஜ் காட்டன் என்றாலே வேட்டிதான். தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்றைக்கு அடையாளமாகி விட்டது. வேட்டி என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தயாரிப்பு இல்லை. நாகரீகம் வளர்வதற்கு முன்பு, பருத்தி இலை, தழை, மரப்பட்டைகளை அணிந்து வாழ்ந்த மனித சமூகம், பருத்தி உற்பத்தி செய்து, அதில் இருந்து நூல் எடுத்து அணிந்த முதலாடை வேட்டியாகத்தான் இருக்கும். பழங்கால சிலைகள், பழைய ஓவியங்களில் வேட்டி இருக்கும். பழைய மன்னர்கள் தொடங்கி பலரும் வேட்டியை ஆடையாக அணிந்துள்ளனர். கேரளாவில் பெண்கள் வேட்டி கட்டும் பழக்கம் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியடிகள், வ.உ.சிதம்பரனார், பாரதியார் என பலரும் வேட்டி அணிந்தவர்கள்தான். நாகராஜனுக்கு தற்போது வயது 63. அவிநாசி அருகே கைகாட்டிபுதூரில் பிறந்த நாகராஜன், 10-ம் வகுப்பு முடித்த கையோடு ஜவுளி தொழிலுக்கு வந்துவிட்டார். இன்று அவர் பலருக்கும் வழிகாட்டியாக திகழ்கிறார்.
சாதாரண கிராமத்தில் பிறந்து, இன்று இந்திய அளவில் வேட்டிப் பிரிவில் முன்னணி பிராண்டாக ராம்ராஜ் கட்டனை உருவாக்கியது எப்படி? என்பது குறித்த தனது பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்: நான் வேட்டி தயாரிப்பை தொடங்கிய நேரம் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி பெற்ற நேரம். பலரும் எதிர்மறை எண்ணத்துடன் இந்த தொழில் எதற்கு என்றார்கள். ஆனால், நான் நேர்மறையாக யோசித்தேன். தமிழர்களின் அடையாளமான வேட்டியை, நாம் வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைத்தேன். தமிழர்களின் கலாச்சாரம், நெசவாளர்களின் வாழ்வாதாரம் மீதான அக்கறைதான் இந்தத் தொழிலில் இன்றைக்கும் என்னை தொடர்து தொய்வின்றி இயங்க வைக்கிறது.
வேட்டி கட்டியவர்கள் பாமரர்கள் என்ற எண்ணம் இருந்தது. அதற்கேற்ப வேட்டிகளும் தரமில்லாமல்தான் தயாரிக்கப்பட்டன. இதுபோன்ற விஷயங்கள் பலரையும் பேன்ட்டுக்கு மாற்றியது. இந்தச் சூழலில், தரமான வேட்டியைத் தயாரிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படத் தொடங்கினேன். நெசவாளர்களின் வறுமையும், வேட்டி மீது பொதுத்தளத்தில் இருந்த இளக்காரப் பார்வையும்தான் நான் வேட்டித் தொழிலில் தீவிரமாக களமிறங்க உந்தியது. வேட்டி நெய்பவருக்கு மீட்டருக்கு 2 ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. நான் அதை 4 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தேன். இதை கடைக்காரர்களிடம் சொல்லியபோது முதலில் அவர்கள் தயங்கினார்கள். நெசவாளர்களின் வாழ்வையும் தரமான வேட்டியின் தேவையையும் அவர்களிடம் விளக்கியபோது மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். எந்த இடங்களிலெல்லாம் வேட்டி கட்டுவது இளக்காரமாகப் பார்க்கப்பட்டதோ, அங்கெல்லாம் பெருமித உணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டேன்.அதுதான் ‘சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்’ விளம்பரம்!
1921-ம் ஆண்டு செப். 22-ம் தேதி மதுரை வந்திருந்த தேசத் தந்தை மகாத்மா காந்தி, வறுமையைப் பார்த்து தனது ஆடையை துறந்து வேட்டிக்கு மாறினார். சுதந்திரப் போராட்டத்துக்கு அவர் முதன் முதலாக பயன்படுத்திய ஆயுதம் அகிம்சை. 2-வது ஆயுதம் வேட்டி. 2003-ம் ஆண்டில், கோவையில் வேட்டிக்கு தனி ஷோரூம் ஏற்படுத்தினோம். ‘மதிப்பிற்குரியவர்களுக்கு ராம்ராஜ்’ என தமிழகம், இந்தியா மட்டுமின்றி, இன்றைக்கு உலகம் முழுவதும் வேட்டி வியாபாரம் களைகட்டி வருகிறது. தமிழை மக்கள் படிக்கவில்லை என்றால், அது படிக்காதவர்களின் தவறு இல்லை. மக்கள் வேட்டி கட்டவில்லை என்றால், நாம் நம் குழந்தைகளுக்கு அதைக் கற்றுத்தரவில்லை. ஆனால் இன்றைக்கு குழந்தைகள் கூட, திருமண விழாக்களில் வேட்டி கட்டுகிறார்கள். அதற்கு காரணம் நாம் தற்போது பழக்கியதுதான்.
விமானத்தில் செல்லும்போது அங்கு அணிந்திருக்கும் ஆடையை பார்ப்பேன். சிலர் மட்டுமே வேட்டியை கட்டியிருப்பார்கள். அனைவரையும் நம் கலாச்சாரமான வேட்டியை கட்ட வைக்க வேண்டும் என்ற இலக்கோடுதான் தொடர்ந்து பயணிக்கிறேன். விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டினர் கூட, சிலர் வேட்டி கட்டுகிறார்கள். சிலர் வேட்டியை வாங்கிக்கொண்டு அயல்நாட்டுக்கு செல்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் விருப்பத்தை உணர்ந்து.. வேட்டியை துண்டு, பெட்ஷீட் என பல்வேறு வகையிலும் பயன்படுத்தலாம். ஒரு மனிதரின் பிறப்பு தொடங்கி இறப்பு வரை அனைத்து காலங்களிலும் வேட்டியின் பங்கு உள்ளது. கேரளாவில் வெள்ளம் வந்தபோதும் சரி, கரோனா தொற்று நேரத்திலும் எங்களது நெசவாளர்கள் உற்பத்தியை நிறுத்தவில்லை. நெசவாளர்களை தொடர்ந்து பாதுகாக்கிறோம். 50 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் எங்களுடன் பிணைப்பில் உள்ளன. நிறுவனத்தில் 12,500 தொழிலாளர்கள் உள்ளனர். 10 ஆயிரம் டீலர்கள் மற்றும் 225 தனி ஷோரூம்கள் என தொடர்ச்சியாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 24 மணிநேரம் இதே சிந்தனையாக இருப்பதால், இன்று ஏற்றுமதியை நோக்கி நகர்ந்துள்ளோம். இணையத்தில் இன்றைக்கும் தீபாவளியை முன்னிட்டு வேட்டிக்கான ஆர்டர்கள் குவிகின்றன. தொழில் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் நிறைய சவால்களை எதிர்கொண்டேன். சாண் ஏறினால் முழம் சறுக்கியது. அந்த அனுபவங்களை படிப்பினையாக்கி, அவற்றில் இருந்து வெற்றிகரமான ஒரு தொழிலாக மாற்றி உள்ளோம். சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியின் சின்னமான ‘செஸ் தம்பி’ அணிந்திருக்கும் கருப்பு, வெள்ளை சதுரங்க டிசைன் வேட்டி நாங்கள் வடிவமைத்ததுதான். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ராம்ராஜ் வேட்டி அணிந்து செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் பங்கேற்றது வரலாற்றுத் தருணங்கள்.
இந்த 40 ஆண்டுகால பயணத்தில் 2,500-க்கும் மேற்பட்ட வேட்டி ரகங்களை, நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வைத்து, மக்களின் மனதைப் படித்து, அவற்றில் இருந்து புதிய, புதிய ரகங்களை தொடர்ந்து உருவாக்கி வெற்றி பெறுகிறோம். இது வேட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அல்ல. நாள்தோறும் புதியன பல கற்கும் கல்விக்கூடமாகத்தான் நினைக்கிறேன். தீபாவளிக்கு திரிசூல் வேட்டிகள் அறிமுகம் செய்துள்ளோம். வெள்ளிநிற ஜரிகை கொண்ட வேட்டி கல்வியின் அடையாளமாகவும், தங்கநிற ஜரிகை வேட்டி செல்வத்தின் அடையாளமாகவும், செம்பு நிற ஜரிகை வேட்டி வீரத்தின் அடையாளமாகவும் வடிவமைத்துள்ளோம். மக்களின் விருப்பத்தை உணர்ந்து புதிய ரகங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். இதுவே, எங்களின் வெற்றிக்கு அடித்தளம். நெசவாளர்களின் பொருளாதாரமும், வேட்டிக்கு நேர்ந்த அவமானமும் தான், இந்த தொழிலில் இன்றைக்கு எங்கள் நிறுவனம் கொடிகட்டி பறக்க முக்கியக் காரணம்.